Advertisement

வீட்டுக்கு ஹீரோ, நாட்டுக்கு வில்லன்: - ஆர்.நடராஜன்

மூன்று ஆண்டுகளுக்குப் பின், நாடாளுமன்ற தேர்தலுக்கு நான்கைந்து மாதங்கள் முன்னதாக, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமாவை அறிவிப்பாரோ என்ற ஊகம் எழுந்தது. பதவி விலகலுக்கு அவர் சந்திக்க வேண்டியது ஜனாதிபதியை, பத்திரிகையாளர்களை அல்ல. பின் ஏன் இந்த சந்திப்பு? ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பை, காங்கிரஸ் கட்சி உலவ விடுவதற்குத்தான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, மிகவும் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டார் மன்மோகன் சிங்.

நான்கு மாநிலங்களில், படுதோல்விக்கு முன் மன்மோகன் சிங் தலைமையில் தான், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போவதாக காங்கிரஸ் சொன்னது. பின் பிரதமர் வேட்பாளரை கட்சி, ஜனவரி 17ம் தேதி, அறிவிக்கும் என்றது. 'இரவல் தந்தவர் கேட்கின்றார். அதை இல்லையென்றால் விடுவாரா?' என்ற கண்ணதாசனின் வரிகளைச் சொல்லாமல் சொல்லி, 'மூன்றாம் முறையாகப் பிரதமராக மாட்டேன். ராகுலிடம் பொறுப்பை ஒப்படைப்பேன். அவரை விஞ்சி வேறு யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லை' என்று பத்திரிகையாளர் சந்திப்பதில் அறிவித்தார் மன்மோகன் சிங். ரேஷன் கடை மாதிரியான பத்தரிகையாளர் சந்திப்பு அது. ஆளுக்கு ஒரு கேள்வி. யார், யார் என்பதை மந்திரி மணீஷ் திவாரி அழைத்தார், பெயர் தெரியாதவர்களை கறுப்புக்கோட்டு, வெள்ளைச் சட்டை என்று குறிப்பிட்டார். சுருக்கமான, கூரான கேள்விகள். சுருக்கமான ஆனால் பொறுப்பற்ற பதில்கள். ஒரு சடங்கு போல், ஒத்திகை செய்யப்பட்ட நாடகம் போல் அமைந்த அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், கொஞ்சமும் தயங்காமல் கிடுக்கிப்பிடி போட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்ட வேண்டும். ஆனால், யார் என்ன கேட்டாலும், பிரதமர் எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டாமல் பதில் சொன்னார்.

பொருளாதாரம் பற்றிய கேள்விகளுக்கு, மழுப்பல்களும், சுவைக்கு உதவாத புள்ளி விவரங்களுமே பதில்கள். வேறு கேள்விகளுக்கு, வருந்துகிறேன் ஏதோ நடந்துவிட்டது, எல்லாம் துரதிர்ஷ்டவசமானது, என்றார். ஊழல்கள் பற்றிய நேரடிக் கேள்விகளைத் தாங்க முடியாத கட்டத்தில், ஊழல் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் எதையும் ஊழலாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான், 2009ல் எங்களை மறுபடியும் தேர்ந்தெடுத்தனர் என்று எல்லார் காதிலும் முழம் முழமாகப் பூ சுற்றுகிறார். ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சிக் கால ஊழல்கள் பற்றிய விவரங்கள் இரண்டாம் காலத் தொடக்கத்தில் தான் தெரியவந்தன! 'மக்களே ஊழல் என்று முடிவு செய்யாததை நீங்கள் ஊழல் என்கிறீர்களே' என்று பத்திரிகையாளர்களை விமர்சித்தார் பிரதமர்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டதற்கு, 'அதில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், எல்லாம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதில் நான் நேர்மையானவன் அல்லவா' என்று கேட்டார். என்ன நேர்மையோ இந்த நேர்மை! அரசின் தலைவர் என்ற முறையில், பிற அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், தான் பொறுப்பு என்பதை வசதியாக மறந்துபோனார். தன் பேச்சைக் கேட்காத அமைச்சரை நீக்கவும், அவர் எடுத்த முடிவுகளை மாற்றவும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கிறதே. ஏன் அதைச் செய்யவில்லை. தான், எதிலும் ஆதாயம் பெறவில்லை என்று பூடகமாகச் சொன்னார். வெளிப்படை நிர்வாகம் பற்றிப் பேசியவர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்றவர் யார் என்று சொல்லியிருக்கலாமே. அது யார் என்று அவருக்குத் தெரிய வில்லை என்றால், பிரதமராகத் தொடரும் தகுதியை இழக்கிறார். தெரிந்தும் சொல்ல முடியவில்லை என்றால், நேர்மையான மனிதர் என்ற தகுதியை இழக்கிறார்.

நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விடவேண்டும் என்று சொன்னாராம். ரொம்பச் சரி. அவர்தானே, நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்தார். சுரங்கங்களை ஏன் ஏலத்தில் விடவில்லை? யார், யாருக்கு எந்தெந்தக் காரணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை பிரச்னை வெடித்த பிறகாவது சொல்லியிருக்கலாமே. ஏன் சொல்லவில்லை? கோப்புகள் காணாமல் போய்விட்டன என்றபோது, 'கோப்புகளின் காவலன் அல்ல நான்' என்றவர், கோப்புகளுக்குக் காவலன் அல்ல, சுரங்கங்களுக்கும் காவலன் அல்ல, தேசத்திற்கும் காவலன் அல்ல. பாழடைந்த பங்களாவின் வாசலில், பீடி குடித்துக் கொண்டிருக்கும், ஒரு கிழட்டுக் காவலாளியின் பொறுப்புணர்வில் கொஞ்சமும் இல்லாத மனிதர், நம் பிரதமர் என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு.

இவர், பத்தாண்டு நமக்குப் பிரதமராக இருந்து தொலைத்திருக்கிறார் என்பது வரலாறு, இது நம் மீது திணித்துள்ள அவமானம். இவரிடம் பிரதமர் பதவியைக் கொடுத்து, அதிகாரத்தை எடுத்துக் கொண்ட மேலிட சக்தி, பாழ்பட்ட பங்களாவில் சுரண்டுவதற்கு இனி எதுவும் இல்லை; சுரண்டியதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே பத்திரிகையாளர் கூட்டத்தில், பிரதமர், குஜராத் முதல்வரும் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியைச் சீண்டினார். கொத்துக் கொத்தாகக் கொலை செய்தவர் என்று வர்ணித்தார். எந்தக் காலத்திலும் அவர் சொந்த வசனம் பேசியதில்லை. ஆகவே, அவருக்குப் பின்னே உள்ள சக்தியே வசனகர்த்தா.இதில் இன்னொரு மரபு மீறலும் இருக்கிறது. அரசு ஏற்பாட்டில், அரசு செலவில், செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அருகில் அமர்ந்திருக்க அரசியல் பேசினார் பிரதமர். அரசின் கவுரவம் பறிபோவது பற்றி என்றுமே அவர் கவலைப்பட்டதில்லை. தனக்கு கவுரவம் இருப்பதாக, ஒரு காலத்திலும் அவர் நினைத்துப் பார்த்ததில்லை. அவரிடம் இல்லாதது பற்றி, மக்கள் கவலைப்படுவதிலும் அர்த்தமில்லை.

'உங்கள் கட்சி ஆளும் இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங், தனக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு சகாயம் செய்து, தன் குடும்பத்து ஓட்டல் தொழிலை விரிவுபடுத்தக் கடன் வாங்கிய போர்வையில் லஞ்சம் வாங்கியிருக்கிறாரே' என்ற கேள்விக்கு, 'அது பற்றி யோசித்துப் பார்க்க எனக்கு நேரமில்லை. நான் அதில் என் கருத்தைச் செலுத்தவில்லை' என்று பதில் சொன்னார்.அடுத்த அரை மணி நேரத்தில், ஊழல் பற்றிய தகவல்கள் வரவேண்டும் என்று பிரதமர் உளவுத்துறையை கேட்டால், அவரது மேஜைக்குத் தகவல்கள் வந்து சேருமே. அவர் அப்படிக் கேட்கவில்லை. ஏனெனில், அவரிடம் நாற்காலியும் பேனாவும் தான் இருக்கின்றன. மேஜையும் கோப்புகளும், 'உள்ளே தள்ளும்' இழுப்பறைகளும் வேறு யாரிடமோ இருக்கின்றன. இதெல்லாம் நன்றாக தெரிந்தும், இதற்கு வளைந்து கொடுத்துப் பதவியை மட்டும் தக்கவைத்துக் கொண்டுள்ள பிரதமர் சொல்கிறார்... 'நிகழ்கால பத்திரிகை உலகம்தான் என்னை விமர்சிக்கிறது. சரித்திரம் என்னை யோக்கியமானதாக காட்டும்' அடடா, என்ன எதிர்பார்ப்பு இது!

இவர் சரித்திரம் என்று சொல்வது எதுவென்று தெரியவில்லை. சோனியாவும், ராகுலும், மணீஷ் திவாரியும் எழுதப்போகும் சரித்திரமா? தேர்தலுக்குப் பின், அவர்களே இவர் மீது சேற்றை வாரியிறைக்கக் கூடும். அது போகட்டும்... நிகழ்காலச் செய்திகளின் பதிவே, பிற்காலத்தில் வரலாறு செய்யப்படும் என்பது தெரியாதவரா இவர்? இந்த உரத்த சிந்தனைக் கட்டுரை உட்பட, பத்திரிகை உலகம் பதிவு செய்வதெல்லாம் வரலாறு தான். பத்திரிகையாளர்கள் வேறு, வரலாற்றாசிரியர்கள் வேறு என்ற மாயையிலிருந்து விரைவில் விடுபடுவார் மன்மோகன் சிங் என்று எதிர்பார்க்கலாம்.இரண்டாம் முறை தேர்தலில் வென்றுவிட்டால், முதல் பதவிக் கால முறைகேடுகள் ஒரு பொருட்டல்ல என்று மக்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக, மக்களை ஒருநாளும் தேர்தலில் சந்திக்காத மன்மோகன் சிங் கூறியிருக்கிறாரே. அதே தர்க்கம் மோடிக்கு உதவாதா? மூன்று முறை ஜெயித்த மோடி, 2002ம் ஆண்டு கலவரத்தின் கொலைக்காரர் என்று சொல்லப்பட வேண்டாமே. இவர் ஒரு சீக்கியர். இந்திரா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்த கலவரத்தில், 3,௦௦௦ சீக்கியர்கள் கொல்லப்பட்டனரே, அதை யார் செய்தது? நரேந்திர மோடியும் அவரது தொண்டர்களுமா? அது பற்றிய கேள்விக்கு இவரது பதில் மழுப்பலே.

அரசு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமராகக் கலந்து கொண்ட மன்மோகன் சிங், மோடி மீது பாய்ந்தது விரும்பத்தக்கதல்ல. தன் பதவியின் கவுரவத்தை அவர் காக்கவில்லை. இதில் வருத்தப்பட்ட, பா.ஜ., உடனே, அருண் ஜெட்லி தலைமையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. தொலைக்காட்சியில் இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளையும் பார்த்தவர்கள், அரசியல் நாகரிகத்தின், கருத்து சுதந்திரத்தின் வித்தியாசங்களை உணர முடிந்தது. பா.ஜ., பேசியது, சொந்த வசனம். அதில் மனிதத் தன்மை இருந்தது. மன்மோகன் சிங் பேசியது இரவல் வசனம். கலகலப்புக்கு இடமில்லாமல், கேள்விகளை ஒட்டிய துணைக் கேள்விகளுக்கு இடம் கொடாமல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. ஆட்சியை மன்மோகன் சிங் நடத்தவில்லை. அவர் பெயரால் ஆட்சி நடக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பையும், அவர் நடத்தவில்லை. அவர் பெயரால், அது நடந்தது. இங்கே எல்லாமே, 'பினாமி' தான்.பிரதமராக சொதப்பிவிட்டாலும் மனிதர் என்ற முறையில், மன்மோகன் சிங் நல்லவர் என்ற சமாளிப்பு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. அது என்ன நியாயமோ? நல்ல மனிதர், நல்ல நிர்வாகியாக இல்லாமல் போவது நிறுவனத்திற்கல்லவா நஷ்டம்? பொன்னைத் துறக்கலாம், பொருளைத் துறக்கலாம். ஆனால், தன்னையே துறக்கும் புனிதமான முனிவர் தன்மைக்காக, தான் வேறு அரசு வேறு. அரசின் எந்த முடிவுக்கும் தான் பொறுப்பல்ல என்று தனக்குத் தானே, வேற்று மனிதராக எண்ணிக்கொண்டு பேசுவதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் வரலாற்றில் இடம் பெற வேண்டியது தான். வரலாற்றில் அவர் நிச்சயம் இடம் பெறப்போகிறார், வீட்டுக்கு ஹீரோவாக, கட்சிக்கு முகமூடியாக, நாட்டுக்கு வில்லனாக!
ஆர்.நடராஜன் -(கட்டுரையாளர் அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்)
e-mail: hindunatarajanhotmail.com
Advertisement

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement