Advertisement

இலண்டனில் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் முதியோர் இல்லம்

இலண்டன் வாழ் இந்திய மக்கள் இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வளர்ச்சியடையச் செய்வதற்காக திருத்தலங்கள் பலவற்றை ஏற்படுத்தி, நித்திய பூஜைகளும்,மாதந்திர சிறப்பு பூஜைகளும்,வருடாந்திர உற்சவங்களும் கொண்டாடி வருகின்றனர் என்பதை பொதுவாக நாம் அறிந்ததே. நாடு விட்டு நாடு வந்த பின்பு, அரும்பாடுபட்டு,குழந்தைகளின் படிப்பிற்காக தங்களது நேரத்தை ஒதுக்கி எப்போதும் ஒரு இயந்திர வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது கண்கூடு. காலத்தின் மாற்றத்தின் காரணமாக என்னதான் உழைத்து வாழ்ந்தாலும், தங்களது பெற்றோர்கள் வயது முதிர்ச்சி அடையும் தருணத்தில் அவர்களை தங்கள் அருகில் வைத்து கவனிக்க முடியாத சூழ்நிலைகள் ஆங்காங்கே உள்ளன. பந்த பாசத்தில் உந்தப்பட்டு இருந்தாலும்,தங்களது வேலைப் பளுவின் காரணமாக பெற்றோர்களுக்கு அருகில் இருந்து போதிய மருத்துவ வசதியை உடன் இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலைகள் நிலவுகின்றன.

இந்த வயது முதிர்ச்சி அடைந்தவர்களை பேணும் பொருட்டு, இலண்டனில் ‘பஹாம்’ என்ற இடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே, முதியவர்களை பராமரிக்கக் கூடிய முதியோர் இல்லம். இந்த இல்லம் 02.12.2011 ஆண்டு உருவாக்கப்பட்டது. முற்றிலும் இந்திய வாழ் முதியவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றார். இவர்கள் தங்குவதற்கு தனி அறையுடன் கூடிய வசதிகள்,உணவு,உடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன. வசதிபடைத்த குடும்பத்தினர் மாத அடிப்படையில் பணம் கொடுத்து இங்கு சேர்கின்றனர். வசதியற்றோருக்கு பல தொண்டு நிறுவனங்கள் தாமகவே முன் வந்து இவர்களுக்கு ஆகும் செலவிற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றனர். இங்கு இந்திய சைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன.


இந்த முதியவர்கள் மகிழ்ச்சி அடைவதற்கும், அவர்களுக்கு ஒரு நாள் மாறுபட்ட நிலையில் பொழுதினைப் போக்கி மகிழ்வதற்கும் இங்குள்ள ‘சின்மயா மிஷன்’ அமைப்பு குழந்தைகளின் நிகழ்ச்சியினை இந்த முதியோர் இல்லத்தில் நடத்தினர். இதில் குழந்தைகள் பஜனை பாடி முதியவர்களை பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினர். மேலும் எம்பெருமான் சிவபெருமானுக்கு திருநீலகண்டர் என்ற பெயர் எவ்வாறு வந்தது? என்பதனை விளக்குவதற்கு, பாற்கடலை கடைந்த போது சிவன் உட்கொண்ட விஷம் கழுத்தில் தேங்கியதையும்,அவ்விஷம் வயிற்றினுள் செல்லாதிருக்க பார்வதி சிவனின் கழுத்தில் கையால் அழுத்த, அவ்விஷம் கழுத்திலேயே தங்கி விட நேரிட்ட சம்பவத்தை குழந்தைகள் நடித்துக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தனர்.

முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையினைக் கண்ணுற்ற நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர், இது போன்ற நிகழ்ச்சிகளை, தாங்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் நடத்த வேண்டும் என்று எடுத்துக் கூறிய போது, அனைவரது மனமும் நெகிழ்ச்சி அடைந்தது. நாமும் முதியவர்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்க நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம். வாழ்ந்து முடிந்த நிலையினை எய்திய முதியவர்களை வாழும் பருவத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களை தனிமைப்படுத்தா வண்ணம் அவர்களுடன் உடன் இருந்து,அவர்களது பொழுது போக்கிற்கு நம்மால் முடிந்த அளவு அவர்களை திருப்தி படுத்தி கடமையாற்றுவோம் என்று இப்போது உறுதி கொள்வோம்.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement