Advertisement

கோவை அணி 'திரில்' வெற்றி

சென்னை: திருவள்ளூர் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் முரளி விஜய், அனிருத் அரைசதம் கடந்து கைகொடுக்க, கோவை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் இரண்டாவது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் திருவள்ளூர், கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி கேப்டன் முரளி விஜய், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

திருவள்ளூர் அணிக்கு சித்தார்த் (18), சதுர்வேத் (24) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஹரி நிஷாந்த் (27) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் பாபா அபராஜித் (60) நம்பிக்கை தந்தார். அபிஷேக் தன்வர், 19 பந்தில் அரைசதம் கடந்தார். இது, டி.என்.பி.எல்., வரலாற்றில் பதிவான அதிவேக அரைசதம்.

முரளி விஜய் அசத்தல்:

திருவள்ளூர் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அபிஷேக் (55), கவின் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய கோவை அணிக்கு சூர்யபிரகாஷ் (5) ஏமாற்றினார். ரங்கராஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் முரளி விஜய் (69) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய அனிருத் சீதா ராம், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது சீனிவாசன் (38) அவுட்டானார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்த அனிருத், வெற்றியை உறுதி செய்தார்.

கோவை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அனிருத் (69), ஹரிஷ் குமார் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement