Advertisement

இலண்டன் புசைய் அகடமியில் தமிழ் இசை விழா

இன்னிசை வாத்தியங்கள் இசைக்க,ஆடலுடன் பாடல்களும் இணைந்த தமிழ் இசை விழா இலண்டனில் புசைய அகடமியில் உள்ள மிகப் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுத்து இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவர் இரவி வழங்கிய போது, "மதுரை,திருநெல்வேலி,திருக்குறுங்குடி,சுசிந்திரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள இசைத்தூண்கள் பற்றியும்,தராரசுரம்,கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள இசை சிற்பங்களைப் பற்றியும், குடுமியான் மலை திருவாரூர், திருவையாறு, தஞ்சையில் உள்ள இசை கல்வெட்டுகள்" பற்றியும் குறிப்பிட்ட போது. இவ்விடங்களைப் காணாதவர்கள் அனைவருக்கும், அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறலாம்.

வித்துவான் வம்சி கிருஷ்ணா விஷ்ணுதாஸ் குழுவில் உள்ள மாணவர்கள் இசை பாடி அரங்கத்தை மகிழ்வித்தனர். இதன் பின் இலண்டனில் பல மேடைகளில் இன்னிசை பாடிய அதிதி சுப்பிரமணியன் வர்ணம், சித்தி வினாயகர், அலைபாயுதே, திருப்பாவை, சின்னஞ்சிறு கிளியே ஆகிய பாடல்களை முறையே சாருகேசி, நாட்டை, கானடா, கல்யாணி இராக மாலிகா போன்ற இராகங்களில் பாடல்களைப் பாடி கரசோசைகளைப் பெற்றார்.


இதற்கு அடுத்த நிகழ்சியாக தேவி நெய்தியார், திவ்விய கஸ்தூரி இணைந்து ‘அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் இணைந்து நடத்திய ஆடலுடன் பாடல் காட்சி அரங்கத்தில் உள்ளோர் அனைவரையும் மெய் மறக்கச் செய்த காட்சிகளாக அமைந்தது. நெய்தியார் சின்னஞ்சிறு கிளியே, உன் கண்ணில் நீர்; வழிந்தால்,என்ன தவம் செய்தனை போன்ற பாடல்களைப் பாட, கலைமாமணி விருது பெற்ற திவ்விய கஸ்தூரி இசைக்கேற்ப முக பாவனைகளை காட்டி ஆடிய விதம் பொதுவாக அனைவரையும் கவர்ந்தது என்று கூறுலாம். ஆடலுடன் பாடலைக் கேட்டு இரசிப்பதிலே சுகம் சுகம் என்ற பாடலை நாம் கேட்டதுண்டு. அதனை இந்த இசை அரங்கத்தில் அனைவரும் கேட்டு மகிழ்ந்தோம் என்பது உண்மை நிலைப்பாடாகும்.

இசைநிகழ்ச்சியில் மெய்மறந்து இரசித்த தமிழ் மக்களுக்கு, இறுதியில் முமு கேட்டரிங் மற்றும் சரவண பவன் உணவகம் மூலம் நாவுக்கும் ருசியான உணவு கிடைக்கப்பெற்று தமிழ் பாரம்பரிய விருத்தோம்பலை நிலைநாட்டினர் என்று கூறினால் அது மிகையாகாது.


விழாவினை முன்னிட்டு தேவி நெய்தியார் ‘குரல் வளம் அபிவிருத்தி’ பற்றிய நுணுக்கங்களை இசை பாடும் மாணவ மாணவர்களுக்கு உரிய போதனை விளக்கம் மூலம் எடுத்துரைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் வளரும் நிலையில் உள்ளோர்க்கு இது போன்ற வளர்ந்த நிலையில் உள்ளோரால் நடத்தப்படும் சிறப்பு முகாம் அம்மாணவர்களை பெரிதும் ஊக்குவிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ponpuni - Chennai,இந்தியா

    தமிழ் இசை விழா நிகழ்ச்சி தினமலர்.காமில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ச. பொன்ராஜ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement