Advertisement

சிங்கப்பூரில் வெள்ளிரத உலா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றன. நாள்தோறும் இதிகாசக் காட்சிகள் – ஸ்ரீ கண்ணபிரான் லீலைகளைச் சித்தரிக்கும் அலங்காரத் தோற்றங்களில் பெருமாள் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. ஒவ்வொரு நாளும் இக்காட்சிகளைப் பற்றி ஆலயத் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ உ.வே.வாசுதேவ பட்டாச்சார்யார் தத்துவ விளக்கங்கள் தந்தது பல புதிய செய்திகளைப் பக்தர்கள் அறிந்து கொள்ள உதவின. நாள்தோறும் குட்டி உபந்யாசம் என்றே கூறலாம். இதைத் தவிர பி.ஜி.பி. திருமண மண்டப அரங்கில் இயல் – இசை – நாடகம் என முத்தமிழிலும் மொத்தமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு மண்டல காலம் இப்பகுதியே தெய்விக மணம் கமழ்ந்தது.

நிறைவாக ஜீன் நான்காம் தேதி காலை விநாயகர் பிரார்த்தனை – மகா சங்கல்பம் – புண்யாகவாசனம் – கும்ப ஆவாஹணம் – அக்னிப் பிரதிட்சை – பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் – மகா பூர்ணாஹீதி – சிறப்பு தீபாராதனை என வெகு விமரிசையாக நிகழ்வுகள் நடைபெற்றன. ஐந்தாம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை லட்சார்ச்சனை . பத்தாம் தேதி ஹோமம் - 1080 கலசங்கள் – சகஸ்ர கலச பூஜையும் சகஸ்ர கலச திருமஞ்சனமும் கண்குளிர நடைபெற்றன. புனித கடம் ஆலயம் வலம் வந்த போது பக்தர்களின் “ கோவிந்தா – நாராயணா “ என்ற கோஷம் மெய்சிலிர்க்க வைத்தது. திருப்பாவாடை சமர்ப்பணம் கிடைத்தற்கரிய காட்சி. மாலை சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். திருப்பனந்தாள் ஏ.விஸ்வநாதன் – பட்டமங்கலம் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரின் நாதஸ்வரத்திற்கு இடும்பவனம் கே.மணிகண்டன் – பட்டமங்கலம் எம்.கார்த்தி ஆகியோர் தவில் வாசிக்க தெய்விக இசையோடு வெள்ளி ரத ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டது. பக்தப் பெருமக்கள் ஆங்காங்கே வரிசை சமர்ப்பித்து வழிபட்டனர். சுருங்கக் கூறின் பசுமையான தெய்விக நினைவுகளை கும்பாபிஷேகமும் மண்டலாபிஷேகமும் பக்தர்கள் மனத்தில் பதித்தன எனலாம்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement