Advertisement

ஆப்ரிக்க முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

லேகோஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ பூஜை மற்றும் 108 அகல் தீபமேற்றி தமிழ் மக்கள் சிறப்பாக வழிபட்டனர். ஆண்கள் மற்றும் குழந்தைகளும் தீபமேற்றி குடும்பத்துடன் கோயில் வளாகத்தில் கொண்டாடினர்.

காலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலை தீபமேற்றி வழிபட காலையில் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டது. முருகன் வேல் வடிவினுள் மயில் நுனி ஏந்திய விளக்கு அமைக்கப்பட்ட கோலம் போடப்பட்டது. கலர் பவுடரால் வண்ணமும் தீட்டப்பட்டு தீபம் ஏற்ற ஆயத்தம் செய்யப்பட்டது. 108 விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம், திரி மற்றும் நல்லெண்ணெய் விட்டு மாலை தீபமேற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டது.


மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற ஆரம்பிக்கப்பட்டது. தீபத்தை முருகன் மற்றும் லிங்கேஸ்வரர் சன்னதிக்கு முன் இருந்த வண்ண கோலத்தில் அடுக்கி அந்தி சாயும் நேரம் தீப ஒளியில் மிளிர்ந்தது. பிறகு வைரவன் பட்டர் சுண்டல், பொறி உருண்டை, நெய் அப்பம் ஆகியவற்றை நைவேத்தியம் இட்டு மகா ஆரத்தியும் செய்தார்.

தீப ஒளியின் பிரகாசம் ஆரோக்கியம், ஐஸ்வர்யரியம், கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றில் படர்ந்து நல்ல முன்னேற்றம் பெற சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்பு பிரசாதம் பெற்று தமிழ் மக்கள் இனிதே நிகழ்வை நிறைவு செய்தனர்.

டிசம்பர் 19 காலை சனிபெயர்ச்சி சிறப்பு பூஜை மற்றும் நவக்கிரக சனி பகவானிடம் சிறப்பு அர்ச்சனை பற்றியும் கோவில் குழுவின் சார்பில் சித்ரா லஷ்மண் விவரித்தார்.

- நைஜீரியா தமிழ் சங்கம் சார்பாக ஸ்ரீவித்யா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement