Advertisement

சிங்கப்பூரில் நூல்கள் அறிமுக விழா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலைக் கவிஞர் ந.வீ.விஜயபாரதி எழுதிய “ சுந்தரத் தமிழாடல் – நிலவின் தோல்வி “ ஆகிய நூல்களின் அறிமுக விழா ஜீலை 29 ஆம் தேதி ஆனந்தபவன் உணவக வளாக அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவுக்குத் தமிழறிஞர் சுப.திண்ணப்பன் தலைமை வகித்தார். நூலாசிரியர் அண்மையில் மணி விழாக் கண்டதால் இவ்விழா மணி விழா வரவேற்பு நிகழ்வாகவும் திகழ்ந்தது. மணி விழாத் தம்பதியர் விஜய பாரதி – கமலா ஆகியோர் சிங்கப்பூரில் முத்து விழாக் கண்ட சான்றோர் மூத்த பத்திரிகையாளர்கள் ஏ.பி.ராமன் – கமலா வெ.புருஷோத்தமன் - சந்திரா தம்பதியர் – சுதந்திரப் போராட்ட தியாகி வை.சுதர்மன் –அன்னக்கொடி தம்பதியர் – சுப.திண்ணப்பன் – இந்திராள் தம்பதியர் மற்றும் வள்ளல் நாகை தங்கராசு – சகுந்தலா தம்பதியரிடம் ஆசி பெற்று பலத்த கரவொலியுடன் மேடையில் அமர்த்தப்பட்டனர்.

எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் – தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் – கவிமாலை அமைப்பின் தலைவர் இறை மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிமாலைக் கவிஞர்கள் கி.கோவிந்தராசு மற்றும் சி.கருணாகரசு வாழ்த்துப் பாக்கள் வாசித்தனர். கவிமாலை அமைப்பின் நிறுவநர் மூத்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை ஆற்றினார். கவிஞர்கள் கலைச்செல்வி வைத்தியநாதன் – லலிதா சுந்தர் ஆகியோர் நூலாய்வுரை நிகழ்த்தினர். விழாவில் சென்னை விழிகள் பதிப்பக ஆசிரியர் தி.நடராசன் தயாரித்து அனுப்பிய மணிவிழா கவிதை மலர் “ தோளில் விழுந்த தமிழ் மலர்கள் “ நூலும் வெளியீடு கண்டது. இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் திறன்மேம்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் ரா.தினகரன் நூல்களை வெளியிட முதற் பிரதியை ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நாகை தங்கராசு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அப்போலோ குழும நிறுவன நிர்வாக இயக்குநர் செ.சங்கர்நாதன் – திரைப்படத் தயாரிப்பாளர் பெ.அருமைச்சந்திரன் – மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் உள்ளிட்ட தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் கவிஞர் விஜயபாரதி தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். முன்னதாக கவிமாலைக் காப்பாளர் மூத்த கவிஞர் மா. அன்பழகன் வரலேற்புரை ஆற்றினார். கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நூல்கள் 129 – 130 ஆவது வெளியீடுகள் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். நிகழ்வினைக் கவிஞர் இன்பா நெறிப்படுத்தினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு இரவு விருந்துடன் நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement