Advertisement

புரோ மல்யுத்தம்: சுஷில் குமார் விலகலா

புதுடில்லி: காயம் காரணமாக புரோ மல்யுத்த தொடரில் சுஷில் குமார் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் புரோ மல்யுத்த தொடரின் மூன்றாவது சீசன் தற்போது நடக்கிறது. இதற்கான டில்லி அணியில் இடம் பெற்றுள்ளார் சுஷில் குமார். ஒலிம்பிக்கில் வெண்கலம் (2008), வெள்ளி (2012) என, இரு பதக்கம் வென்றவர்.

சமீபத்தில் டில்லியில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் அசத்திய இவர், வரும் ஏப்ரல் 4--15ல் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுக்கு (கோல்டு கோஸ்ட், ஆஸி.,) தகுதி பெற்றார். அப்போது, சுஷில் குமார்-சக வீரர் ராணா ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, சுஷில் குமார் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனால், தற்போதைய புரோ மல்யுத்த தொடரில், டில்லி, ராணா இடம் பெற்ற வீர மராத்தா அணிகள் மோதும் போட்டி (வரும் 21ம் தேதி), பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மோதல், வழக்கு என, இருப்பதால், இத்தொடரில் இருவரும் மோதிக் கொள்ள வேண்டாம் என, பலர், 'அட்வைஸ்' செய்துள்ளனர்.

தற்போது, காயம் காரணமாக புரோ மல்யுத்த தொடரில், சுஷில் குமார் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து சுஷில் குமார் கூறுகையில்,'' பயிற்சியின் போது காயம் ஏற்பட்டு விட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளேன். உடற்தகுதி பெற முயற்சித்து வருகிறேன். காயம் சரியானதும் களமிறங்குவேன்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement