Advertisement

நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு

அம்பாங்: மலேசியா, சிலாங்கூர் மாநிலம் அம்பங்கில் உள்ள ஜெ.பி.எஸ்.மண்டபத்தில் மலேசிய இருமேனி முஸ்லீம் ஜமாஅத்தின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் குடும்பத்தின விழா ஹாஜி முஹம்மது ரஃபீக் தலைமையில் நடைப்பெற்றது. மாணவி நூர் வஹீதா பிந்தி முஹம்மது அஸ்மின் கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ஷரீஃபுதீன் என்ற சைஃபுதீன் பின் ஹாஜா கமருஸ் ஸமான் வரவேற்றார். மாணவ - மாணவியரின் இஸ்லாமிய கீதத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உஸ்தாத் கம்பம் பீர் முஹம்மது, தீன் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் முஹம்மது சிராஜுதீன், டாக்டர் நாதர் கான், ஜொகூர் அப்துல் லத்தீப், அஹமது ஜலாலுதீன், ஈப்போ நாசி வாங்க தமீம் அன்சாரி, அலோர் ஸ்டார் அனீஸ் அஹமது, சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து இருமேனி ஜமாஅத் செயலாளர் சாகுபர் சாதிக், ஷம்சு ரிஃபாயா குடும்பத்தினர் உட்பட சுமார் எண்ணூறு பேர் கலந்து கொண்டனர்.

மதிய உணவுக்குப் பிறகு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பிள்ளைகளுக்கு பிடித்தமான சாப்பாடு வீட்டுச் சாப்பாடா...? வெளிச்சாப்பாடா...? எனும் நகைச்சுவையான தலைப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு உஸ்தாத் முபாரக் அலீ நடுவராக இருந்தார். ஹாஜி பி.எஸ்.எம்.ஷாஹுல் ஹமீது, கவிஞர் செய்யது உஸ்மான் ஆகியோர் வீட்டுச் சாப்பாடு எனும் அணியில் பேசும்போது, பிள்ளைகள் அம்மா சமைத்துக் கொடுக்கும் வீட்டுச் சமையலைத்தான் விரும்பி உண்பார்கள் ஆனால், பெற்றோரோ தங்களுடைய சுயநலத்துக்காக தாங்கள் மட்டுமல்லாது பிள்ளைகளையும் வெளியில் அழைத்துச் சென்று உணவு வாங்கி சாப்பிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசினர். முஹம்மது சுபைர், ராஜா நஸ்ருதீன் ஆகியோர் வெளிச் சாப்பாடு எனும் அணியில் பேசும்போது, ஆண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் பெண்களும் சிலபேர் வேலைக்குச் செல்கிறார்கள் அல்லது மற்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் . நிலைமை இப்படி இருக்க, தினம் தோறும் வீட்டில் சமைப்பது சுலபமில்லை. ஆதலால் இதை புரிந்து கொண்ட பிள்ளைகள் வெளியில் சென்று சாப்பிடுவதையே விரும்புகிறார்கள் என்று முதல் அணியினருக்கு மறுப்புத் தெரிவித்துப் பேசினர். இறுதியாக தீர்ப்பு வழங்கிய நடுவர், இந்த நிகழ்ச்சிக்கு காலையிலேயே வந்துவிட்டேன். இங்கே வந்திருக்கக் கூடிய முப்பத்து இரண்டு பிள்ளைகளிடம் உங்களுக்குத் பிடித்தமான உணவு அம்மா சமைத்துத் தரும் வீட்டு உணவா அல்லது வெளியில் வாங்கிச் சாப்பிடும் சாப்பாடா என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினேன். அப்போது முப்பது பிள்ளைகள் அம்மா கையால் சாப்பிடுவதையே விரும்புவதாகச் சொன்னார்கள். எனவே, பிள்ளைகளின் விரும்புவது வீட்டுச் சாப்பாடுதான் என்பதாக தீர்ப்பு வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் கூப்பன்கள் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது. செய்யது முபாரக் பின் கமால் தீன் நன்றி கூறினார்.

- தினமலர் வாசகர் இருமேனி எஸ்.சையது உஸ்மான்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement