Advertisement

'சொல்லி அடிக்கும் கில்லி' மிதாலி: ஆஸி.,யை அசைக்க உறுதி

டெர்பி: உலக கோப்பை தொடரில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ரன் மழை பொழிகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் சதம் விளாசி, அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அடுத்து ஆஸ்திரேலியாவை சாய்த்து, பைனலுக்குள் அடி எடுத்து வைக்க காத்திருக்கிறார்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில், இந்திய கேப்டன் மிதாலி ராஜ், 34, விஸ்வரூபம் எடுத்துள்ளார். தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் பிறந்தார். வீட்டில் தமிழில் தான் பேசுவார். பின் ஐதராபாத்தில் 'செட்டில்' ஆனார். இத்தொடரில் 7 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 356 ரன் குவித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த முக்கிய லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் கடந்த இவர், அரையிறுதி வாய்ப்பை பெற்றுத் தந்தார்.

'பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின்' என போற்றப்படும் மிதாலி, ஒருநாள் அரங்கில் ஆறாயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். உலக கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக அரைசதம்(7) அடித்தவர் இவர் தான். வரும் 20ம் தேதி நடக்க உள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார்.

இது குறித்து மிதாலி கூறியது:

உலக கோப்பை தொடரில் இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் களம் கண்டோம். தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதால் வீராங்கனைகள் ஏமாற்றத்தில் இருந்தனர். இவர்களிடம், தோல்வியிலிருந்து மீள்வதே முக்கியம் என அறிவுரை கூறினேன்.

'புதிய இந்தியா': கடந்த காலங்களில் இந்திய அணி தோல்விக்குப்பின் மீண்டது கிடையாது. தற்போதைய அணி, ஏமாற்றத்திற்குப்பின்பும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. ஒரு புதிய இந்திய அணியை பார்ப்பது போல உணர்கிறேன்.

வேகப்பந்துவீச்சாளர்கள் எதிரணியை துவக்க விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விட்டால், 'சுழல்' வீராங்கனைகளின் பணி எளிதாகும். நியூசிலாந்துக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்கள் கோஸ்வாமி, ஷிகா பாண்டே இந்த உத்தியை சிறப்பாக கையாண்டனர்.

வெற்றி நிச்சயம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 8 போட்டியில் 7ல் தோல்வியடைந்தோம். இதற்காக, ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது என்ற அர்த்தம் கிடையாது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது முக்கியம். தற்போதைய சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால், ஆஸ்திரேலியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

சாதனைகளை பொருட்படுத்த மாட்டேன். சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாடுவதை தவிர வேறு எதுவும் பெரிது இல்லை. இந்திய அணிக்காக ரன் குவிப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு மிதாலி தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • EDISON - CHENNAI,இந்தியா


    நடிகைகளை மட்டும் வெகுஜன ஈர்ப்பாக இருந்த நிலையை விளையாட்டு வீராங்கனைகள் மாற்றிவிட்டார்கள். சானியா மிர்சா, மேரிகோம், முன் நாட்களில் பி டீ உஷா , ஷைனி, 800 காயத்ரி,அஞ்சு பாபி ஜார்ஜ் , சிந்து , என்ற வரிசையில் புயலாக பெயர் எடுத்து இருப்பவர் மித்தாலி. நமது பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். நமது பெண்கள் அணி ஆஸ்திரேலியா வை வெல்லட்டும்.

  • Senthilkumar Yadav - Ramnad(dt),Thathankudi.,இந்தியா


    Congratulations Ms.Mithali raj

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement