Advertisement

சிங்கப்பூரில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா

சிங்கப்பூரில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்திப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரிய முறையிலும் ஆலயங்களிலும் இந்திய வம்சாவளியினரிடையேயும் மிகச் சிறப்பாக செப்டம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சி ங்கப்பூர் சிலோன் சாலையிலுள்ள பிரபல ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்திப் பெருவிழா எட்டாம் தேதியிலிருந்து பதின்மூன்றாம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. லட்சார்ச்சனை – மூல மந்திர ஹோமம் – திருமுறைப் பாராயணம் என நாள்தோறும் தெய்விக மணம் கமழ பக்தப் பெருமக்களுக்குப் பெரு விருந்தாய்த் திகழ்ந்தது. பதின்மூன்றாம் தேதி சதுர்த்திப் பெருவிழா நாளன்று மகா கணபதி ஹோமம் – 1008 சங்காபிஷேகம் – அடியார்கள் பங்கு பெற்ற விசேஷ நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 108 விநாயகர் பூசை – மோதக பூசை – பஞ்ச முகார்ச்சனை - பால்குட அபிஷேகம் – பஞ்சமுக விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் – விசேட விநாயகர் அர்ச்சனை கண்கொள்ளாக் காட்சியாகும். நிறைவாக நடைபெற்ற மகா தீபாராதனையின்போது பக்தப் பெருமக்கள் “ ஓம் ஸ்ரீ மகா கணபதையே நமோ நமஹ “ என சரண கோஷமிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. ஓதுவா மூர்த்தி கள் மதுரை பொன்.மு.முத்துக்குமார் மற்றும் செண்பக விநாயகர் ஆலய ஓதுவா மூர்த்தி சொ.சிவக்குமார் ஆகியோரின் திருமுறை இன்னிசைக் கச்சேரி செவிக்கின்பமளித்தது. முத்தாய்ப்பு நிகழ்வாக சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ விநாயகப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தது இவ்வட்டார பக்தர்களிடைப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. ஆங்காங்கே விசேஷ பந்தல் அமைத்து வரிசை கொடுத்து அன்பர்கள் வழிபட்டனர். அவ்வட்டாரப் பிரமுகர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்ததாகும். ஆலய மேலாண்மைக் குழுவினரும் அர்ச்சகர்களும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement