Advertisement

ஹாங்காங்கில் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி

ஹாங்காங் : ஹாங்காங் வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் கூடிய இந்நிகழ்ச்சியில் பாடல்கள், பேச்சு, நடனம், கவிதை வாசித்தல், இந்திய ராணுவ வீரர்களின் தகவல்கள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிக்கி நார்வானி மற்றும் குழுவினரின் இறைவணக்க பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு பேச்சாளர்களான திருமதி.அனுபமா விஸ்வநாதன், யோக்ராஜ் பூவேந்திரன் ஆகியோர் ராணுவ வீரர்களின் பிள்ளைகளான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். யோக்ராஜ் தனது 5வது வயதில் தந்தையை இழந்தவர் என்பதால், தனது தந்தையை போல் ராணுவ வீரர் உடையில் வந்து அனைத்து இந்திய ராணுவத்தினருக்கும் மரியாதை செலுத்தினார்.

திருமதி.ஷிருஷ்டி பாஸ்கி தனது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், இந்திய பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வருமாறு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஹாங்காங்கில் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் குர்ஷரன் சிங், ராணுவ வீரர்களின் கடமை பற்றியும், ஹாங்காங் மக்கள் எவ்வாறு இந்தியர்களுக்கு உதவுகிறார்கள் என்பது பற்றியும் விளக்கினார்.

மேஜர் ராகேஷ் ஷர்மாவின் பேச்சு அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு, தேசப்பற்று மிக்க பாடல்களுக்கு நடனங்கள் நடைபெற்றது. பிரவசி சம்மான் விருது பெற்ற திருமதி.புர்விஷ் ஷரோப் இந்நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டனர். விஸ்வ ஹிந்து பரிசித், இந்து ஸ்வயம்சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புக்களைச் சேர்ந்த பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உணர்ச்சிபூர்வமான உரைகளை உன்னிப்பாக கேட்ட அனைவரும், ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனநிறைவுடன் விடைபெற்றுச் சென்றனர். ஜெய்ஹிந்த் என்ற தலைப்பில் கடந்த 6 ஆண்டுகளாக வானொலியில் நிகழ்ச்சி தயாரித்து, வழங்கி வரும் வானொலி தொகுப்பாளர் திருமதி. ஜெயா விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement