Advertisement

சிங்கப்பூரில் குரு பெயர்ச்சி விழா

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி ( 04.10.2018 ) வியாழக் கிழமை சிங்கப்பூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு ஸ்ரீ குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசம் செய்ததை யொட்டி 05.10.2018 வெள்ளிக்கிழமை குரு பெயர்ச்சி விழா ஆலயங்களில் நடைபெற்றது.

இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ பந்தலில் ஸ்ரீ குரு பகவான் சர்வ அலங்கார நாயகராகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்க ஸ்ரீ நவக்கிரக ஹோமம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் பெருந் திரளாக ஹோமத்திற்கு வேண்டிய பொருட்களை சமர்ப்பித்தனர். தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் நவக்கிரக காயத்ரி மந்திரத்தைச் சொல்ல கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருப்பிச் சொல்லி வழிபட்டனர்.

தனிநபர் – குடும்பம் – சமுதாயம் தேசம் என அனைவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்றுயர உருக்கத்தோடு கூட்டு வழிபாடு நிகழ்த்தியது மெய்சிலிர்க்க வைத்தது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட கடம் ஆச்சாரியரால் ஆலயம் வலம் வந்து நவக்கிரக மூர்த்திகளுக்கு – குறிப்பாக குரு பகவானுக்குக் கலசாபிஷேகம் நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் பன்னீர்க்குடங்களை ஆலயம் வலம் வந்து சமர்ப்பிக்க பன்னீர்க்குட அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற ஸ்ரீ குரு பரிகார சகஸ்ரநாம அர்ச்சனையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . ஆலய செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் இன்முகத்தோடு பக்தர்களுக்குச் சேவையாற்றிய பாங்கு பாராட்டுக்குரியது. கலந்து கொண்டோர் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.

- சிங்கப்பூரிலிருந்து வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement