Advertisement

மஸ்கட்டில் இந்திய நடன நிகழ்ச்சி; இந்திய தூதர் பங்கேற்பு

மஸ்கட் : மஸ்கட்டில் நடந்த இந்திய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் இந்திரமணி பாண்டே, அவரது மனைவி சுஷ்மா பாண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மஸ்கட்டில் இந்திய இசை மற்றும் கலையை மாணவ, மாணவிகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று பயிற்சியளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வரும் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவது வழக்கம்.


அதேபோல் இந்த ஆண்டும் மாணவ, மாணவியர் தங்களது நடனத் திறமையை பொதுமக்களின் முன்பு வெளிப்படுத்தினர். சிறப்பான முறையில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவியருக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.


அப்போது பேசிய இந்திய தூதர் இந்திரமணி பாண்டே, மாணவ, மாணவியர் சிறப்பான முறையில் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியா கலை, கலாச்சாரத்தில் மிகவும் பாரம்பரிய மிக்க ஒரு நாடு. வெளிநாட்டுக்கு வந்தாலும் இந்திய கலை, கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கலையானது ஓமன் நாட்டில் வசித்து வரும் பிற நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் நமது பாரம்பர்யம், பண்பாடு இவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய முயற்சிகளுக்கு இந்திய தூதரகம் தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என்றார்.


தொடர்ந்து இந்திய தூதர் மற்றும் அவரது மனைவிக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு இந்திய தூதர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பயிற்சி முடித்த மாணவ, மாணவியர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement