Advertisement

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2017: மானுடம் போற்றும் மாணவர்கள் – இலக்கிய நிகழ்வு

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளை தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக ஏப்ரல் 16 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் “ மானுடம் போற்றும் மாணவர்கள் “ என்ற இலக்கிய நிகழ்வினை நடத்தியது. சிநேகா முரளியின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. சங்கத் தலைவர் மு.அ.காதர் தலைமை வகித்தார். சிங்கப்பூர்த் தமிழறிஞர்களின் சேவை பற்றிய காணொளிக் காட்சி அடுத்து இடம் பெற்றது. “ மொழி எதற்கு, தமிழ் எதற்கு “ என்ற தலைப்பில் தமிழின் சிறப்பையும் தமிழறிஞர்களின் மாண்பு பற்றியும் சாந்தினி, இன்பா, பிரேமா மகாலிங்கம், தமிழ்ச் செல்வி, பானு சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உரையாடல் நிகழ்த்தினர். புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிங்கப்பூரில் தமிழ் மொழிக்குச் சிறப்பாகச் சேவையாற்றும் தமிழறிஞர்களுக்கு “ ஜமாலியன் விருது “ வழங்கி ஆண்டுதோறும் சங்கம் கவுரவிக்கிறது. இந்த ஆண்டு சிங்கப்பூர் கற்றல், கற்பித்தல் குழுத் துணைத் தலைவரும் கல்வியாளருமான சந்துரு இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு விருந்தினர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கவுரவித்தார். மாலை மாற்றுப் பாடல் காணொளியும் இடம் பெற்றது. ஜமால் முகமது கல்லூரி முன்னாள் துணைத் தலைவர் பீ .மு. மன்சூர் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் மாணவர்களின் அறிவாற்றல், கூர் நோக்கு பற்றிப் பல சான்றுகளுடன் எடுத்துரைத்து முனைவர் பட்ட ஆய்வுக்குகந்த அளவு மாணவர்களின் ஆண்டு மலர்க் கட்டுரைகளும் கவிதைகளும் உள்ளன எனக் குறிப்பிட்டார். சிறப்புரையாளரை பேராசிரியர் அமானுல்லாஹ் அறிமுகம் செய்து வைத்தார். அ.ஃபரீஜ் முஹமது நிகழ்வினை நெறிப்படுத்தினார். மு.அ.காதர் நன்றி கூறினார்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement