Advertisement

ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி

பெங்களூரு: வரும் 2019ல் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (2019, ஜன.5- பிப். 1), 17வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான மூன்றாவது சுற்று தகுதி போட்டியில், இந்திய அணி 'ஏ' பிரிவில், கிர்கிஸ்தான், மக்காவ், மியான்மர் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

முதல் மூன்று போட்டிகளில் மியான்மர் (1-0), கிர்கிஸ்தான் (1-0), மக்காவ் (2-0) அணிகளை வென்ற இந்தியா (தரவரிசை 'நம்பர்-107'), நேற்று, பெங்களூருவில் நடந்த 4வது போட்டியில் மக்காவ் (182வது இடம்) அணியை மீண்டும் சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் போர்கஸ் (28), கேப்டன் சுனில் செத்ரி (60வது), ஜீஜே (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர். மக்காவ் வீரர் ஹாே மேன் பை (70வது நிமிடம்), ஒரு 'சேம்சைடு' கோல் அடித்தார். தவிர, மக்காவ் அணிக்கு நிக்கி (37வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

நான்காவது முறை:

இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 12 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து, ஆசிய கோப்பை தொடருக்கு 4வது முறையாக (1964, 1984, 2011, 2019) தகுதி பெற்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement