Advertisement

'தல' தோனிக்கு தலை வணங்குவோம்: ரெய்னா புகழாரம்

கோல்கட்டா: ''உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனிக்கு, உரிய மரியாதை அளிக்க வேண்டும்,'' என, குஜராத் அணி கேப்டன் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி, 35. மூன்றுவிதமான உலக கோப்பை வென்று காட்டிய பெருமை இவருக்கு உண்டு. இதேபோல ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர்களில் சென்னை அணிக்கு தலா 2 முறை கோப்பை வென்று சாதித்துள்ளார். தற்போது நடக்கும் 10வது ஐ.பி.எல்., தொடரில் புனே அணிக்காக விளையாடும் இவர், 'பார்மின்றி' தவிக்கிறார். இதுவரை விளையாடிய 5 போட்டியில் 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தவிர, கடந்த ஐ.பி.எல்., தொடரில் புனே அணியை வழிநடத்திய இவர், இம்முறை ஒரு வீரராக மட்டுமே செயல்படுகிறார்.

இதுகுறித்து குஜராத் அணி கேப்டன் ரெய்னா கூறியது: புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்கியது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவுக்காக நிறைய கோப்பைகள் பெற்றுத் தந்த இவர், கடந்த ஐ.பி.எல்., தொடர்களில் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். எனவே இவரது திறமைக்கு உரிய மரியாதை, தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இதனை நான் மட்டும் கூறவில்லை. உலகின் தலைசிறந்த முன்னாள், இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மறக்க முடியாது

இந்தியா, சென்னை அணிகளுக்காக விளையாடிய போது தோனியுடன், 'டிரஸ்சிங் ரூமை' பகிர்ந்து கொண்ட அனுபவம் என்றும் மறக்க முடியாதது. பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது 'பார்ம்' குறித்து விமர்சனம் எழுகின்றன. இது, ஒருபோதும் இவரது பேட்டிங்கை பாதிக்காது. அடுத்து வரும் போட்டிகளில் எழுச்சி கண்டு, ரன் மழை பொழிவார் என நம்புகிறேன். இவரை 'பேட்டிங்' வரிசையில் 'டாப்-ஆர்டரில்' களமிறக்கினால் கூடுதலாக ரன் எடுக்க வாய்ப்பு உள்ளது. பின்வரிசையில் களமிறக்கப்படும் இவர், சிறந்த 'பினிஷிங்' கொடுப்பார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது என்னைப் போன்ற இளம் வீரர்களை ஊக்குவித்தார். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

நம்புகிறேன்

போட்டியில் ஆக்ரோஷமாக செயல்படுவது தான் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு கூடுதல் பலம். அடுத்து நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள உதவுவார் என நம்புகிறேன். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் 'சூப்பர் பார்மில்' உள்ள இவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பேட்டிங்கில் சாதிக்கலாம். ஐ.பி.எல்., தொடர், திறமையான இளம் இந்திய வீரர்களை கண்டறிய உதவுகிறது. இம்முறை, கேரளாவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பசில் தம்பி, ஜார்க்கண்ட் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள், விரைவில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு உள்ளது. பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணி எழுச்சி பெறும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement