Advertisement

அமெரிக்க தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா

வட அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் மாகாணத்தில், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பாரதி கலை மன்றத்தின் ஓர் அங்கமாகத் திகழும் தமிழ் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மழலை முதல் எட்டு நிலைகள் வரையிலான குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் பேச்சு மற்றும் எழுத்துத் தமிழ் கற்று வருகின்றனர். ஹூஸ்டன் மாகாணத்தைச் சுற்றியுள்ள ஆறு நகரங்களில் இந்தப் பள்ளிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் கட்டிடக் கலைகள், வாழ்வு முறைகள் மற்றும் வணிக வெற்றிகளை எடுத்துரைக்கும் விதமாகப் பியர்லாந்து நகரில் சாம் கண்ணப்பன் அழகிய அருங்காட்சியினை நிறுவி உள்ளார். அருங்காட்சியகத்தில் உள்ள கலைப் பொருட்களையும் அதன் வரலாற்றினையும் வருங்காலச் சந்ததியினரான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கண்டு மகிழ சாம் கண்ணப்பன் அனுமதி அளித்து உதவினார். அதன் பொருட்டு பாரதி கலை மன்ற முன்னாள் தலைவர் திருவேங்கடம் ஆறுமுகம் உதவியுடன் கேட்டி தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் இளங்குழலி மணி மற்றும் தமிழ் பள்ளியின் தன்னார்வலர்கள், மாணவர்கள் அருங்காட்சியகத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தனர்.

சுற்றுலா தினத்தன்று பெற்றோர் மற்றும் மாணவர் அனைவரையும் சாம் கண்ணப்பன் வரவேற்று உபசரித்து, அருங்காட்சியகம் குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும் விவரித்தார். மதியம் இரண்டு மணியளவில் தொடங்கிய விரித்துரை மூன்று மணி வரை மிக இனிமையாகச் சென்றது. மாணவர்கள் ஹெய்டி விஸ்சின் விளக்கங்களுக்குச் செவி சாய்த்து அழகாகவும் அமைதியாகவும் ரசித்துப் பார்த்தனர். அது மட்டுமன்றி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நயம் மிக்க கலைப் பொருட்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பினர்.

அருங்காட்சியகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் திருமுருகர் வள்ளி தெய்வானை சிலைகள் குறித்த சாம் கண்ணப்பனின் விளக்கம் பெற்றோரையும் வியக்க வைத்தது எனில் அது மிகையல்ல. அதனையடுத்து பண்டைய தமிழ் மன்னர்கள் குறித்தும், இன்றைய தமிழ்நாட்டின் சிறப்புக் குறித்தும் தமிழ்ப் பள்ளியின் தன்னார்வலர்கள் வெற்றிச்செல்வன் கலியமூர்த்தி மற்றும் .சதீஷ் குமார் தொகுத்த காணொளி மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

இதனிடையே பியர்லாந்து மேயர் டாம் ரீட் வருகை, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் மிக அருமையான ஒரு நிகழ்வாக அமைந்தது. .மேயர் மற்றும் .ஹெய்டி இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரப் பெருமைகளைக் குறித்து வியந்து கூறிய சொற்கள், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக மக்களின் வாழ்வியலை மிக அருமையாக எடுத்துரைத்ததாகவே அமைந்தது. ஹெய்டி விஸ் மாணவர்களுக்கு மகாகவி பாரதியார் பற்றிய புதிர் விளையாட்டுக்களை ஏற்பாடு செய்து அதில் மாணவர்களை மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளச் செய்தார். அருங்காட்சியகத்தை விரிவு செய்வது குறித்த நிறுவனரின் திட்டங்களை பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. இந்த அருங்காட்சியக சுற்றுலாவின் இனிமையான நினைவுகள் கேட்டி தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாகப் பதியும் என்பதில் ஐயமில்லை.

- தினமலர் வாசகி இளங்குழலி மணி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement