Advertisement

தொடரை கைப்பற்றியது நியூசி.,: 74 ரன்னுக்கு சுருண்டது பாக்.,

டுனிடின்: மூன்றாவது ஒருநாள் போட்டியில், டிரண்ட் பவுல்ட் 'வேகத்தில்' மிரட்ட, 74 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, 183 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி டுனிடினில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த நியூசிலாந்து அணிக்கு கோலின் முன்ரோ (8) ஏமாற்றினார். மார்டின் கப்டில் (45) ஆறுதல் தந்தார். பின் இணைந்து பொறுப்பாக ஆடிய கேப்டன் வில்லியம்சன் (73), ராஸ் டெய்லர் (52) அரைசதம் கடந்தனர். டாம் லதாம் (35) ஓரளவு கைகொடுத்தார்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில், 257 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பெர்குசன் (6) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ருமான் ரயீஸ், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பவுல்ட் அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, டிரண்ட் பவுல்ட் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' அசார் அலி (0), பகார் ஜமான் (2), முகமது ஹபீஸ் (0) அவுட்டாகினர். பாபர் ஆஜம் (8), 'ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த சோயப் மாலிக் (3), ஷதாப் கான் (0), பஹீம் அஷ்ரப் (10), ஹசன் அலி (1) சொற்ப ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து அசத்திய பவுல்ட் பந்தில் முகமது ஆமிர் (14), ருமன் ரயீஸ் (16) போல்டாகினர்.

பாகிஸ்தான் அணி 27.2 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. கேப்டன் சர்பராஸ் அகமது (14) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 5, முன்ரோ, பெர்குசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்தின் பவுல்ட் வென்றார். நான்காவது போட்டி, வரும் 16ல் ஹாமில்டனில் நடக்கவுள்ளது.



3வது குறைந்தபட்சம்

நியூசிலாந்துக்கு எதிராக 74 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான் அணி, ஒருநாள் போட்டியில் தனது 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஏற்கனவே, கடந்த 1992ல் அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 74 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு முறை (43, 71 ரன், 1993) தனது மோசமான ஸ்கோரை பெற்றது.

57 முறை

நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், ஒருநாள் அரங்கில் தனது 40வது அரைசதமடித்தார். ஏற்கனவே இவர், 17 சதமடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 57 முறை, 50 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்துள்ளார். இதன்மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகமுறை (57), 50 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீபன் பிளமிங் (8 சதம், 49 அரைசதம்), நாதன் ஆஷ்லே (16 சதம், 41 அரைசதம்) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement