Advertisement

பதவியல்ல; பெரும் பொறுப்பு

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆகிறார். அனைத்து ஆரூடங்களையும், கருத்துக் கணிப்புக்களையும், பலரது கனவுகளையும் பொய்ப்பித்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன்,- பா.ஜ., தலைமையில் மோடி அரசு, நாளை பதவி ஏற்கப் போகிறது.

இது மோடி என்ற தனி நபரின் அசாத்திய சாதனை என்றால் மிகை ஆகாது. அவர் மீது எத்தனை பேர், எவ்வளவு புழுதி வாரிப்போட்டனர்? எத்தனை குற்றச்சாட்டுக்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள், பழிச்சொற்கள்? அசரவில்லை அந்த மாமனிதன். அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்தார். அது தான் அவரது அன்பு கலந்த ஆற்றல்.நடந்து முடிந்த இந்தத் தேர்தல், பல வகையில் தனித்தன்மை வாய்ந்தது. பல மாநிலங்களில், ஒட்டுமொத்த இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது. மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யில் எத்தகைய வெற்றி.அண்மையில் மாற்றுக்கட்சி ஒன்று, புதிய ஆட்சி அமைத்து, ஒன்றரை மாதம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் போன டில்லியில், நூற்றுக்கு நூறு! காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, மராட்டியத்திலிருந்து வங்காளம் வரை, உறுதியாகக் கால் பதித்தது பா.ஜ.,.காங்கிரஸ் கட்சி, வரலாறு காணாத தோல்வியைத் தழுவ நேர்ந்தது. பல மத்திய அமைச்சர்கள் போட்டிபோடவே தயங்கிய நிலையில், பலர் தோற்கடிக்கப்பட்டனர்.

வட குஜராத்தில் வட்நகர் எனும் குக்கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் மோடி. (சீனச் சிந்தனையாளர் யுவான் சுவாங், இந்த ஊருக்கு வந்து சென்றிருக்கிறார் என்பது அந்தச்சிற்றூரின் பெருமை. நூற்றாண்டுகளுக்குமுன் இந்த ஊரில், பத்தாயிரம் புத்த பிக் ஷுக்கள் இருந்தனர் என்பது வரலாறு.)மோடி, குஜராத் முதல்வராகப் பதவி ஏற்றபோது, அந்த மாநிலம் பெருஞ்சேதம் விளைவித்த நிலநடுக்கத்தின் சோகத்திலிருந்து விடுபட்டிருக்கவில்லை. மாநிலம் மீண்டெடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ?' என்று மக்கள் பரிதவித்த வேளையில், மூன்றே ஆண்டுகளில் அதை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் சென்று, மக்கள் வயிற்றில் பால் வார்த்தார். உலகமே வியக்கும் வண்ணம் குஜராத் வளர்ச்சியை, ஒரு முன்மாதிரியாக்கிக் காட்டினார் மோடி.அனைத்துத் தரப்பினரையும் அணைத்துக் கொண்டு, தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, ஊழல் அற்ற நிர்வாகத்தை சுறுசுறுப்புடன் நடத்திக் காட்டினார். விவசாயமும், தொழில்துறையும் தோளோடு தோள் வளர்ச்சி கண்டன. சேவைத் துறையும் பின்தங்கவில்லை. அடைத்த அறைக்குள் முடிவு எடுப்பதைத் தவிர்த்து, அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, திட்டங்களைச் செயல்படுத்தினார்.

அவரது தனித்தன்மை என்ன என்று பார்த்தால், சாதாரண மக்களுடன் அவர்களுக்கு சமமாக, சகஜமாக, அன்யோன்யமாகப் பழகும் எளிமை தான். இதன்மூலம் உணர்வுப்பூர்வமானதொரு உறவை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறார். நகரங்களில் வசிப்போரும் சரி, கிராமத்தாரும் சரி, அவருக்கு சரிசமமே. எந்தப் பிரச்னையானாலும் அதை அலசி ஆராய்கிறார். காது கொடுத்துக் கேட்கிறார். அந்தந்த பிரச்னையின் தன்மைக்கேற்ப, அதை இன்னாரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுக்கிறார். இது தான் அவரது வெற்றியின் ரகசியம்.

அரசியலையும், நிர்வாகத்தையும் அவர் கலப்பதில்லை. சாதாரண மக்கள் படும் கஷ்டங்களை, சிரமங்களை, தமது இளமையில் தானே சந்தித்திருக்கிறார். ஆதலால், மக்களின் அன்றாடப் பிரச்னைகள் எப்படிப்பட்டவை என்பதை நேரடியாக உணர்ந்தவர். குறைந்த அரசாட்சியே சிறந்த நிர்வாகம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடப்பவர்.அவருக்கு மக்கள், அமோக ஆதர வின் மூலம் வழங்கியுள்ளது பதவியல்ல; பிரதமர் எனும் மிகப்பெரிய பொறுப்பு. 'நான் பா.ஜ., பிரதமர் அல்ல; இந்தியத் திருநாட்டின் பிரதமர்; அனைத்து மக்களின் முதல் சேவகன்' என கூறியுள்ளார். அதற்கேற்ப அவர் செயல்படுவார் என்பது திண்ணம்.தனிநபரின் விருப்பு வெறுப்புகள் அரசை நடத்திச் செல்லக் கூடாது, அனைத்துத் தரப்பினரின் நலனையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவர். ஆதலால், நம் நாட்டின் நிர்வாகத்தில் விரும்பத்தக்கதொரு மாற்றம் ஏற்படும்.

அவரிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது. 'தினமலர்' நாளிதழில் அவரைப் பேட்டி கண்ட செய்தியாளர்களுள், பேட்டி முடிந்தவுடன், அவரின் ஆற்றல் தாக்கத்தோடு வெளியேவந்த ஒரு செய்தியாளர், 'நான் 6ம் வகுப்பு படிக்கும் போது, எம்.ஜி.ஆர்., என்னை ஒரு முறை தூக்கி, அணைத்துக் கொண்டார், அப்போது, அந்த பெருந்தலைவரின் அணைப்பால், ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த விதமான உணர்வு, இன்று தான், மோடி சந்திப்பின் மூலம் ஏற்பட்டு உள்ளது' என்று கூறியுள்ளதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நானும் அத்தகைய சிலிர்ப்புக்கு உள்ளானவன் தான்.

நரசிம்ம ராவ், பிரதமர் பதவியை விட்டு வெளியே வந்தபிறகு, ஒரு கூட்டத்தில் பேசுகையில், தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன், 'நான் இப்போது முன்னாள் பிரதமர். முன்னாள் பிரதமர் என்ற பதவியிலிருந்து என்னை யாரும் கீழே இறக்க முடியாது' என்றார்.மன்மோகன் சிங்கின் நிலைமையும் அப்படியே. பத்தாண்டுகள், கூட்டணி நெருக்குதலுக்கிடையே அமைதியாக நாட்டு நிர்வாகத்தை நடத்தி சென்றார். உரிய நேரத்தில் சில கண்டிப்பான, கடுமையான முடிவுகளை எடுக்கத் தவறினார் என்பது மட்டுமே, அவருக்கு எதிரான கருத்தாக இருக்க முடியும். அவர், தனிப்பட்ட முறையில் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை, ஒரு பா.ஜ., தலைவரே சுட்டிக்காட்டியுள்ளார்.மன்மோகன் சிங், ஊழல்வாதி அல்ல. ஆனால், அவரைச் சுற்றி இருந்தவர்கள், அவரது ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்கள், ஊழல்கள் எல்லாவற்றையும் மவுனமாக பார்த்துக் கொண்டே தான் இருந்தார். அவரின் இந்த செயலற்ற நிலையால் தான் காங்கிரஸ் கட்சி, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.நாளை பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடியும் சரி, அவர் சார்ந்துள்ள பா.ஜ., கட்சியும் சரி, மன்மோகன் சிங் போல் இருக்க மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். காரணம், மோடி, நான்கு முறை குஜராத்தில் முதல்வராக இருந்து செய்த சாதனை. இதே சாதனையை அவர் டில்லியில் பிரதமராக இருந்தும் தொடர வேண்டும் அதற்கு பா.ஜ.,வும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான், நாட்டு
மக்களின் விருப்பம்.
இ-மெயில்:ramakrishnan.hgmail.com

எச்.ராமகிருஷ்ணன்
முன்னாள் செய்தி ஆசிரியர், சென்னைத் தொலைக்காட்சி
Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement