Advertisement

ஐ.பி.எல்., ஏலத்தில் 1122 வீரர்கள்

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 1122 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடருக்கான 11வது சீசன் வரும் ஏப். 4ல் துவங்குகிறது. வரும் மே 27 வரை நடக்கவுள்ள இத்தொடரில், சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம், பெங்களூருவில் வரும் 27, 28 ல் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள ஜன. 12ம் தேதி கடைசி நாளாக பி.சி.சி.ஐ., அறிவித்தது.

இந்நிலையில் விருப்பம் தெரிவித்த வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ., வெளியிட்டது. மொத்தம் 1122 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 281 வீரர்களுடன், உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிய 838 வீரர்களும் அடங்குவர்.

இந்தியா சார்பில் அஷ்வின், யுவராஜ் சிங், காம்பிர், ரகானே, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட 778 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதன்முறையாக ஏலத்தில் பங்கேற்கவுள்ளார். இவரை தவிர, கடந்த முறை அதிக விலைக்கு ஒப்பந்தமான இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, டுபிளசி, மார்னே மார்கல், குயின்டன் டி காக், ரபாடா, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், வாட்சன், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட 282 வெளிநாட்டு வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். ஐ.சி.சி., உறுப்பு நாடுகளை சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களில், அதிகபட்சமாக ஆஸ்திரேலியா சார்பில் 58, தென் ஆப்ரிக்கா சார்பில் 57 பேர் இடம் பெற்றள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் (39 பேர்), இலங்கை (39), நியூசிலாந்து (30), இங்கிலாந்து (26), ஆப்கானிஸ்தான் (13), வங்கதேசம் (8), ஜிம்பாப்வே (7), அயர்லாந்து (2), அமெரிக்கா (2) சார்பில் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement