Advertisement

பக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்

ஸ்ரீ கிருஷ்ணனின் தாரக மந்திரம் என்று கூறப்படுகின்ற ‘ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! கிருஷ்ண கிருஷண ஹரே ஹரே! ஹரே ராமா! ஹரே ராமா! ராமா ராமா ஹரே ஹரே! என்ற மந்திரத்தை அனைவரும் அறிந்து கொண்டு, அதனை தியானித்து அதன் பலனை அடைய வேண்டும் என்ற அரும் பெரும் நோக்கத்தில் பக்தி வேதாந்தா மானோர் என்றதொரு அமைப்பினை 1973 ஆம் ஆண்டு பக்தி வேதாந்தா சுவாமி பிரபு பாதா ஸ்தாபித்துள்ளார். காலப் போக்கில் இந்த அமைப்பு ‘இஸ்கான்’ என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டதாக செய்தி குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. லண்டன் வரும் வாய்ப்பு கிடைக்கும் மெய்யன்பர்கள் இத்தலத்திற்குச் சென்று ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபம் செய்வதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டு.தம் வாழ்நாளில் அதனை கடைபிடித்து வந்தால், அதனால் கிடைக்கப்பெறும் மகிமையை நேரில் தாமே உணர்ந்து கொள்வர் என்பது திண்ணம்.

இஸ்கான் பக்தி வேதாந்த மானோர் தாரம் என்ற திருத்தலம் இங்கிலாந்தில் ஹில் பீல்டு, ரெட்லெட், வாட்போர்டு என்ற இடத்தில் சுமார் 5 ஏக்கர் நிலபரப்பில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் பரந்த வளாகம் எங்கும் பசுமையைக் காணலாம். ஆம் பரந்த நிலப்பரப்பில் புல் தரைகளும் மலர் செடிகளும் கண்களை கவரும் வண்ணம் உள்ளன. அடர்ந்த காடுகளுடன் கூடிய இத்திருத்தலத்தின் சுற்றுப்புற வளாகத்தில் காலார நடந்த செல்வதற்கு சிறப்பு வழித்தடங்கள் உள்ளன. அவ்வாறு நடந்த வண்ணம் அங்குள்ள எழில் மிகு காட்சியுடன் திகழும் பெரிய ஏரியினை பார்த்து மகிழலாம். களைப்பு ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள உணவுக் கூடத்தில் ஆரோக்கியமான சைவ உணவுகள் கிடைக்கின்றன. மற்றும் பழங்கள் பச்சைக் காய்கறிகள் முதலியனைவும் இங்கு கிடைக்கின்றன. உபசரிப்பு வளாகத்தின் அருகில் அமைந்துள்ள விற்பனைக்கூடத்தில், கலைவண்ணத்துடன் திகழும் பரிசுப் பொருட்கள், ஆன்மிகப் புத்தகங்கள், கண்கவர் ஆடை வகைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். லண்டன் போன்ற பெரு நகரங்களில் இருந்து வாகனங்களில் வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தகுந்த இடவசதிகள் உள்ளன.


வேதங்கள் பற்றிய ஞானம் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இங்கு கற்றுக் கொடுக்கப்படும் ஆன்மிகச் செய்திகளைப் பயில்வதன் மூலம் பகவத்கீதையைப் பற்றி முழு ஞானம் பெறுவதோடு அதனை தம் வாழ்விலும் மேற்கொள்வர் என்பது திண்ணம். மேலும் இங்கு நடைபெறும் யோகா வகுப்புக்கள்,தியானம், கிருஷ்ண மந்திரம் ஜெபித்தல் ஆகியவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு பயனும் பெறலாம். இங்குள்ள கோசாலை என்று கூறப்படுகின்ற பசுமடம் மிகுந்த பெரிய அளவில் இருக்கின்றது. சிறுவர் விளையாடுவதற்கு பிரத்தியேக விளையாடும் இடங்களும், பெரியவர்களின் பொழுது போக்கிற்கு பூங்காவனமும் அமைந்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய செய்தியாகும். பக்தியுடன் திருத்தலத்திற்கு வந்திருந்தாலும் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னதானம் மிக சிறப்பாக நடைபெறுகின்றது.

இத்தலத்தின் முக்கிய ஹாலில் இராதா கிருஷ்ணரையும் அருகில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோரையும் வணங்கிச் செல்லலாம். திருஉருவச் சிலைகள் மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதனைக் காணலாம். தூளி கொண்டு விசிறும் காட்சி மிக ரம்மியமாக இருக்கின்றது. ஹாலில் உட்கார்ந்து, ஹரே கிருஷ்ண நாம வாளியை ஜெபிக்கலாம். இங்கு முழு உணர்வுடன் கூடிய நிலையில் பக்திபரவசத்துடன் மெய்யன்பர்கள் தம்மையும் மறந்த நிலையில் கிருஷ்ணர் ராமர் நாமங்களை ஜெபிக்கின்றனர்.

இத்திருத்தலத்தில் தினந்தோறும் மங்கல ஆரத்தி, துளசி ஆரத்தி, குருபூஜை ராஜபோக ஆரத்தி, தூப ஆரத்தி, சந்தியா ஆரத்தி, சயன ஆரத்தி போன்ற ஆர்த்திகள் ஏற்கெனவே திருத்தலத்தின் வரையறுக்கப்பட்ட நேரங்களில் நடைபெறுகின்றன. மேலும் தினமும் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத்கீதை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இது தவிர்த்து இங்குள்ள பக்தி வேதாந்தா மானோர் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு வருடாந்திர அடிப்படையில் ஆன்மிக வகுப்புக்களும் நடைபெறுகின்றன.


இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 04.30 முதல் இரவு 21.30 மணி வரை. மேலும் திருத்தலம் பற்றிய தகவல் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 44 1923 851000.

- ச.பொன்ராஜ்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement