Advertisement

சிங்கப்பூரில் கம்பன் விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஜீலை 16 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நான்காவது கம்பன் விழாவை முத்தமிழ் விழா போல மிகச் சிறப்பாக நடத்தியது. தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகித்தார். அமேயா ஹரிதாசன், ரோஷினி ஷாஜீ ஆகியோரின் பரத நாட்டியம் விழாவை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மாணவ சமுதாயத்திடம் கம்பன் கவிதைகளைக் கொண்டு செல்லும் வண்ணம் உயர்நிலைப் பள்ளி மாணவரிடை கம்பன் கவிதைகளை ஒப்புவிக்கும் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் எழுபதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் பரிசு பெற்றோர் விழா மேடையில் கவிச்சக்ரவர்த்தியின் பாடலை நயத்தோடு பிழையின்றி ஒப்புவித்து பலத்த கரவொலி பெற்றனர். அஜீத் ஸ்ரீலட்சுமி, உ. தர்ஷணி, லோகநாதன் பார்கவி ஆகியோர் பரிசு பெற்றனர். சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய நாடக மன்றத்தினர் “ சூர்ப்பனகை “ என்ற நாடகத்தை நடத்திப் பாராட்டுப் பெற்றனர். சிங்கப்பூர்த் தமிழறிஞர் செல்லக் கிருஷ்ணன் கம்பன் கவிநயம் பற்றி உரையாற்றினார். சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், நடுவர்கள், நன்கொடையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்ததோடு விழா முடியும் வரை அரங்கிலிருந்து கம்பன் கவியமுதைச் சுவைத்தார். விழாவில் தமிழகப் பிரபல இலக்கியச் சொற்பொழிவாளர் வழக்கறிஞர் த.இராமலிங்கம் “ கம்பன் சொன்னான் “ என்ற தலைப்பில் கம்ப ராமாயணத்தின் கவிநயம், பொருள் வளம், அறிவியல் சிந்தனை, குடும்ப உறவு போன்ற பல்வேறு அம்சங்களை விளக்கிச் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக செயலாளர் சுப.அருணாசலம் வரவேற்புரை ஆற்றியதோடு நிகழ்வினையும் தொகுத்து வழங்கினார். துணைச் செயலாளர் கிருத்திகா நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement