Advertisement

ஒத்த சொல்லால் ஊசி குத்திய ஏகாதசி

ஒத்த சொல்லால உசுரெடுத்து போனவளே, என மனசை இனிக்க வைக்கும் சீனிமிட்டாய் போல, தன் பாடல் வரிகளால் தமிழர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். சமீபத்தில் வெளிவந்த மதயானை கூட்டம் படத்தில், கோணக் கொண்டகாரி குத்துறா, கண்ணால கொன்னுதான் போறாளே, என இளைஞர்கள் முதல் அனைவராலும் முணுமுணுக்க வைத்தவர்... சினிமா இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் ஏகாதசி. அடுத்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்க மதுரை வந்தவரிடம் பேசியதிலிருந்து...
உங்களை பற்றி?
செக்கானுாரணி அருகே பன்னியான்தான், நான் பிறந்த ஊர். சோழவந்தானில் பள்ளி படிப்பு, மதுரை காமராஜர் பல்கலையில் கல்லுாரி படிப்பை முடித்தேன்.
கவிதை பிறந்தது எப்போது?
பள்ளி காலத்திலேயே கவிதையில் ஆர்வம் கொண்டு, எழுத தொடங்கினேன். 18 வயதில், முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அரிவாள் துாக்கி திரியும் சமுதாய சூழலில், இருந்து கொண்டு பேனாவை துாக்கி கொண்டு திரிந்தேன், கவிதை படைக்க. சிறுவயதில் வெளியிட்ட கவிதை தொகுப்பு மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

பாடலாசிரியர் ஆன கதை...




பள்ளி காலத்தை முடித்த பின், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தேன். அது எனக்கு வழிகாட்டியாய் இருந்து, நல்ல பாதையை அமைத்து கொடுத்தது. அப்போது சங்கத்திற்கு 100க்கும் மேற்பட்ட பாடல்களை அமைத்து கொடுத்தேன். அதுவே சினிமா பாடலாசிரியராக காரணமாக இருந்தது.
சினிமா துறைக்குள் நுழைந்த அனுபவம்?
பள்ளி கல்லுாரிகளில் நான் நாடகங்கள் எழுதி, இயக்கி நடிக்கவும் செய்தேன். அதன்பின் வானொலியிலும் நாடகங்கள் செய்து வந்தேன். அப்போது கலையின் உச்சமாக பார்க்கப்பட்ட சினிமாவை தேர்வு செய்து, சென்னைக்கு சென்றேன்.
யாரிடம் சினிமா கற்று கொண்டீர்கள்?
பாரதிராஜா, வைரமுத்து ஆகியோரின் படைப்புகளே, என்னுள் இருக்கும் கலையை வெளிக்கொண்டு வர, பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதன் பின், பாரதிராஜா, ராசுமதுரவன், பிரபு சாலமன், மாரிமுத்து ஆகியோரிடம் 10 வருடங்கள் உதவி இயக்குனராக இருந்து சினிமாவை கற்று கொண்டேன்.

உங்களின் முதல் சினிமா?




கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழைதான் என் முதல் படம். அதில் முக்கிய கேரக்டரில் நான் நடித்திருந்தேன். படம் 100நாள் ஓடியதா? வசூல்மழை பொழிந்ததா? என்பது முக்கியமல்ல. கொடுக்க நினைத்ததை, திருப்தியோடு கொடுத்திருக்கிறேன். நான் நடித்த அந்த கேரக்டரில், மறைந்த இயக்குனர் ராசுமதுரவன் நடிப்பதாக இருந்தது. அது முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் உண்டு.
எழுத்துலகில் சாதித்தது?
சிறுவயதில் கவிதை தொகுப்பை வெளியிட்ட நான், இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன். 2012ல் நான்கு கவிதை தொகுப்புகள் வெளிவந்தது. அதில் ஹைக்கூ தோப்பு என்ற தொகுப்பு பல விருதுகளை பெற்று தந்தது. அடுத்ததாக நுாலகம் பற்றிய நாவல் எழுத ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அதை வெளியிட உள்ளேன்.
அடுத்த சினிமா எப்போது?
இரு கதைகள் தயாராக உள்ளது. முதலாவதாக காமெடி சினிமா, தென்மாவட்டங்களில் நடக்கும் திருமணங்கள் பற்றியது. இதுமட்டுமில்லாமல், அதர்வாவின் ஈட்டி, விமலின் அஞ்சல, விக்ராந்தின் ஏழரை உள்ளிட்ட 20 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன்.
இவரை வாழ்த்த.... ekadasidirectorgmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement