Advertisement

ரஷ்யா தடைக்கு எதிர்ப்பு

சியோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு, தென் கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில், அந்நாட்டு அரசும் ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இதனால், ரியோ ஒலிம்பிக்கில் (2016) ரஷ்ய தடகள நட்சத்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, குளிர்கால ஒலிம்பிக்கில் (தென் கொரியா, பிப்.9-25, 2018) பங்கேற்கவும் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி பெறும் வீரர், வீராங்கனைகள் ஐ.ஓ.சி., கொடியின் கீழ் விளையாடலாம்.

பங்களிப்பு தேவை:

இது குறித்து தென் கொரியா விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,' எங்கள் மண்ணில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ரஷ்யாவுக்கு மட்டும் தடை விதித்திருப்பது ஒலிம்பிக் உத்வேகத்தை குறைக்கும். போட்டியை வெற்றிகரமாக நடக்க, இவர்களின் பங்களிப்பு தேவை,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுக்க மாட்டோம்:

இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில்,'' தென் கொரியாவில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்ய நட்சத்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, எங்கள் வீரர், வீராங்கனைகளை கலந்து கொள்ள வேண்டாம் என தடுக்க மாட்டோம். தனிப்பட்ட முறையில் விளையாட விரும்பினால் அனுமதி தருவோம்,'' என்றார்.

அமெரிக்கா சந்தேகம்:

ஐ.நா., சபைக்கான அமெரிக்க துாதர் நிக்கி ஹாலே கூறுகையில்,'' வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு குறித்து விவாதம் நடந்து கொண்டே உள்ளன. தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், எங்கள் விளையாட்டு நட்சத்திரங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இதனால், குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement