Advertisement

பஞ்சாப் அணியை பந்தாடியது மும்பை: பட்லர், ராணா விளாசல்

இந்துார்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பட்லர், ராணா அரைசதம் கடந்து கைகொடுக்க, மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய பஞ்சாப் அணியின் ஆம்லா சதம் வீணானது.

இந்தியாவில், 10வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு ஷான் மார்ஷ் (26), சுமாரான துவக்கம் தந்தார். சகா (11) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல், மெக்லீனகன் வீசிய 15வது ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 28 ரன்கள் கிடைத்தது. மறுமுனையில் அசத்திய ஆம்லா, மலிங்கா வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த போது, பும்ரா பந்தில் மேக்ஸ்வெல் (40 ரன், 18 பந்து) போல்டானார். ஸ்டாய்னிஸ் (1) ஏமாற்றினார். மலிங்கா வீசிய 20வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த ஆம்லா, 'டுவென்டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. ஆம்லா (104 ரன், 60 பந்து, 6 சிக்சர், 8 பவுண்டரி), அக்சர் படேல் (4) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் மெக்லீனகன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பட்லர் விளாசல்:

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணியின் ஜாஸ் பட்லர், மோகித் சர்மா வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பார்த்திவ் படேல், இஷாந்த் சர்மா, ஸ்டாய்னிஸ் வீசிய 4, 6வது ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது பார்த்திவ் (37) அவுட்டானார். அபாரமாக ஆடிய பட்லர், 24 பந்தில் அரைசதமடித்தார்.

ராணா அபாரம்:

அடுத்து வந்த நிதிஷ் ராணா, சுவப்னில் சிங் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்தார். மறுமுனையில் அசத்திய பட்லர், சந்தீப் சர்மா வீசிய 13வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது, மோகித் சர்மா பந்தில் பட்லர் (77) அவுட்டானார். இஷாந்த் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராணா, 29 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா, இஷாந்த் வீசிய 15வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். மோகித் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராணா, வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராணா (62 ரன், 34 பந்து, 7 சிக்சர்), ஹர்த்திக் பாண்ட்யா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன்மூலம் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி, 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.





Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement