Advertisement

சிங்கப்பூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. தொபாயோ அருள்மிகு வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு விசேஷ ஹோமங்களும் மற்ற பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. தாலிப் பெருக்குப் பூஜை , வைரத் தாலி ஆலய வலம் வந்தபோது பக்தர்கள் “ ஓம் சக்தி ...ஓம் சக்தி “ சரண கோஷம் முழங்கியது மெய் சிலிர்க்க வைத்தது. ஆகஸ்டு ஐந்தாம் தேதி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்குப் பூச் சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூச்சொரிதலில் அம்பாள் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்கள் பக்தி சிரத்தையோடு பால் குடம் எடுத்து ஆலயம் வலம் வந்தனர். பின்னர் அம்பிகைக்குப் பால் குட அபிஷேகம் நடைபெற்றது.ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிலும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகியாக அம்பிகை திருவிதி உலாவாக செம்பவாங் கடற்கரை அடைய அங்கு அம்பிகையின் அருளாசியோடு மங்கல மகளிர் தாலி திருத்திக் கொண்டு தாங்கள் சுமங்கலிகளாகத் திகழ வழிபட்டனர். கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமையப் பிரார்த்தித்தனர். எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தப் பெருமக்கள் உற்சாகத்தோடு பெருமளவில் கலந்து கொண்டு ஸ்ரீ பராசக்தியின் அருள் பெற்றுச் சென்றனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement