Advertisement

சிங்கப்பூரில் பன்னிரு திருமுறை முற்றோதல் விழா

சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத் திருமண மண்டபத்தில் ஆகஸ்டு 25 ஆம் தேதி முழுநாள் நிகழ்வாக – பக்தர்களின் வாழ்வு பண்புடனும் பல்வேறு நலத்துடனும் சிறக்க பன்னிரு திருமுறை முற்றோதல் விழாவைக் கோலாகலமாக நடத்தியது. ஆலய வித்துவான்களின் மங்கல இசையுடன் பன்னிரு திருமுறைகள் ஆலயம் வலம் வந்து அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டன. ஓதுவா மூர்த்திகள் பன்னிரு திருமுறை ஓத நடராசர் பூசையுடன் விழா தொடங்கியது. திருமுறை முற்றோதல் – திருமுறை இன்னிசை – திருமுறை நாடகம் – திருமுறைப் பாடல்களுக்குப் பரத நாட்டியம் – திருமுறைச் சிறப்புச் சொற்பொழிவு என நாள் முழுதும் தெய்விக மணம் கமழ அரங்கம் நிரம்பி வழிந்த பக்தர்களிடை விழா நடைபெற்றது. ராம கருணாநிதி செட்டியாரின் அறிமுக உரைக்குப் பின் 116 சிவனடியார்கள் ஒரே நேரத்தில் பன்னிரு திருமுறைகள் முற்றோத அனைத்து ஆலய தேவார வகுப்பு மாணவர்களும் பார்வையாளர்களும் பின்தொடர 18246 பாடல்களும் பாடப்பட்டது மெய்சிலிர்க்க வைத்த கண்கொள்ளாக் காட்சியாகும்.

பிற்பகல் முதல் நிகழ்வாக சிங்கப்பூர் ஆலய ஓதுவா மூர்த்திகளின் திருமுறைப் பன்னிசை நடைபெற்றது. சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலய ஓதுவார்கள் விவேக் ராஜா – மணிகண்டன் - ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய ஓதுவார்கள் சிவகுமார் – வடிவேல் மற்றும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் – விர மாகாளியம்மன் ஆலய ஓதுவா மூர்த்திகள் வைத்தியநாத தேசிகர் – சுந்தரமூர்த்தி ஆகியோரின் பன்னிசைக்கு தேவராஜ் மிருதங்கம் வாசிக்க பரத் சந்தோஷ் வயலின் வாசிக்க தெய்விக இசை மணந்தது. அடுத்து பாவலர் அ.கி.வரதராஜன் எழுதி தயாரித்து இயக்கிய “ சூலை போக்கிய சொக்கன் “ இசை நாடகம் திருமுறை மாநாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பாடகர்களின் பின்னணி இசையோடு அரங்கை அலங்கரித்தது. தமக்கை திருநீறு தர தம்பி அப்பர் பெருமான் பெற்று நெற்றியிலும் வயிறு உள்ளிட்ட உடல் முழுவதும் பூசி நெக்குருகி நின்ற காட்சி பார்வையாளர்களைத் தத்ரூபமாகக் காண வைத்து பலத்த கரவொலி பெற்றது.

அடுத்த அங்கமாக ஆலாபனா ஆர்ட்ஸ் நடனமணிகள் ஜனனி – ஸ்ரேயா – தன்யா – சுமா ஆகியோரின் திருமுறைப் பாடல் பரதம் அரங்கை அதிர வைத்தது. அடுத்து பேச்சரங்கம் தொடங்கியது. நிகழ்வுக்குத் தலைமை ஏற்ற செட்டியார்கள் கோயில் குழும நிர்வாகக் குழுத்தலைவர் மெ.நாச்சியப்பன் தமதுரையில் ஆலயம் ஆற்றி வரும் பல்வேறு சமய சமுதாய நல்லிணக்கப் பணிகளைப் பட்டியலிட்டதோடு விரைவில் ஒரு லட்சம் வெள்ளி செலவில் நடமாடும் மருத்துவ மனை செயல்படவிருப்பதை அறிவித்தார்.சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் ரா.தினகரன் மற்றும் 2700 – க்கு மேற்பட்ட ஆலயங்களுக்கு குடமுழுக்கு செய்வித்த பிள்ளையார்பட்டி கி.பிச்சை குருக்கள் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். சிங்கப்பூர் அரசு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பிரமுகர்களுக்கும் ஆலயங்களின் நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்து உரையாற்றுகையில் ஆலயப் பணிகளை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார். நி

றைவாக தமிழக ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம் “ நேற்றைய திருமுறை – நாளைய தலைமுறை “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில் எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்தத் திருமுறையை எதிர் கால சந்ததிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதைப் பாடல்களுடன் விளக்கியதோடு திருமூலரின் திருமந்திரம் ஒரு அறிவியல் நூல் என்பதைப் பாடல் வரிகளால் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில் திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல சிங்கப்பூரில் நடைபெறும் திருமுறை மாநாடு போலத் தமிழகத்திலும் நடைபெறப் பிச்சை குருக்கள் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டுமென்றும் சிங்கப்பூர் நகரத்தாரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக சி.செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வினை சுப.அருணாசலம் - கண்ணா கண்ணப்பன் – அ.கணேசன் ஆகியோர் நெறிப்படுத்தினர். கண்ணா கண்ணப்பன் நன்றி நவில நிகழ்வு இரவு விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement