Advertisement

கல்வி வளர்ச்சி நாள் விழாவில் எழுச்சி

திருப்பூர்: முன்னாள் முதல்வர் காமராஜரின், 115வது பிறந்த நாள் விழா, திருப்பூர் வட்டாரத்தில், கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர், ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவுக்கு, ஏ.வி.பி., கல்வி நிறுவன சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்து, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்ற தலைப்பில் பேசினார். காமராஜரின் அரசியல் வாழ்வு குறித்து, பள்ளி முதல்வர் பிரியா பேசினார்.
‘கல்வியில் உச்சம் பெற பெரிதும் துணையாக இருப்பது ஆசிரியர்களா, அறிவு முதிர்ச்சியா, அன்றாட பயிற்சியா’ என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. மாறுவேட போட்டி, பேச்சு மற்றும் கட்டுரை, ஓவியப்போட்டிள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
அவிநாசி அருகே அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, கிராம கல்விக்குழு தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை தனபாக்கியம் வரவேற்றார். காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி, மரியாதை செய்யப்பட்டது.
காமராஜர் குறித்து, மாணவ மாணவியர் பேசினர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர சேதுபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாத்திமா பீவி, முன்னாள் மாணவர் பேரவை ராமலிங்கம், காமராஜ், மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளியில், காமராஜரின், 115வது பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டது. விழாவில், காமராஜர் வேடமணிந்த மாணவ, மாணவியர், அவரது வாழ்க்கை வரலாறு பற்றி கூறினர். கவிதைகள் பாடினர். விவசாயத்தின் மேன்மையை, பசுமை புரட்சி நாளை உணர்த்தும் விதமாக, மாணவர்கள் பச்சை நிற உடையணிந்து காணப்பட்டனர்.
பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். · திருப்பூர், செல்லம் நகர் மாநகராட்சி பள்ளியில் நடந்த விழாவுக்கு, முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பத்மா வரவேற்றார்.காமராஜரின் வாழ்க்கை வரலாறை, மாணவ, மாணவியர் நடித்து காட்டினர்.
கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மருதையப்பர், பாரப்பாளையம் ஐயப்பா சேவா சங்க தலைவர் சுனில்குமார், செயலாளர் பழனிவேல், பொருளாளர் லோகநாதன், சங்கர் கணேஷ் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் நன்றி கூறினார்.
திருப்பூர், காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி நடத்தப்பட்டது. ‘நம் தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது கல்வியா, கலாசாரமா’ என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் சுமதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பேசினர்.
திருப்பூர், தென்னம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், நடந்த விழாவில், பெற்றோர் ஆசிரிய சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், திருப்பூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு, ‘கருப்பு காந்தி காமராசர்’ என்ற தலைப்பில் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. முதலிடம் பிடித்த, அபிநயா, ஹேமலதா, முருகன், ரிதன்யா ஆகியோருக்கு பரிசளிக்கப்பட்டது. பரிசுகளை திருப்பூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
திருப்பூர், கொங்கு நகர் மெயின் ரோடு, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலை ப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் காமராஜரை நினைவு கூறும் வகையில், அவரது செயல்பாடுகள் குறித்து பேசினர். முன்னதாக காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை யாசிரியை மலர்விழி தலைமை வகித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
திருப்பூர், வடக்கு பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் பட்டுலிங்கம் தலைமை வகித்தார். காமராஜர் போன்ற முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பேரணியாக சென்றனர். அவர் பதவிக் காலத்தில் ஏற்படுத்திய திட்டங்கள், கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து வாசகம் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement