Advertisement

ஹாக்கியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றுக்கான லீக் போட்டியில், கோல் மழை பொழிந்த இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதன்மூலம் 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, மலேசியா, இந்தியா, தென் கொரியா என 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'பி' பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

தல்விந்தர் அபாரம்: முதலிரண்டு போட்டிகளில் ஸ்காட்லாந்து, கனடா அணிகளை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர். இதேபோல, 9வது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. பின், 13வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், 'பெனால்டி கார்னர்' மூலம் முதல் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 16, 18வது நிமிடங்களில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் இந்திய அணியினர் ஏமாற்றினர். பின், 21, 24வது நிமிடங்களில் இந்தியாவின் தல்விந்தர் சிங், 2 கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்தியா 3-0 என முன்னிலையில் இருந்தது.

காலிறுதிக்கு முன்னேற்றம்: ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோலடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 47, 49வது நிமிடங்களில் முறையே ஆகாஷ்தீப் சிங், மோர் பர்தீப் தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது உமர் பூட்டா, ஒரு 'பீல்டு' கோல் அடித்து ஆறுதல் தந்தார். பின், 59வது நிமிடத்தில் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங், 2வது கோல் அடித்தார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-1 என வெற்றி பெற்றது. இதன்மூலம் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது.

சிறந்த வெற்றி: தவிர இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த வெற்றியை பெற்றது. இதற்கு முன், 2003ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்திய அணி 7-4 என பாகிஸ்தானை வென்றிருந்தது.

நான்காவது லீக் போட்டியில் (ஜூன் 20) இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • satha - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


    வாழ்த்துக்கள் இந்தியா ஹாக்கி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement