Advertisement

உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்

லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4*400 மீ., 'ரிலே' தகுதிச்சுற்றில் இந்திய அணி ஏமாற்றியது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்கள் அணிக்கான 4*400 மீ., 'ரிலே' தகுதிச்சுற்று 'ஏ' பிரிவில் முகமது, ஜாக்கப், முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை 3 நிமிடம் 2:80 வினாடியில் கடந்த இந்திய அணி 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

பெண்கள் அணிக்கான 4*400 மீ., 'ரிலே' தகுதிச்சுற்று 'ஏ' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ஜிஸ்னா, பூவம்மா, அனில்டா, நிர்மலா பங்கேற்றனர். இலக்கை 3 நிமிடம் 28:62 வினாடியில் கடந்து 7வது இடம் பிடித்தது. ஆனால், ஓட்டத்தை துவக்கிய ஜிஸ்னா 250 மீ., துாரத்திற்குப்பின், திடீரென பாதை மாறி ஓடினார். இதனால், இந்திய அணி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

பைனலில் ஜமைக்கா:

ஆண்கள் அணிக்கான 4*100 மீ., 'ரிலே' தகுதிச்சுற்று 'பி' பிரிவில் 'மின்னல் வேக மனிதன்' உசைன் போல்ட், டிரேசி, ஜூலியன், கேம்பெல் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி அசத்தியது. இலக்கை 37:95 வினாடியில் கடந்து பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு பிரிவில் ஜஸ்டின் காட்லின், ரோஜர்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க அணியும் பைனலுக்குள் நுழைந்தது.

டப்னே தங்கம்:

பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் அசத்திய நெதர்லாந்தின் டப்னே ஸ்ஷிப்பர்ஸ் பந்தய துாரத்தை 22 : 05 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக தடகள அரங்கில் இதே பிரிவில் (2015- பீஜிங், 2017- லண்டன்) தங்கம் வென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement