Advertisement

மீண்டும் பைனலில் சேப்பாக்கம் அணி: வெளியேறியது கோவை

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு இரண்டாவது முறையாக சேப்பாக்கம் அணி முன்னேறியது. மழையால் பாதிக்கப்பட்ட தகுதிச் சுற்று-2ல் 'வி.ஜே.டி.,' முறையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணி பரிதாபமாக வெளியேறியது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'நடப்பு சாம்பியன்' துாத்துக்குடி அணி, பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திருநெல்வேலியில் நடந்த தகுதிச்சுற்று-2ல் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த கோவை அணிக்கு சூர்யபிரகாஷ் (4) ஏமாற்றினார். அனிருத் சீதா ராம் (19), கேப்டன் முரளி விஜய் (24) நிலைக்கவில்லை. முகமது (30) ஆறுதல் தந்தார். கோவை அணி, 17.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும் ஹரிஷ் குமார் (32) ஓரளவு கைகொடுத்தார். கோவை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.

மழை குறுக்கீடு: சுலப இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு கோபிநாத் (12) சுமாரான துவக்கம் தந்தார். பின் இணைந்த தலைவன் சற்குணம் (33*), கார்த்திக் (38*) ஜோடி அபாரமாக ஆடியது. சேப்பாக்கம் அணி, 11 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 'வி.ஜே.டி.,' முறையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துாத்துக்குடியுடன் மோதல்

பைனலில் (ஆக. 20) துாத்துக்குடி, சேப்பாக்கம் அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த பைனலில் துாத்துக்குடி அணி, 122 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கத்தை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement