Advertisement

கோப்பை வெல்லுமா இந்திய அணி

ஐதராபாத்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 'டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் முடிவில், 1-1 என, தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

ஒரு நாள் தொடர் (4-1) மற்றும் முதல் 'டுவென்டி-20' போட்டியில் எளிதாக வென்ற இந்திய அணிக்கு, கவுகாத்தி தோல்வி, பெரும் 'ஷாக்' ஆக அமைந்து விட்டது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்கள் சொதப்பினர். பெஹ்ரன்டார்ப்பின் 'சுவிங்' பந்துவீச்சுக்கு இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள் வரிசையாக சரிந்தது பெரும் பலவீனம் தான். இதனால் இன்று தவான், ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் முதன் முறையாக 'டக்' ஆன, கேப்டன் கோஹ்லி, 'ஸ்டம்பிங்' ஆன 'சீனியர்' தோனி, இன்று எழுச்சி பெறுவர் என நம்பலாம். மணிஷ் பாண்டே கேதர் ஜாதவ் உள்ளிட்ட இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடிக்கின்றனர்.

உதவாத 'சுழல்':

பவுலிங்கில் பும்ரா, புவனேஷ்வர் குமார் சிறப்பாகவே செயல்படுகின்றனர். மற்றபடி 'சுழல்' தான் பெரிதும் ஏமாற்றி விட்டது. கவுகாத்தியில் அதிக ஈரப்பதம் இருந்ததால், பந்து கொஞ்சம் கூட சுழலுக்கு கைகொடுக்கவில்லை. தவிர, மோசமாக செயல்பட்ட சகாலுக்குப் பதில் இன்று, குல்தீப்புடன் சேர்ந்து அக்சர் படேல் வரலாம்.

பேட்டிங் அபாரம்:

'டுவென்டி-20' போட்டியில் 5 ஆண்டுக்குப் பின் இந்தியாவை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. கேப்டன் வார்னர், பின்ச் தவிர, ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது நல்ல விஷயம். தவிர, ஐ.பி.எல்., தொடரில் வார்னர், ஐதராபாத் அணிக்காக இங்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கைகொடுக்கும் எனத் தெரிகிறது. தவிர, பவுலிங்கில் ஆடம் ஜாம்பா விக்கெட் வீழ்த்த துவங்கி இருப்பதும், இந்த அணிக்கு சாதகமானது தான். கடந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரன்டார்ப், கூல்டர் நைல் ஜோடி இன்று தொல்லை தருமா என பொறுத்திருந்து காணலாம்.

மழை வருமா

போட்டி நடக்கும் ஐதராபாத்தில் இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். இரவு 7:00 மணிக்கு மேல், இடியுடன் கூடிய மழை வர 93 சதவீதம் வாய்ப்புள்ளது.

முதன் முறை

ஐதராபாத் ராஜிவ் மைதானத்தில் 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் நடந்தன. ஆடுகளம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஐ.பி.எல்., தொடரில் இங்கு போட்டிகள் நடந்த போதும், முதன் முறையாக சர்வதேச 'டுவென்டி-20' இன்று தான் நடக்கவுள்ளது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Viswanathan - Hyderabad,இந்தியா


    இந்தியா வெல்லும் என்று எதிர்பார்ப்போம். ராஹுல்க்கு இடம் கொடுக்காதது ஏன்? T ௨௦ யில் பாண்டியாவிற்கு பதிலாக ஆசிஷ் நெஹ்ராவிற்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement