Advertisement

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: அனைத்து பள்ளிகளிலும், கட்டாயம் கண்காணிப்பு கேமரா அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும், கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாகப் பொருத்த உத்தரவிட வேண்டும். இதனால், பள்ளிகளில் நடைபெறும் துன்புறுத்தல்கள் மற்றும் வேண்டத்தகாத செயல்பாடுகள் தவிர்க்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள், முழுமையாக தடுக்க முடியும்.
மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் முறைகேடாக நடப்பது குறையும். எனவே, அனைத்து பள்ளிகள், கல்வி நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, த்தியமில்லாத ஒன்று என, பள்ளிக் கல்வித்துறை செயலர், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்பது, கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
அந்த நிதிச்சுமையை, பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் கல்வி கட்டணத்தில் தான் மறைமுகமாக திணிப்பர். இதனால், மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு விடும் என்பது, தமிழக அரசின் வாதமாக உள்ளது.
எனவே, பொது நலனில் அக்கறை கொண்ட ஒருவர், அனைத்து பள்ளிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, கோரியுள்ள மனுவை விசாரிப்பது, அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது.
அதேபோல், அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, நிர்ப்பந்திக்கவும் முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆனால், பள்ளி வளாகத்தை, முழுமையாக கண்காணிக்க நினைக்கும், பள்ளி நிர்வாகங்கள், தங்களுக்கு தேவை என நினைத்தால், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement