Advertisement

வெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி

நியூஸிலாந்து தலைநகரமான வெலிங்டனில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் 125 வது ஜெயந்தி சென்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிஞ்சி குமரன் கோவிலில் வெலிங்டனில் உள்ள அனுஷம் குடுமபத்தினரால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த அனுஷம் குடும்பம் ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரத்தன்று ஒன்று கூடி வேதங்கள் ஓதியும், அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தும் மஹா பெரியவாளை வழி படுகின்றனர்.

சனியன்று காலை 9 மணியளவில் பூஜை தொடங்கப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் மகேஷ் தலைமையில் சங்கல்பங்கள் செய்த பின் ஏகாதச ருத்ரம் ஓதப்பட்டு கலச தீர்த்தத்தை கொண்டு சிவனுக்கும் ,மகா பெரியவாளின் பாதுகைக்கும் எல்லா விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்ற மந்திரத்தை ஜபித்தவண்ணமிருந்தனர். பின்னர் அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து கீதங்கள் இசைத்து 3 மணியளவில் நிறைவு பெற்றது.

மறு நாள் ஞாயிறன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் செய்யப்பட்டது. அவ்வமயம் விநாயகருக்கும் நவக்ரஹங்களுக்கும் கலச தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மஹா பெரியவா பாதுகைக்கு அனைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்து பாதுகை மற்றும் அவரின் உருவ சிலை சப்பரம் மற்றும் பல்லக்கில் வைக்கப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து அர்ச்சனை செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நாள் பூஜையின் சிறப்பம்சமாக ஸ்ரீ காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேரலையில் வந்து பக்தர்களுக்கு ஆசிகள் அளித்து அறிவுரைகள் வழங்கி அருள் பாலித்தார். அவ்வமயம் அஙகுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் அனைவரும் பாடிய ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களை மகிழ்ச்சியுடன் கேட்டு ஆசீர்வதித்தார். வெளிநாட்டில் இப்படி எல்லோரும் மஹா பெரியவாள் மேல் பக்தியும் பூஜைகளும் நடப்பதை அறிந்து மிகவும் பாராட்டி பேசினார்.

இரண்டு நாட்களும் நிறைய பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பெரியவாளின் பேரருளை பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement