Advertisement

தைவானில் தைப்பொங்கல் விழா 2018

நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நம் முன்னோர்கள் நூல்கள் பல படைத்தும், சங்கம் அமைத்து வளர்த்தது போல், சிறுதீவாம் தைவானில் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் தைவான் தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக 2018ஆம் ஆண்டின் பொங்கல் விழா தைபேயில் நடைபெற்றது.

ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் தைவான் தமிழ்ச்சங்க தலைவர் யூசி தலைமையில் துணைத்தலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் சங்க செயலாளர் ஆ.கு.பிரசண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றினர்.

பட்டிமன்றம்முன்னதாக ''தமிழை அதிகம் வளர்ப்பது தமிழக தமிழர்களா? புலம் பெயர் தமிழர்களா? ’’ எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இரா.சீனிவாசன் தலைமையில் தமிழக தமிழர்களே என மு.திருமாவளவன், கோ.கி.ராகவேந்திரா, வசந்தன் திருநாவுக்கரசு, புலம் பெயர் தமிழர்களே என முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்களான தயானந்தபிரபு, பவித்ரா, தமிழ் ஒளி சிறப்பாக பேசினர். தமிழை அதிகம் வளர்ப்பது புலம் பெயர் தமிழர்களே என நடுவர் தீர்ப்பளித்தார்.

தைவானின் அனைத்து நகரங்களில் இருந்தும் குறிப்பாக ஷிஞ்சு, தைச்சூங், கௌஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து வந்த நுற்றுக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்டனர். விழாவில் தைவான் தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் யுசி தலைமை உரை ஆற்றினார். முதன்மை விருந்தினராக இந்தியா தைபே அசோசியேசன் முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தேசிய தைவான் பல்கலைக்கழக சர்வதேச மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை திட்ட இயக்குனர் சுன் வேய் சென், ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழக சர்வதேச தொடர்பின் துணைத் தலைவர் மைக்கேல் டி.எஸ்.லீ, தேசிய தைபே தொழில் நுட்ப பல்கலைக்கழக சர்வதேச முனைவர் பட்ட திட்ட முதன்மை பேராசிரியர் ஷென் மிங் சென் விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

நடன நிகழ்ச்சிஅனைத்து நிகழ்ச்சிகளையும் சுப்புராஜ், பூங்கொடி தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக கீதாஞ்சலியின் அங்கிகாம் நடன குழுவின் சார்பாக பரதநாட்டிய நடனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நவரசா குழுவின் சீன-சப்பான் நடன கலைஞர்களின் அசத்தல் நடனம், ஸ்பெக்ட்ரம் டிவாஸ் நடனம் நடைபெற்றது. மேலும் தைவான் தமிழ்ச்சங்கதினால் நடத்தப்படும் விழுதுகள் தைபே மற்றும் ஷிஞ்சு பள்ளி மாணவ மாணவியரின் அசத்தலான நடனம், மகிழ்நநின் அசத்தல் திரைபடப்படல் நடனம், அழகு அமிர்தம் பவித்ரா, அம்மு சங்கரின் அசத்தலான பரதநாட்டியம். வைதேகி வர்மாவின் கதக் நடனம், பால்ராஜ் ரங்கா- தாரிணி, ரங்கா- ராஜா ஆகியோரின் தமிழ் பாடல் நடனம், ஜெரிமியின் ஊக்குலூலி (சீன கிட்டார்), புதியீடு குழுவினரின் "அரசியல் பேசாதே" என்ற நையாண்டி நாடகம் மற்றும் பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு ரியா சென் குழுவினரின் நடமும் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஷென் மிங் சென்னை பேச அழைத்த போது கூட்டத்தில் பெரும் ஆரவாரம் அவரின் முனைவர்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் ஏற்படுத்தினார். தைவான் தமிழ் சங்கத்தின் சாதனைகளை விளக்கும் விதமாக சிலநிமிட காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதனிடையே கொஞ்சும் மழலைச் செல்வங்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

தைவானில் தமிழ்த்தூறல்சங்கத்தின் எழுத்தாளர்களை வளர்க்கும் விதமாக தொடங்கப்பட்ட புத்தக வெளியீட்டின் இரண்டாவது முயற்சியாக மு.திருமாவளவன் எழுதிய ''தைவானில் தமிழ்த்தூறல்'' என்னும் கவிதை தொகுப்பு தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் யுசி வெளியிட துணைத்தலைவர் சங்கர் ராமன் பெற்றுக்கொண்டார். தைவானில் வெளியிடப்படும் இந்நூல் நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு பெருமையைச் சேர்க்கும். ஒரு தமிழரின் கற்பனைத் திறனானது கடல் தாண்டிய தேசத்திலும் கவிதை வடிவில் உலாவருவது தமிழுக்குமே தலைசிறந்த பெருமையாகும்.


பரிசுஇதனை தொடர்ந்து பலவேறு நாடுகளிலும் நம் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் மாளிகையிலும் புல்லாங்குழல் வாசித்து அப்போதைய குடியரசு தலைவர் ஏபிஜெ.அப்துல் கலாமால் பாராட்டு பெற்றவரும் கவிஞர் யு சியின் செயலருமான மன்னி ஷுவின காதிற்கினிய தமிழ்ப்பாடல்களின் புல்லாங்குழல் இசை பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் வரைபட போட்டியில் வென்றவர்களுக்கும், சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 3 நிமிட தமிழ்- ஆங்கில பேச்சுப்போட்டியில் வென்ற கி. ராகவேந்திரா, தி.க.இசையாழினி, ரெனி அஜோய், சுப்புராஜ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

ரமேஷ் பெருமாளின் ஒப்புப்போலிக்கலை(மிமிக்ரி)- நடன நிகழ்ச்சி, சிலப்பதிகாரத்திலிருந்து, கண்ணகி "வழக்குரைத்த கதையை தனி நடிப்பாக நடித்துக் காட்டிய இசையாழினி, தன் தனித்துவ குரலால் கவர்த்திழுத்த யாசிர், புல்லாங்குழல் இசையினால் மனதை வருடிய இனியன், தன் இனிய குரலால் கவர்ந்திழுத்த சங்கரி பிரியா ஆகியோர் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.


இறுதியாக விழா ஏற்பாடுகளை கவனித்த தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி, தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் சு.பொன்முகுந்தன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து, துணை பொருளாளர் பூபதி சுப்பிரமணி ஆகியோருக்கும் நன்றி கூறினார்.

- நமது செய்தியாளர் இரமேஷ் பரமசிவம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement