Advertisement

ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சை: சிக்கினார் ஜப்பான் வீரர்

பியாங்சங்க்: தென் கொரியாவில் உள்ள பியாங்சங்க் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்' பிரிவில் ஜப்பான் அணியில் கெய் சாய்டோ பங்கேற்பதாக இருந்தது. போட்டிக்கு முன் இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், சாய்டோ தடை செய்யப்பட்ட 'ஆக்டலோசாமித்' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இவர் உடனடியாக விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தவிர, முழு விசாரணை முடியும் வரை ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.



முதல் நட்சத்திரம்

இதன்மூலம், இம்முறை குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்ட முதல் நட்சத்திரமானார். தவிர, ஒட்டுமொத்த குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்த சர்ச்சையில் சிக்கிய முதல் ஜப்பான் நட்சத்திரம் ஆனார். விளையாட்டு தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி சாய்டோ விளக்கம் தந்துள்ளார்.

எதற்கான மருந்து

கெய் சாய்டோ, 21, கடந்த 2013, 2014ல் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 3 ஆயிரம் மீ., 'ரிலே' பிரிவில் பங்கேற்றிருந்தார். சாய்டோ பயன்படுத்திய மருந்து, 'எபிலிப்சி' என்ற நரம்பியல் மற்றும் இருதயம் தொடர்பான நோய்களுக்காக வழங்கப்படுகிறது.

இது குறித்து சாய்டோ கூறுகையில்,'' எப்படி தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்துக்கொண்டேன் என தெரியவில்லை. எனது அறியாமையை உறுதி செய்ய போராடி வருகிறேன்,'' என்றார்.

சோலி கிம் சாதனை

பெண்களுக்கான 'ஸ்னோபோர்டு' பனிச்சறுக்கு 'ஹாப்பைப்' பிரிவில் அமெரிக்காவின் சோலி கிம் அசத்தினார். சிறப்பாக செயல்பட்ட இவர் தனக்கு தரப்பட்ட மூன்று வாய்ப்பில் அதிகபட்சமாக 98.25 புள்ளிகள் எடுத்தார். இதன் மூலம், முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கம் கைப்பற்றினார். தவிர, பனிச்சறுக்கு போட்டியில் இளம் வயதில் (17 வயது, 296 நாள்) தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், சுவிட்சார்லாந்தின் மிக்கேலா பிக்னி, பனிச்சறுக்கில் (1984, யுகோஸ்லேவியா, 17 வயது 315 நாள்) தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement