Advertisement

மண்ணில் விழுந்த 'மின்னல்': சோகத்துடன் விடைபெற்ற போல்ட்

லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் ஜமைக்காவின் போல்ட் காயத்தால் பாதியிலேயே சரிந்தார். தனது தடகள வாழ்க்கையை பதக்கம் இல்லாமல் சோகத்துடன் முடித்தார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 4*100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனல் நடந்தது. இதில் 'மின்னல் வேக மனிதன்' போல்ட், ஜூலியன், யோகன் பிளேக், ஒமர் அடங்கிய ஜமைக்கா அணி பங்கேற்றது. தடகள அரங்கில் போல்ட் பங்கேற்கும் கடைசி போட்டி இது என்பதால் அரங்கில் 60 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர்.

காயம் செய்த மாயம்: ஜமைக்கா சார்பில் மூன்றாவது வீரராக ஓடிய பிளேக்கிடம் இருந்து போல்ட் 'பேட்டனை' பெற்றார். ஓட்டத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டிய நிலையில் சீறிப்பாய்ந்தார். எல்லைக் கோட்டை எட்ட 30 மீ., துாரம் இருந்த நிலையில், காயம் வினையாக மாறியது. திடீரென போல்டின் இடது தொடையின் பின்பகுதியில் வலி ஏற்பட்டது. தடுமாறிய போதும் மனம் தளரவில்லை. வலி அதிகமாக அடுத்த சில வினாடிகளில் கீழே விழுந்தார். இதை கண்ட ரசிகர்களும் சோகத்தில் உறைந்தனர். உடனடியாக எழு முடியாததால், ஓட்டத்தை முழுமையாக முடிக்கவில்லை.

இதில் பிரிட்டன் அணி தங்கம் வென்றது. காட்லின் அடங்கிய அமெரிக்கா வெள்ளியும், ஜப்பான் வெண்கலமும் கைப்பற்றியது.

காயத்தால் அவதிப்பட்ட போல்டிற்கு, 'வீல் சேர்' கொண்டு வரப்பட்டது. ஆனால், சக வீரர்கள் உதவியுடன் நடந்தே சென்றார். 100 மற்றும் 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்த போல்ட், கடைசி போட்டியில் பதக்கம் இல்லாமல் தனது தடகள வாழ்க்கையை சோகத்துடன் முடித்தார்.

போல்டின் காயத்திற்காக எம்.ஆர்.ஐ., 'ஸ்கேன்' எடுக்கப்பட உள்ளது. இதன்பின்பே, காயத்தின் தன்மை தெரிய வரும்.

ரசிகர்களுக்கு நன்றி

ஒலிம்பிக்கில் 8 தங்கம், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 11 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் (100 மீ., லண்டன், 2017) தடகள அரங்கிலிருந்து விடை பெற்றார். போல்ட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில்,' எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தி ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி,' என, தெரிவித்துள்ளார்.

மூன்று உலக சாதனை

கடந்த 2009ல் பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., (9.58 வினாடி) மற்றும் 200 மீ., (19.19 வினாடி) ஓட்டத்தில் பந்தய துாரத்தை 'மின்னல் வேகத்தில்' கடந்த உசைன் போல்ட், புதிய உலக சாதனை படைத்தார். இதேபோல, 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் 4*100 மீ., 'ரிலே' ஓட்டத்தில் (36.84 வினாடி), போல்ட் இடம் பெற்றிருந்த ஜமைக்கா அணி, புதிய உலக சாதனை படைத்தது.

22 பதக்கம்

மூன்று (2008, 2012, 2016) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உசைன் போல்ட், மொத்தம் 8 தங்கம் வென்றார். ஆறு முறை (2007, 2009, 2011, 2013, 2015, 2017) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற இவர், 11 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் கைப்பற்றினார். இதன்மூலம் ஒலிம்பிக், உலக தடகளத்தில் சேர்த்து மொத்தம் 22 பதக்கங்களை அள்ளினார்.

மோ பராவுக்கு வெள்ளி

5000 மீ., ஓட்டத்தின் பைனலில் பிரிட்டன் வீரர் மோ பரா பங்கேற்றார். இப்போட்டியுடன் தடகள அரங்கிலிருந்து இவர் ஓய்வு பெறுவதால், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், பந்தய துாரத்தை 13 நிமிடம் 33:22 வினாடியில் கடந்த இவர் வெள்ளி வென்றார். தங்கம், வெண்கலம் முறையே எத்தியோப்பியாவின் முக்தர், அமெரிக்காவின் சிலிமோ கைப்பற்றினர்.

இத்தொடரின் 10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற மோ பரா, 4 ஒலிம்பிக் தங்கம் கைப்பற்றி உள்ளார். உலக தடகள அரங்கில் 6 தங்கம், 2 வெள்ளியுடன் தற்போது ஓய்வு பெற்றார்.

தேவிந்தர் ஏமாற்றம்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் தேவிந்தர் சிங் பங்கேற்றார். அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 80.02 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர் 12வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

குஷ்பிர் 42வது இடம்

உலக தடகளத்தில் நடந்த பெண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் இந்தியா சார்பில் குஷ்பிர் கவுர் பங்கேற்றார். பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 36 நிமிடம், 41 வினாடியில் கடந்த இவர், 42வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

மூன்றாவது முறையாக உலக தடகளத்தில் பங்கேற்ற குஷ்பிர், கடந்த 2013ல் 38வது (ஒரு மணி நேரம், 34 நிமிடம், 28 வினாடி), 2015ல் 37வது (ஒரு மணி நேரம், 38 நிமிடம், 53 வினாடி) இடம் பிடித்தார்.

சீனாவின் ஜியாயு யாங் (ஒரு மணி நேரம், 26 நிமிடம், 18 வினாடி) முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • srinivasan kannaiya - muscat,ஓமன்


    வெற்றியின் அடிப்படையே தோல்விதான்... தோல்விதான் மனிதனை உச்சிக்கு கொண்டு செல்லும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement