Advertisement

மாணவியருக்கு உதவித் தொகை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தேசிய பெண் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவியரின் விபரங்களை மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
அதை பரிசீலித்து, நிதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அலங்காநல்லுார் அருகே அழகாபுரி கருப்பையா தாக்கல் செய்த பொது நல மனு:
ஏழை மாணவிகள் பள்ளி படிப்பை இடையில் நிறுத்துவதை தடுக்க, தேசிய பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு 2008 ல் கொண்டுவந்தது. இந்த உதவித் தொகை எட்டாம் வகுப்பு முடித்த 14 முதல் 18 வயதுடைய மாணவிகள் மேலும் படிப்பை தொடரும் வகையில் வழங்கப்படுகிறது.
2008- 2009 முதல் 2016-17 கல்வியாண்டு வரை தமிழகத்தில் தகுதியான மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை. தொகையை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. மத்திய மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர் பதில் மனு: 2011-12 ல் உதவித் தொகை வழங்க முடியவில்லை. தமிழக அரசிடமிருந்து சரியான விபரங்கள் வரவில்லை.
இதனால் 2016 நவம்பரில் கணக்கை முடித்து, உரிய கணக்கில் தொகை சேர்க்கப்பட்டது. தமிழக அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினோம். அவர்களிடமிருந்து 2017 ஏப்ரலில் தான் விபரங்கள் வந்தது. 2013-14, 2014-15 கல்வியாண்டிற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
2008-2009 முதல் உதவித் தொகை வழங்கவில்லை என மனுதாரர் கூறுவது சரியல்ல. திட்டம் துவங்கியது முதல் 2017 வரை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 792 மாணவியருக்கு முதிர்வு ஊக்கத்தொகை 126.73 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப் பிட்டார்.
நீதிபதிகள்: இத்திட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க முடியாது. பயனாளிகள் படிப்பை முடித்து வெளியில் சென்றதால் அவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தற்போதைய பயனாளிகள் பற்றிய தகவல்களை சேகரித்து மத்திய மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதை அவர்கள் பரிசீலித்து, நிதி ஒதுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement