Advertisement

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

பர்மிங்காம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில், பவுலிங்கில் அசத்திய இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பர்மிங்காமில், முதல் டெஸ்ட் (பகலிரவு) நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 514/8 ('டிக்ளேர்'), வெஸ்ட் இண்டீஸ் 168 ('பாலோ-ஆன்') ரன்கள் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மீண்டும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. பாவெல் (10), கைல் ஹோப் (12), ஷாய் ஹோப் (4) ஏமாற்றினர். கிரெய்க் பிராத்வைட் (40) மட்டும் ஆறுதல் தந்தார். ஸ்டூவர்ட் பிராட் 'வேகத்தில்' ராஸ்டன் சேஸ் (24), ஷான் டவ்ரிச் (5), கேப்டன் ஹோல்டர் (0) அவுட்டாகினர்.

இரண்டாவது இன்னிங்சில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் பிராட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் வென்றார். இரண்டாவது டெஸ்ட் வரும் 25ல் லீட்சில் துவங்குகிறது.

3வது சிறந்த வெற்றி

பர்மிங்காம் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, டெஸ்ட் அரங்கில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது 3வது சிறந்த இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே, லீட்ஸ் (2007, இன்னிங்ஸ் மற்றும் 283 ரன்கள்), ஓவல் (1957, இன்னிங்ஸ் மற்றும் 237 ரன்கள்) டெஸ்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து அணி சிறந்த வெற்றியை பதிவு செய்திருந்தது.

19 விக்கெட்

மூன்றாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை 41/1 ரன்கள் என்ற நிலையில் துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 9, இரண்டாவது இன்னிங்சில் 10 என ஒரே நாளில் மொத்தம் 19 விக்கெட்டுகளை இழந்தது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement