Advertisement

காம்பிருக்கு நான்கு போட்டி தடை

புதுடில்லி: பயிற்சியாளருடன் மோதிய பிரச்னையில் காம்பிருக்கு நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நிபந்தனைகளுடன் இத்தடை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்திய அணி முன்னாள் துவக்க வீரர் காம்பிர், 35. தேசிய அணியில் ஒரு நாள் அரங்கில் மட்டும் 147 போட்டிகளில் (5238 ரன்) விளையாடி உள்ளார். இந்திய அணி சார்பில், கடைசியாக ராஜ்கோட் (எதிர்- இங்கிலாந்து, நவ.2016) டெஸ்டில் பங்கேற்றார். உள்ளூர் போட்டிகளில் டில்லி சார்பில் விளையாடி வருகிறார். இதற்கிடையே, கடந்த (பிப்.-மார்ச் 2017) விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் தொடரில் பங்கேற்றார்.

சக வீரர்களான உன்முக்த் சந்த், நிதிஷ் ராணாவை சில போட்டிகளில் புறக்கணித்த காரணத்தால், ரஞ்சி அணி பயிற்சியாளர் கே.பி., பாஸ்கருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அணியில் நிரந்தர இடம் கிடைக்க, வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடி தருவதாக பயிற்சியாளர் மீது காம்பிர் புகார் கூறினார். இது குறித்து விசாரிக்க, டில்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

திட்டமிட்ட மோதல்:

நேற்று இக்குழு வெளியிட்ட அறிக்கை : கடந்த மார்ச் 6ல் புவனேஷ்வரில் நடந்த போட்டியில் டில்லி அணி பங்கேற்றது. இதில் விளையாடாத, காம்பிர் ஓட்டலி்ல் தங்கி இருந்தார். உணவு இடைவேளையின்போது, பயிற்சியாளரை அழைத்துள்ளார். இதனால், முன்கூட்டியே இந்த மோதலை காம்பிர் திட்டமிட்டிருந்தது தெரிகிறது. 'டிரசிங் ரூமில்' இருந்த இளம் வீரர்களை வெளியே அனுப்பி உள்ளார். பின், பயிற்சியாளரிடம் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில இளம் வீரர்கள் நடந்ததை ஒப்புக்கொண்டனர். இதுவும், காம்பிர் மோதலில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக கிடைத்துள்ளது.

ஒழுக்கம் அவசியம்:

மதிப்பு வாய்ந்த பயிற்சியாளரை இப்படி பேசியது தவறானது. இம்மாதிரியான சம்பவம், இனி நடக்காமல் இருக்க தண்டனை தர வேண்டும். அணியில் வீரர்கள் ஒழுக்கத்துடன் நடத்து கொள்வது அவசியம். காம்பிருக்கு 4 முதல் தர போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த 2 ஆண்டுக்குள் (மார்ச் 30, 2019 வரை) இத்தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் இம்மாதிரியான செயலில் காம்பிர் ஈடுபட கூடாது. எங்களது உத்தரவுகளையும் ஏற்க வேணடும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. வீரர்களின் நலனுக்காக, குறைதீர் மையம் ஏற்படுத்தப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் நிபந்தனையை காம்பிர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், இதனையடுத்து, தடை வாய்ப்பிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement