Advertisement

இந்திய அணி 'நம்பர்–1'

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி, 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி, 10வது இடத்துக்கு முன்னேறியது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ள இந்திய அணி, 122 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை பிடித்தது. இதனையடுத்து தென் ஆப்ரிக்க அணி, 118 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

செஞ்சூரியனில், நாளை நடக்கவுள்ள 6வது மற்றும் கடைசி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றால் கூட இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து இல்லை. கடைசி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி, 121 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்க அணி, 119 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

ஒருவேளை கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். தென் ஆப்ரிக்க அணி, 117 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடரும். ஒருநாள் தொடருக்கு முன், இந்திய அணி, 119 புள்ளிகளுடன், 2வது இடத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்க அணி, 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

ஆப்கன் அபாரம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என, முன்னிலை வகிக்கும் ஆப்கானிஸ்தான் அணி, 53 புள்ளிகளுடன், 10வது இடத்துக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே அணி, 52 புள்ளிகளுடன் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மீதமுள்ள 2 போட்டிகளில், ஒன்றில் வென்றால் கூட ஆப்கானிஸ்தான் அணி, 10வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement