Advertisement

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய “ முள்ளும் மலரும் “ நூல் வெளியீட்டு விழா ஜூலை முதல் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இது அவரது ஐந்தாவது நூலாகும். தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழக சார்பு நிலைப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தலைமை வகித்தார். இளவழகன் முருகன் நூலாய்வுரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் ரா.தினகரன் நூலினை வெளியிட ஜோஸ்கோ ஜிஎஸ்ஏ பயண ஏற்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் நாகை தங்கராசு முதற் படியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். தமிழகத் திரைப்பட – ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்.

அவர்தம் உரையில் இராமாயண – மகா பாரத இதிகாசங்களின் நயங்களை எடுத்துக் காட்டியதோடு ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை எழுதி ஆவணப்படுத்துங்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்தார். நூலாசிரியர் ஆண்டியப்பன் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப.அருணாசலம் வரவேற்புரை – வாழ்த்துரை ஆற்றியதோடு நிகழ்வினையும் நெறிப்படுத்தினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement