Advertisement

பள்ளிகளில் இலவச இடத்துக்கு விண்ணப்பித்தோருக்கு வாய்ப்பு!

காஞ்சிபுரம் : தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் நிரம்பாத, 21 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மேலும் ஒரு வாய்ப்பை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
காலியிடம் உள்ள, 21 பள்ளிகளின் பெயர் பட்டியலையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
முந்தைய ஆண்டுகளில் இஷ்டம் போல் தனியார் பள்ளிகள் நடந்து கொண்டது போல இல்லாமல், நடப்பாண்டில் கெடுபிடி விதிகளை கல்வித்துறை ஏற்படுத்தியது.இதனால், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. உடனுக்குடன் ஒப்புகை சீட்டு பெற்றோரிடம் இதில் வழங்கப்பட்டது.
தனியார் பள்ளியில், 25 சதவீத இடத்தை காட்டிலும் அதிகளவில், விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் மூலம் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
குலுக்கல் நடைபெறும் போது, கல்வி அதிகாரி, பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி, பெற்றோர் உடன் இருக்க வேண்டும். மேலும், குலுக்கல் நடைபெறுவதை, ’வீடியோ’வாகவும் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீடு
அவ்வாறு, பள்ளி நுழைவு நிலை வகுப்பிற்கு, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், மே 31ல் பள்ளி முன் ஒட்டப்பட்டது. பலர் தங்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை என, வருத்தமடைந்தனர்.
தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு சேர்க்கை நடத்த தயாரானது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பல குழந்தைகளின் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருந்த குழந்தைகளையும் தனியார் பள்ளிகள் அழைத்தன.
ஆனாலும், இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும் அந்த குழந்தைகளின் பெற்றோர் சேர்க்கை நடத்தவில்லை.காரணம், இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், 7,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, பல வித கட்டணங்களாக தனியார் பள்ளிகள் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
நலிவடைந்த பெற்றோரால், குறைந்தபட்சம், 5,000 ரூபாய் கூட செலுத்த முடியாத நிலையில், 10 ஆயிரம் ரூபாய் எவ்வாறு செலுத்த முடியும் என, கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மழலையர் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்னமும் காலியாக உள்ள இடங்களை, உடனடியாக நிரப்ப, கல்வித்துறை மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது, 11 மெட்ரிக் பள்ளி, 10 மழலையர் பள்ளி என, 21 பள்ளிகளில் இன்னமும், 25 சதவீத இட ஒதுக்கீடு நிரம்பவில்லை என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவிக்கிறது.
குலுக்கலில் தேர்வு
அந்த இடங்களை நிரப்ப, நாளை (ஜூன் 20) பெற்றோருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கல்வித்துறை வழங்கியுள்ளது. 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த பெற்றோர், தங்களின் குழந்தைகளை நேராக சென்று பள்ளிகளில் சேர்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்திருந்தால் மட்டும் போதும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து, 1 கி.மீ.,க்குள் இருப்பவர்கள் குலுக்கலின்றி தற்போது சேர்க்கலாம். அதற்கு அதிக துாரத்தில் இருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement