Advertisement

இந்தியா – ரஷ்யா நட்பு வாகன பேரணி 2018

மாஸ்கோ : இந்தியா – ரஷ்யா இடையேயான 70 ஆண்டு துாதரக உறவு மற்றும் இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா – ரஷ்யா நட்பு வாகன பேரணிக்கு திட்டமிடப்பட்டது. இதை நடத்தும் பொறுப்பு ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தை சேர்ந்த கலிங்கா மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பிடம் அளிக்கப்பட்டது. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை பிரபலப்படுத்தும் வகையில், இந்த பேரணி திட்டத்தில் அசர்பைஜான் மற்றும் ஈரான் நாடுகளும் இணைந்தன. இந்த வழித்தடம் ஈரானில் உள்ள சாபாகர் துறைமுகத்தில் துவங்கி டெக்ரான் வழியாக, காஸ்பியன் கடலை ஒட்டி அசர்பைஜான் நாட்டில் நுழைந்து அதன் பின் ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சென்றடையும். இதில் சாபாகர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழித்தடம், பழமையான பட்டு பாதை வழியாகவும் செல்கிறது. இந்த வழித்தடத்தை பிரபலப்படுத்த வாகன பேரணியை நடத்த நான்கு நாடுகளும் முடிவு செய்தன. முதல்கட்டமாக, இந்தியாவில் சட்டீஸ்கரில் பிப்., 19ம் தேதி துவங்கி பல மாநிலங்கள் வழியாக 23 நாட்களில் 8,933 கி.மீ., பயணம் செய்து டில்லியை அடைந்தது. இந்த பேரணியில் மகிந்த்ரா நிறுவனம் தனது வாகனங்களை வழங்கியது. இரண்டாவது கட்டமாக ஈரானில் உள்ள பாந்தர் அபாஸ் பகுதியில் ஏப்., 30ம் தேதி துவங்கிய மே, 15ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சென்றடைந்தது. மீண்டும் அதே பாதையில் ஈரானுக்கு வாகனங்கள் பயணம் செய்தன. பாந்தர் அபாஸ் பகுதியை ஜூன் 2ம் தேதி அடைந்தன. இதன்படி, 34 நாட்களில் 12 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் பயணம் செய்தன.
– தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement