Advertisement

சிங்கப்பூரில் எழுத்தாளருடன் மாணவிகள் கலந்துரையாடல்

சிங்கப்பூர் : சிங்கப்பூர் இலக்கிய உலகில் புதுமைத்தேனீ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மா. அன்பழகன் இதுவரை கவிதை, கதை, கட்டுரை என்று 30 நூல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் வித்தியாசமாக எழுதுவார்; தமிழ் விழாக்களையும் புதுமையாக நடத்துவார். அப்படி எழுதிய நூல்களில் ஒன்று “ கூவி அழைக்குது காகம்” எனும் மாணவர் கடித இலக்கியம்.

தமிழகத்திலிருக்கும் ஒரு தாத்தா சிங்கப்பூரிலிருக்கும் ஒரு வளர்ந்த பேரனுடன் நடத்தும் கடிதப் பரிமாற்றமே அந்நூல் எனலாம். இந்தக் காலத்து மாணவன் என்னென்ன தவறுகளைச் செய்வார்களோ அதையெல்லாம் பேரன் தாத்தாவுடன் சொல்ல தாத்தாவுக்கே உரித்தான அன்பின்; அரவணைப்பின் வழி அவனை நல்வழிப்படுத்துதலே நோக்கம்.

இந்நூல் சிங்கப்பூரில் பல பள்ளிகளுக்கு இலவசமாகவே நூல் ஆசிரியர் கொடுத்தார். ஒரு சில தமிழாசிரியர்கள் மாணவர்களிடம் அந்நூலின் கருத்துகள் சென்றடைய வேண்டும் என்பதிலே அக்கறை எடுத்துக்கொண்டார்கள்.

இன்று சிங்கப்பூரில் சிறந்த பள்ளிகளில் முன்னிலை வகிக்கும் பள்ளி இராபிள்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்றாகும். அப்பள்ளியின் தமிழாசிரியர் உத்தமன் தனிப்பட்ட ஆர்வத்தில் மாணவிகளை இந்த ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வைத்தார். அப்போதைக்கப்போது ஏற்படும் ஐயங்களைக் குறித்துக்கொள்ளச் செய்தார்.

மாணவிகளே ஆசிரியரிடம், “ இவ்வளவு அழகான நூலை எழுதிய நூலாசிரியரிடம் நாங்கள் கலந்துரையாட வேண்டும் என விண்ணப்பித்திருக்கிறார்கள். அதன்படி மா. அன்பழகனை அழைத்துச் சென்றார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கே தாய்மொழியை இரண்டாம் மொழியாக எடுத்துப்படிக்கும் மாணவிகளிடம் எவ்வளவு மொழியறிவு இருக்கும் என எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருப்பதை நேரில் அறிந்து அன்பழகன் வியந்து பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு நல்ல சிந்தனையோடு அரிய கேள்விகளைக் கேட்டதில் இருந்து தெரிந்தது. அன்பழகன் தெளிவாக அவர்களின் ஐயங்களைப் போக்கியதோடு நல்ல பல அறிவுரைகளையும் சொல்லி வந்தார்.

பள்ளியின் தாய்மொழித் துறைத் தலைவரையும் (அவர் ஒரு சீனர்) வரவழைத்து, அவருக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் தாங்கள் இந்நூலிலிருந்து கற்றுக்கொண்ட விழுமியங்களை எடுத்துச் சொல்ல அவரும் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் அன்பழகனுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement