Advertisement

நைஜீரியா, லேகோஸில் நவீன நவராத்திரி கொண்டாட்டம்

இந்த நவராத்திரி பண்டிகைக்கு லேகோஸ் நகரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மாதர்கள் ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்தும், துதிபாடியும் நவராத்திரியின் மகிமையில் லயித்தனர். 21 ம் தேதி காலை 10 மணிக்கு துர்க்கைக்கு காப்பு கட்டி, லேகோஸ் முருகன் கோவிலில் அடுக்கப்பட்டிருந்த கொலுவின் மத்தியில் கலசம் வைத்து நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.அன்று முதல் 29ம் தேதி (வெள்ளி கிழமை) வரை தினமும் கொலுவின் முன் குத்துவிளக்கு தீபமேற்றி பெண்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா பஞ்சரத்ன மாலை, மஹிஷாஸூரமர்த்தினீ ஸ்தோத்திரம், ஸ்ரீ காமாட்சி துக்க: நிவாரணி மற்றும் அஷ்டலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து அம்பாளை வழிபட்டனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை இந்த நவராத்திரி பண்டிகைக்கு கோவிலில் பாராயணம் செய்ய விருப்பமுள்ள பெண்களுக்கு லதா ராஜன் பயிற்சி அளித்தார்.


மேலும் தமிழ் நாட்டை விட்டு கடல் கடந்து வாழ்ந்தாலும் நமது அடுத்த சந்ததியினருக்கு நமது மதத்தின் சிறப்பும் நாட்டின் பாரம்பரியத்தையும் அளிப்பதில் லேகோஸ் பெண்களும் நைஜீரியா தமிழ் சங்கமும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சவிதா ரமேஷ் 7 முதல் 12 வயது வரை உள்ள தமிழ் குழந்தைகளுக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கடந்த ஆண்டு இதே நவராத்திரி நிறைவடைந்த நிலையில் துவங்கினார். இந்த வருடம் சரஸ்வதி பூஜை அன்று இக்குழந்தைகள் பெரியவர்களுக்கு நிகராக அம்பாள் நாமத்தை சொன்ன நிகழ்வு விழாவிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்தது. இந்த குழந்தைகளின் வடிவில் அம்பாள் எழுந்தருளி எங்களின் வழிபாட்டினை ஏற்றதாக மகிழ்ச்சியை அளித்தது.

அடுத்து கொலுவிற்கு வருவோம். தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், வள்ளி திருமணம் செட், சிறியது முதல் பெரியது வரை விதவிதமான பொம்மைகள் காணப்பட்டன. இவை கடந்த பத்து ஆண்டுகளில் பலர் பொது கொலுவிற்காக தாராளமாக கொடுத்தது. இடம்பெயரும் மக்கள் அதிகம் காணப்படும் லேகோஸ் மாநகரத்தில், இரக்க குணமும் பரந்த உள்ளம் நிறைந்த மேன்மக்களுக்கு என்றுமே குறைவில்லை. இதை பலப்படுத்தும் விதமே கோயிலுக்கு வரும் நன்கொடை. இந்த வருடம் கொலு பொம்மைகள் பல கலைநயத்துடன் பார்த்து பார்த்து வாங்கி தந்துள்ளனர். அவை பின்வருமாறு: கந்தன் காவடி செட், காஞ்சிபுரம் கருட சேவை செட், ராம ஜனனம் செட். புது கொலு மண்டபத்தில் இப்பொம்மைகள் காட்சி அளிக்க பார்ப்பவர்களுக்கு மிகவும் பரவசம் அளித்தது.

வருடா வருடம் லேகோஸில் நடக்கும் நவராத்திரி விழாவிலிருந்து இந்த வருடம் எவ்வாறு சிறப்பு வாய்ந்தது என்பதை விவரிக்கும் முன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குழுவினரை நைஜீரியா தமிழ் சங்கம் பாராட்டுக்களுடன் பெருமைப்படுத்த இந்த களத்தை பயன்படுத்திக் கொள்கிறது. சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டார்கள். சித்ரா லஷ்மண், பத்மா பழனி, மாதவி ரவி ஆகியோர். அற்புத சிந்தனையை அம்பாளின் அலங்காரத்தில் காட்டி அனைவருக்கும் அம்மனின் அருள் மட்டுமின்றி அழகிலும் லயிக்க செய்து விட்டார்கள். மேலும் ஒவ்வொரு தினமும் வழங்கப்பட்ட பிரசாதம் அன்றைய தினத்து அலங்காரத்திற்கு ஏற்றார்போல் ஏற்பாடு செய்திருந்ததுமுதல் நாள் நெல் அலங்காரம் - பிரசாதம் அரிசி பாயசம்.2 ம் நாள் ஏலக்காய் அலங்காரம் - பிரசாதம் சர்க்கரை பொங்கல்3 ம் நாள் தோல் நீக்கிய பாதாம் அலங்காரம் - பிரசாதம் ரவா கேசரி


4 ம் நாள் முழு பாதாம் அலங்காரம் - பிரசாதம் பாதாம் பர்பி5 ம் நாள் முந்திரி அலங்காரம் - பிரசாதம் முந்திரி (காஜு) கத்லி6 ம் நாள் உலர்ந்த பழங்கள்7, 8 மற்றும் 9 ம் நாள் செந்தாமரை லட்சுமி, மஹிஷாஸூரமர்த்தினீ மற்றும் வெண் தாமரை சரஸ்வதி அலங்காரத்தில் நவராத்திரி 9 நாளும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. சரஸ்வதி பூஜை தினத்தன்று கூடியிருந்த பள்ளி மாணவர்களுக்கு நோட்புக்-பென்சில் வழங்கப்பட்டது.30ம் தேதி சனிக்கிழமை விஜயதசமி யன்று புதிதாக பள்ளி ஆரம்பிக்க ஆயத்தமாக இருந்த குழந்தைகளுக்கு அக்ஷரவ்யாசம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒன்பது நாள் வைபவத்தை திரு வைரவன் பட்டர் அவர்கள் ஆகம விதிப்படி ஷ்ரத்தா பக்தியுடன் சிறப்பாக நடத்தியது நெகிழ வைத்தது.

இக்கோவில் நிகழ்வுகள் அல்லாது லேகோஸ் வாழ் தமிழ்க்குடியினர் சிலர் அவரவர் குல வழக்கப்படி அவர்கள் வீட்டில் கொலு வைத்தும், பெண்கள் ஒருவரை ஒருவர் தத்தம் வீட்டிற்கு அழைத்து வெற்றிலை பாக்கு தாம்பூலம் வழங்கி தமிழ் கலாச்சாரத்தை ஆழ்ந்து பின்பற்றி நவீனத்துடன் ஒன்றிய மரபு வழி பண்பையும் விடாமல் கடைப்பிடித்து அகமும் புறமும் மகிழ்ந்தனர்.

- நைஜீரியா தமிழ் சங்கம் சார்பாக தினமலர் வாசகி ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement