Advertisement

'காங்கிரஸ் கட்சியின் இறுதி யாத்திரை - இந்தியாவிலா, இத்தாலியிலா!'

பத்து ஆண்டு காலம், நாட்டை, புதை குழிக்கு அழைத்துச் சென்ற காங்கிரசின், சவப் பெட்டியில் கடைசி ஆணியும் அடிக்கப்பட்டு விட்டதா?இறுதியாட்டத்தின் முடிவு, மே 16ல் தெரிந்து விடும்.அசோக சின்னத்தில் மூன்று சிங்கங்கள் தெரியும். நடுவில் நம்மை பார்த்து நிற்பது மன்மோகன் சிங். வலது மற்றும் இடது புறம் உள்ள சிங்கங்கள், ப.சிதம்பரமும், மாண்டேக் சிங் அலுவாலியாவும்.

ஆனால், ஒரு சிங்கத்தின் முகம் பின்னால் மறைந்து உள்ளது. அதுதான் சோனியா. 10 ஆண்டுகளாக இந்த மூன்று பொருளாதார சிங்கங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தது. நம்மைத் தேடி வரும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், 10 ஆண்டு காலம், லோக்சபா எம்.பி.,யாக இருந்த பட்டத்து யானை, எந்த அனுபவமும் இல்லாமல் பார்லிமென்டில் வலம் வந்து விட்டது. கடைசியில், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று சவால் விடுகிறது.பகைவர்களை பந்தாட வேண்டிய பட்டத்து யானை, இன்று, அமேதி தொகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை உறங்கிக் கொண்டிருந்த உடன் பிறந்த சகோதரி, இன்று, தன் சகோதரனுக்காகவும், தாய்க்காகவும் சண்டைப் போட துவங்கி விட்டார்.நாட்டை ஆள, 56 அங்குல மார்பு தேவையில்லை என்றால், ராணுவத்தில் சேர ஏன் மூச்சை பிடித்து இளைஞர்கள் நிற்க வேண்டும். பரந்த மனமே போதும் என்றால் எப்படி?போபால் விஷவாயு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்கா தப்பியோட உதவியது போலவா, இல்லை, இத்தாலிய இடைத்தரகன் குத்ரோச்சி மீது இருந்த, 'ரெட்-கார்னர்' நோட்டீஸ் திரும்பப் பெற்றது போன்ற பரந்த மனம் வேண்டுமா?நாட்டை ஆள, 56 அங்குல மார்பால் முடியாது என்று பிரியங்கா சொன்னது, தன் கணவர் ராபர்ட் வாத்ராவையாகத் தான் இருக்கும். உடல்பயிற்சி செய்து உடம்பை உலக்கை போல் வைத்து இருப்பதால், தன் சகோதரனுக்கு போட்டியாக கணவன் வந்துவிட கூடாது என்று எண்ணி, அப்படி கூறி இருக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றவரை தேர்வு செய்வதை விட, உலக பொருளாதார மந்த நிலையில் கூட, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதை, 300 கோடியாக வளர்த்த மாவீரன் மருமகனையும், அதன் பின்னால் உள்ள மகளும், மாமியாரும், மகனுடன் இணைந்து, மீண்டும் ஆள நாட்டை துடிக்கின்றனர். அத்தையின் நகர்வலா கொலை வழக்கு, கணவனின் போபர்ஸ் ஊழல், இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவில் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், '2ஜி' ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகன் ஊழல் என்று பார் வியக்கும் பாரதம் படைத்து விட்டது சோனியாவின் ஊழல்.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் பிரதமர். தன் தம்பி பா.ஜ.,வில் சேர்ந்ததால், 'அவர்கள் பெரியவர்களாகி விட்டனர் என் பேச்சை கேட்பது இல்லை' என்று கூறுகிறார் மன்மோகன் சிங். அமைச்சரவையில் உள்ளவர்களே உங்கள் பேச்சை கேட்டது இல்லை என்பதை ஏன் மறைக்கிறீர்கள்.

வரலாற்றில் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. சுதந்திர இந்தியாவில், முதல் இருண்ட காலம், இந்திரா காந்தியின் அவசரச் சட்டம் அமலில் இருந்த காலம் 1975, ஜூன் முதல், 1977 மார்ச் வரை என்றால், இரண்டாவது இருண்ட காலம், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டு காலத்தைத்தான் சொல்ல வேண்டும்.சபாநாயகர் பதவியை, 2004ல் பெற்று கொண்டு, காங்கிரசுக்கு ஆதரவு தந்த தோழர்கள், காங்கிரசின் ஊழலுக்கு வழிவகுத்து விட்டனர் என்றும் சொல்லலாம்.மகாபாரத, குருஷேந்திர யுத்தத்தில், தோல்வி என்று தெரிந்தும், கவுரவர்கள் பக்கம் நின்றவர்கள், போராடி மாண்டனர். ஆனால், தோல்வி என்று தெரிந்தவுடன் தெறித்து ஓடி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள். காரணம் போட்டியிட்டால், 'நோட்டா' ஓட்டை விட குறைவான ஓட்டுகள் தான் கிடைக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். எனவே, குட்டியை வைத்து, குரங்கு ஆழம் பார்ப்பது போல, சில தலைவர்கள், தங்களின் வாரிசுகளை இறக்கி விட்டனர்.

ஜனவரி, 2012, ஜெய்ப்பூர் மாநாட்டில், இளவரசியிடம், 'பதவி ஒரு விஷம்' என்று சோனியா கூறி இருந்தாலும், 'பதவி ஒரு போதை' என்பதை சோனியா மறக்கவில்லை. எனவே தான், தமயனுக்கும், தாய்க்கும் ஓட்டு கேட்டு வலம் வருகிறார் பிரியங்கா. காலில் செருப்பு இல்லாமல் பிரியங்கா நடப்பது ஓட்டுகளை பெற்று தருமா என்று தெரியவில்லை.மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று வீர வசனம் பேசினர். தோல்வி பயம், தோற்றால் இனி அடையாளம் தெரியாமல் போய் விடுவோம் என்னும் பயம். எனவே, மூன்றாவது அணிக்கு இப்போது முயற்சி செய்ய துவங்கி விட்டனர்.மண்குதிரையை நம்பி இறங்கினாலும், காங்கிரசை நம்பி யாரும் இறங்க மாட்டார்கள். அத்தையால், சரண்சிங் அமைச்சரவை கவிழ்ந்தது, கணவனால், சந்திரசேகர் அமைச்சரவை கவிழ்ந்தது. தன்னால், தேவகவுடா, குஜ்ரால் பதவி இழந்தனர். அந்த வரிசையில் இனி யாரும் சிக்க மாட்டார்கள் என்பது சோனியாவிற்கு தெரியும். 2004 போல் மீண்டும், 'தோழர்கள்' தங்கள் ஆதரவை தர மாட்டார்கள். தந்தால் காங்கிரசை விட முதலில் காணாமல் போவது அவர்கள் என்பது தோழர்களுக்கு நன்றாக தெரியும். எனவே தான் மூன்றாவது அணி அமைத்து, அதில் பங்கேற்கவும் தயார் என்று சொல்கிறது காங்கிரஸ்.

'இந்திரா தான் இந்தியா; இந்தியாதான் இந்திரா' என்று 1977ல் பரூவா கூறியது போல, 'காங்கிரஸ் தான் கரப்ஷன் (ஊழல்) கரப்ஷன் தான் காங்கிரஸ்' என்று போய்விட்டது.பதவிக்காக, காங்கிரஸ் எதையும் செய்யும், முயற்சித்து பார்க்கும் மூன்றாவது அணி முடியவில்லை என்றால், ஆட்சி அமைக்க மோடியுடன் இணைய வந்தாலும் வந்து விடுவர்; மோடி கவனமாக இருக்க வேண்டும்.மக்கள் என்னும் பள்ளி மாணவனைப் பற்றி கவலைப்படாமல், ஊழல் பாடத்தை, அமைச்சர்கள் என்னும், வகுப்பு ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். திறமையான தலைமை ஆசிரியராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மன்மோகன் சிங்கின் மவுனம், 10 ஆண்டுகளில், பள்ளியை கெடுத்து விட்டது. காரணம், தாளாளர் சோனியா வருத்தப்படக்கூடாது என்று தலைமை ஆசிரியர் செயல்பாட்டால் தான்.எத்தனை வீரர்கள், எத்தனை எளியவர்கள் வழி நடத்திசென்ற வரலாறு படைத்த கட்சியில், இன்று ஊழல்வாதிகளும், ஊமை பிரதமரும், நாடு நாசமான பின்பும், பதவி என்னும் போதை மட்டும் இவர்களை விட்டு போகவில்லை. எனவே, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மூன்றாவது அணிக்கு முயற்சிக்கின்றனர்.

உண்மையான சுதந்திர போராட்ட தியாகிகள் எல்லாம், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓடிவிட்டனர் அல்லது துரத்தப்பட்டு விட்டனர் என்பது தான், 1975 வரை நடந்த உண்மை. 1977ல் ஜனதா கட்சியில் இருந்த தியாகிகள் எல்லாரும் காங்கிரசால் துரத்தப்பட்டனர். கரையான் புற்று எடுக்க கருநாகம் புகுந்த கதையானது காங்கிரஸ் கட்சி.இந்திய தேசிய காங்கிரஸ், இந்திரா காங்கிரசாக மாறியது. இன்று அது இத்தாலிய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறிவிட்டது.பத்தாண்டு காலம், நாட்டை புதை குழியில் தள்ளிய, காங்கிரஸ் கட்சிக்கு கடைசி மலர் வளையத்தை, மன்மோகன் சிங் வைப்பாரா, இல்லை, சோனியா வைப்பாரா எனத் தெரியவில்லை. இனி முடிவு செய்ய வேண்டியது, சவப்பெட்டியை வைக்கும் புதைகுழி இந்தியாவிலா இல்லை இத்தாலியிலா என்பது மட்டுமே!
இ-மெயில்: asussusigmail.com


- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி -
வழக்கறிஞர்
Advertisement
 

வாசகர் கருத்து (10)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement