Advertisement

இதுவா வெற்றி? எல்.முருகராஜ், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்

மிக அபூர்வமாய், நம் ஊர், 'டிவி'யில் நல்ல நிகழ்ச்சிகள் வருவது உண்டு. அவற்றில் ஒன்று இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அமீர் கான் தொகுத்து வழங்கிய, 'சத்யமேவ ஜெயதே' என்ற அரட்டை நிகழ்ச்சி. பெண் கருக்கொலை, பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுவர், சிறுமியர், மருத்துவ முறைகேடு என்று, சமூகத்தில் நிலவும் அவலங்களை அலசி ஆராய்ந்து, அவற்றை தொகுத்தளிப்பார்.

'சில பிரச்னைகளை எடுத்து பேசும் போது, 'இதையெல்லாமா பிரச்னையாக பேசுவது?' என்று கேட்கின்றனர். ஏன், இதையெல்லாம் பேசக்கூடாதா?' என்று சொல்லிவிட்டுதான், நிகழ்ச்சியையே அவர் ஆரம்பிப்பார்.அது போலத் தான், இங்கே ஒரு விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது அது 'மங்கள்யான் ராக்கெட்' பிரச்னை.'அது தான் பிரமாதமாப் பறந்துவிட்டதே, அப்புறம் என்ன, அதைப்பத்தி பேசறதுக்கு இருக்கு? அது நாட்டோட பெருமை, விஞ்ஞானிகளின் பிரமிக்கத்தக்க வெற்றி' என்றெல்லாம், நீங்கள் சொல்வதில், எந்தவித மாற்று கருத்தும் சொல்லப்போவது இல்லை.ஆனால், காலம் காலமாய் ராக்கெட்டை மேலேயும், கடலுக்கு உள்ளேயும் விட்டதால் கிடைத்த பலன் என்ன? தொலைத்த பணம் எவ்வளவு?இது போல ராக்கெட் பறக்கவிடும் போது, நாட்டின் ஏழ்மையையே, மொத்தமாக மூட்டை கட்டி, மேலே அனுப்பியது போல, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்தப்படுவதும், பிரதமர் துவங்கி ஜனாதிபதி வரை, வாழ்த்து வழங்குவதும், பின் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில், இந்த ராக்கெட் புராணம் பாடியபடி வலம்வருவதும், கூப்பிடும் பல்கலைக்கழகங்களின் சக்திக்கேற்ற, டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்வதும், அனைத்து, 'டிவி'களிலும் யாரும் பார்க்காத, அதிகாலை சிறப்பு விருந்தினர் பகுதியில், இடம் பெற்று பேசுவதும் தான் நடக்கும்.இது அடுத்த செயற்கைக்கோள் பறக்கும் வரை தொடரும். அடுத்த செயற்கைக்கோள் பறக்கவிடப்பட்டதும், இதே பல்லவிகள், மீண்டும் ஆரம்பிக்கும். இந்த முறை, திட்ட இயக்குனர் மாறியிருக்கலாம் அல்லது இஸ்ரோ தலைவரே ஓய்வுபெற்றிருக்கலாம்.

ஒரு செயற்கைக்கோள் பறக்கவிட்டதால், மக்களுக்கு கிடைத்த, கிடைக்கும் கண்கண்ட பலன் என்ன என்பது தான், இப்போதைய கேள்வி.கடந்த 1969ம் ஆண்டு, ஜூலை, 20ம் தேதி (கிட்டத்தட்ட 43 ஆண்டு) அமெரிக்கா விட்ட ராக்கெட்டில் போய், சந்திரனில் கால்வைத்த ஆம்ஸ்ட்ராங் கொண்டுவந்த கல்லைதான், இன்னமும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். இதைத்தாண்டி என்ன நடந்தது என்பதை, எந்த பாமரனும் அறிந்திலன்.இந்த, 'மங்கள்யான்' பறப்பதற்கு மட்டும், 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது. இதுவரை பறந்த, பறக்க முடியாமல் போன, ராக்கெட்டுகளுக்கான செலவை எண்ணிப் பார்க்கும் போது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே, தெரியாத அளவிற்கு கண் கட்டுகிறது.'மங்கள்யான்' செயற்கைக்கோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., எக்ஸ்.எல்.,சி25 ராக்கெட் 250 கி.மீ., பயணித்து, புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, பின், 23,500 கி.மீ., பயணித்து, நீள்வட்ட பாதையிலும், பின், 10 மாதகாலம், 30 கோடி கி.மீ., பயணித்து, செவ்வாய்கிரக சுற்றுப்பாதையையும் அடையுமாம்.அதன்பின், 'அங்கு தண்ணீர், கனிம வளம், பருவநிலை பற்றி ஆராய்ந்து, அப்படியே அங்கே மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா?' என்றும் கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்து பூமியில் இருந்து, 30 கோடி கி.மீ., தூரத்தில் உள்ள செவ்வாயில் கொண்டு போய், ஆட்களை குடியமர்த்த போகிறார்களா... தெரியவில்லை.குடும்பத்தை காப்பாற்ற, ஆண்டு முழுவதும் மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடி, தீபாவளி போன்ற நல்ல நாளில் கூட, ஆண்டிற்கு ஒரு முறை, தன் சொந்தங்களை பார்க்க, ரத்த சம்பந்தங்களை சந்திக்க, சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்து போகமுடியவில்லை. பதினாறு மணி நேரம் என்றாலும், 'அனைத்தையும்' அடக்கி, முன்பதிவு இல்லாத பெட்டியில், பாத்ரூம் வாடையை சகித்து, படிக்கட்டு கதவுகளில் தொங்கி, பயணம் செய்தாக வேண்டிய அவலம். கூடுதலாக ரயில் விடவேண்டாம்; கூடுதலாக பெட்டியை கூட சேர்க்கமுடியாத அளவிற்கு, ரயில்வேக்கு பட்ஜெட் பிரச்னை.

உயிர்காக்கும் மாத்திரை, மருந்துகளை வெளியே வாங்க, வசதியில்லாத ஏழை நோயாளிகள். அரசு மருத்துவமனையின் நீளமான வரிசையில், மணிக்கணக்கில் காத்திருந்து நகர்ந்தபடியும், ஊர்ந்தபடியும் மாத்திரை கவுன்டரை அடையும் போது, 'இந்த வாரமும், மாத்திரை வரலை போய்ட்டு, அடுத்த வாரம் வா பார்ப்போம்' என்று, விரட்டியடிக்காத குறையாக விரட்டும் நிதி நிலையில், அரசு மருத்துவமனைகள்.இன்றைக்கும், மலைவாழ் மக்களை பிரசவ நேரத்தில், மூங்கில் குச்சியில் தொட்டில் கட்டி தூக்கிய படி ஓடி வருகின்றனர்.அவர்கள் பள்ளத்தில் விழுந்து, எழுந்து அடிவாரத்திற்கு ஓடி வருவதற்குள், இரண்டு உயிர்களுக்கும் உத்தரவாதமில்லை. இவர்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையத்தை, மலையில் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவர்களை, பத்திரமாக கீழே கொண்டுவர, ஒரு லகுவான ஸ்ட்ரெச்சர் கூட இன்னும் வாங்கமுடியவில்லை; காரணம் துட்டு இல்லை.கடைசி காலத்திலாவது பசி, பட்டினி இல்லாமல், கவுரவமாய் வாழ, முதியோர் உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகங்களில், பஞ்சடைத்த கண்களுடனும், பரிதாபமான உடைகளுடனும், பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், ஆண்டுக்கணக்கில், கம்பை ஊன்றியே, நடந்தபடி வந்து போகும் முதியோர்கள், 'அப்புறம் பார்க்கலாம்' என்று, ஒற்றைவரியில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். காரணம் நிதி இல்லை.

ஊரில் உள்ள ஆயிரத்தெட்டு அரசு அலுவலகங்களின், படிக்கட்டுகளில் ஏறமுடியாமல், அல்லல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு சாய்வு தளம் அமைப்பதற்கு கூட காசு இல்லை; மேலிடத்திற்கு எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். என்றாவது ஒரு நாள், பட்ஜெட்டில் சாய்வுதளம் கட்ட, பணம் ஒதுக்குவர் என்ற நம்பிக்கையுடன், காரணம் அதற்கும் பட்ஜெட் இல்லை.கோவைக்குள், ஒரு பாலம் இருக்கிறது. அதை சீரமைத்தோம் என்று சொல்லி, அந்த பாலம் வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம், 'பத்தை கொடு, இருபதை கொடு' என, கடந்த கால் நுாற்றாண்டாக வசூல் செய்தபடி இருக்கின்றனர், அப்படியும், அந்த சிறிய பாலத்தை சீரமைத்த செலவை, எடுக்க முடியவில்லையாம். இன்னும், ஒரு அரை நுாற்றாண்டுக்கு, அங்கே வழிப்பறி போல, வசூல் செய்து கொண்டுதான் இருக்கப்போகின்றனர். பொதுமக்களை வாட்டி எடுத்துக்கொண்டுதான் இருக்கப்போகின்றனர். 'வாங்கினது வரை போதும், இனி பாலத்தில் இலவசமாக போய்க் கொள்ளுங்கள்' என்று சொல்ல, இன்னும் வாய்வரவில்லை; காரணம் பட்ஜெட் இல்லை.இதையெல்லாம் முடித்துவிட்டு பின், 450 கோடி செலவில், ராக்கெட் விட்டாலும், 4,500 கோடி ரூபாய் செலவில், ராக்கெட் விட்டாலும் யார் கேட்கப்போகின்றனர்.

'இதையும், அதையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?' இது நாட்டின் கவுரவம், விண்வெளியில் நமக்கு கிடைத்த வெற்றி. மூக்கு உள்ளமட்டிலும், சளி என்பது போல நமக்கு ஏழைகள், அவர்களை திருப்தி செய்யமுடியாது; என்றே பலரும் சொல்வர்.அவர்களுக்கு, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தந்த பதிலைத்தான் தரவேண்டியிருக்கிறது. 'டெலிமெடிசின், டெலி எஜுகேசன், கிராம வள ஆதார மையங்களை மையப்படுத்தும், திட்டங்களை நிறுத்திவிட்டு, 2007ல் போட்ட திட்டத்தை, இப்போது செயல்படுத்துவதில் என்ன பிரயோஜனம்?செயற்கைக்கோளின், பிரதான உபயோகமான டிரான்ஸ்பாண்டர்களில், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது அதை சரி செய்யும் திட்டமேதும் இல்லை. எனவே, செவ்வாய் கிரகத்திட்டம் என்னைப்பொறுத்தவரை, தவறான முன்னுரிமை கொடுத்து, செயல்படுத்தப்பட்டு உள்ளது' இவ்வாறு, அவர் சொல்லி உள்ளார்.இவருக்கு செவ்வாய் செயற்கைக்கோள் ஆர்வலர்கள், என்ன பதில் தரப்போகின்றனர். நாட்டின் கவுரவம் என்பது, ராக்கெட் விடுவதில் இல்லை. நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரங்களை பெருக்கி, அவர்களை மகிழ்ச்சியும், திருப்தியும்படுத்துவதில்தான் இருக்கிறது.இவர்கள் மாட மாளிகைகள், பளிங்கு ரோடுகள் கேட்கவில்லை. படித்த படிப்பிற்காக இல்லாவிட்டாலும், கவுரவமாய் சாப்பிடுவதற்காக, ஒரு சம்பாத்தியம், ஆரோக்கிய குறைவு ஏற்படும் போது, மொத்த சொத்தையும் எழுதிக்கேட்காத, தரமான மருத்துவம், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், பயமுறுத்தாத, பாதுகாப்பான போக்குவரத்து. எளிமையான, இனிமையான வாழ்க்கை இல்லாதவருக்கும், இயலாதவருக்கும் முன்னுரிமை. இதெல்லாம் செய்துகொடுத்துவிட்டு, எத்தனை ராக்கெட் விட்டாலும், யார் கேட்கப்போகின்றனர்.
இமெயில்: murugaraj2006gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • Manian - Chennai,இந்தியா

  ஒரு நாட்டின் முன்னேற்றம் அது செய்யும் ஆராச்சியின் படியே நடக்கும். ஒரேஒரு புதிய கண்டுபிடிப்பால் புதிய தொழில்கள் , அநேக வேலை வாய்ப்புக்கள், அரசாங்கத்திற்கு வரிப்பணம், புதிய கண்டுபிடிப்பு சார்ந்த இதர தொழில்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. அமெரிக்கா, யூரொப்ப நாடுகள், சீன , ஜப்பான் போன்ற நாடுகளில் முனெற்றம் வர அவர்களது ஆராய்ச்சியே காரணம். இன்று புதிய மெட்ரோவிற்க்கு ரயில் பெட்டிகள் வாங்க நம்மிடம் ஏன் தொழிற்சாலைகள் இல்லை. வெறும் உணவு, நீர், இருப்பிடம் மட்டும் போதாது. அவை சார்ந்த ஆராய்ச்சிகளும் உடன் வேணடும் இந்த மாதிரி ஆராச்சிகள் பயன் தர நீண்ட நாளாகும். கீ மு 3ம் ஆண்டில் சாணக்கியன் அரசியல், பொருளாதாரம், வாணிபம் என்று செய்த கண்டு பிடிப்பால் காந்த குப்தன் அவருக்குப்பின் வந்த அரசர்களும் மக்களும் பயன் அடைந்தார்கள். ஆராய்ச்சிக்காக மன்னன் தலை சிறந்த அறிஞ்கர்கலை ஆதரித்தார்கள். இதையே இப்போது அமெரிக்காவில் எம்.ஐ.ட்டி, ச்லன்போ~ர்டு, போன்ற தனியார்கள் செய்கிறார்கள். அவற்றின் பயனாக அவை உலக்கில் உள்ள அறிவில் சிறந்த மாணவர்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். நம் நாட்டில் நடுத்தர வாழ்வு போதும் என்று இருப்பவர்கள் அதிகம். லஞ்சம், பொறாமை போன்ற குணம் கொண்டவர்கள் ஆராச்சி செய்ய விரும்புவர்களை நாட்டை விட்டு விரட்டுகிறார்கள். நமது எண்ணம் என்ன என்பது முக்கியம் இல்லை, தன முடிவு எப்படி இருக்கும் என்பதே திரிந்து கொள்ளாமல் ஆராச்சி வீண் என்பது வருந்தத்தக்கது. சந்திரன், செவ்வாய் போன்ற கிரஹங்களை அமெரிக்கா, சீன போன்ற வர்கள் சென்றுவிட்டால் , நம்மை அங்கே வர வேதா மாட்டர்கள். அங்குள்ள உலோஹங்கள் ஒரு நாளும் நமக்கு கிடைக்காது. அப்போது, நமது நிலை என்னவாகும் என்று சிந்திக்கவேணடும். மக்கள் தேவைகள் எல்லாம் ஆராச்சிகளை நிறுத்தினால் நிறையாது. திரு முக ராஜின் மன வருத்தம் பொது நலம் எண்ணம் கொண்டது, ஆனால் அவரது சிந்தனையின் முடிவு எப்படி நாட்டிற்கு நன்மை செய்யும் என்பதை புள்ளி விவரங்களுடன் அவர் தரவேண்டும். இல்லையேல் அரசியல் அரங்கில் பிறரின் கொள்ளைக்கு வித்திடும்.

 • P.GOWRI - Chennai,இந்தியா

  அறிவியலுக்காக செலவு செய்வதை தப்பாக பேசாதிர்கள் ப்ளீஸ். அறிவியல் வளர்ச்சி நாட்டுக்கு தேவை.எத்தனை ஊழல் நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது . அதை பார்க்கும் போது இது ஒன்றுமே இல்லை .

 • Mohandhas - singapore,சிங்கப்பூர்

  அமெரிக்காவிலும் நம்மை விட மோசம்மான நிலையில் ஏழைகள் உள்ளனர்.. ஹோட்டலில் சாப்பிட்ட எஞ்சிய சாப்பாட்டு பொருட்ட்களை ஒரு மேனேஜர்(அமெரிக்கர்)மூட்டை கட்டியதாக என் நண்பர் கூறினார்... அங்கும் ஏழ்மை உள்ளது..ஏன் நாம் இன்னும் ஏழையாக உள்ளோம் ... மக்களின், அரசு, அரசியலின் தவறே தவிர இஸ்ரோ வை குறை கூற தேவை இல்லை ..அவர்களாவது கொடுக்கும் பணத்துக்கு கொஞ்சமாவது உழைக்கிறார்கள் ..ஆனா பஸ் , ரயில், ஹெலிகாப்டர் எல்லாம் வெளிநாட்டிலிருந்து தான் வங்கி கிட்டு இருக்கோம்...

 • Padmanabhan - Babarala UP,இந்தியா

  எல்லாரும் திரை படங்களை பார்க்கிறோம் அதற்கு முன்னால் சில படங்கள் மிகவும் எதிர்ப்பு சம்பாதிகறது அனல் தமிர்களை முட்டாள் போன்று சிற்றிக்கும் படத்துக்கு யாரும் எடிருஒ அல்லது ஒரு வேடனை ஊ தெரிவிக்க வில்லன் நன் வருத்தம் அடண்டைது அதற்கு தன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ஹிந்தி படம் வந்தது அது மிகவும் வசூல் அள்ளியது தமிழ் நாட்டில் அதற்கு ப்ரொமிடிஒன் வேலைகள் எல்லாம் பயங்கரமா நடந்தது படம் ரெலேசே ஆனது படத்தி பரதவர்கள் எத்தனை பேர் அந்த படம் தமிழர்களை முட்டாள் போன்றும் மோர்டர் போன்றும் காண்பிக்க பட்டது சாருகன் அண்ட் பட டைரக்டர் எல்லாரயும் பரடினோம் இத விட கேவலம் எனக்கு தெரில படம் தமிர்கள் இன் உணர்வை கேலி செய்வது போல இல்ல என்று கூறுங்கள் நம் எங்க இருக்கிறோம் யோசிங்கள்

 • India Sakthi - Chennai,இந்தியா

  கட்டுரை ஆசிரியர் கூறியதை வரவேற்கிறேன், கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பயன்படும் படியான கண்டு பிடிப்புகளை வரவேற்று அவர்களுக்கு எல்லையை உணரும் படி சமிக்ஜை படகுக்கே கிடைக்கும் படியும் இந்திய எல்லையை தாண்டாமல் அதிக மீன் வளம் உள்ள இடத்தை படகில் இருந்தபடி கண்டு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த ராக்கெட் விட்டால் அதை வரவேற்கலாம். தினப்படி வாழ்க்கைக்கு பயன் படாத கண்டுபிடிப்புகளுக்கு செய்யப்படும் செலவுகள் வெட்டி செலவுகள் கணக்கில் சேர்க்க வேண்டியதுதான். அதில் மங்கல்யானும் ஒன்று.

 • Mukund GS - Wellington,நியூ சிலாந்து

  even though i don't support his view on the progress we make on space, the money spent on all space research activities needs to be audited. people of India have the right to know know if the money is spent rightly and economically..this point gains importance as we have majority of population living below poverty line..

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  உயிரை காப்பாற்றும் மாத்திரைகள் என்கிறாரே? அப்படி காப்பாற்றப்பட்ட உயிர் ஏதேனும் நிரந்தரமாய் இருந்ததுண்டா?

 • COMMON MAN - WORLD,சீனா

  நாட்டில் ஏழைகள் இருப்பது அவர்கள் அறியாமை. ஏனென்றால் அவர்கள் பணம் சுருட்டும் அரசியல் வாதிகளை தண்டிப்பதில்லை .ராக்கெட் விடுவதால் அல்ல .

 • Ranjith Govindasamy - Karaikal,இந்தியா

  பிற்போக்கு தனமான கட்டுரை.

 • rajaraja chozhan - madurai,இந்தியா

  அவர் சொன்னதை வரலாற்றில் என்னக்கு பின் வரும் ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும்

 • Manian - Chennai,இந்தியா

  The writer shows his ignorance and short sighted view. In 1876, US congress, out of 12, only 9 states passed the current constitution. But they also realized that to be economically successful, best brains from any where should be allowed to come to USA and innovate things. MIT, Stanford and other private Universities d “trust funds” to attract the best of the best. Chanakya in the 3 BC did the same asking Chandra Gupta to a group of people to knowledge based economic kingdom. It prospered. Doing R&D is the basis of Basic research which up new products, industries and so on, producing enormous wealth to a country. US still does this and that is why the best brain want to go there so that can peruse their inner urging research. In India, first we need to control the population. People should stop producing kids as soon as they get married. Each child costs of resources- oney, food, shelter, education, job, transportation and others and unlimited population can not be sustained by any nation without plenty of resources. Jobs can not be d with functionally illiterate paper degree holders. No amount of money or help can uplift the population. 75% people in villages do not have the know-how to improve their life.Political parties want to keep them as villages as ignorant as possible and use them as political slaves. Why should people sp their own money to listen to garbage. Jews in the world, also Gujarati's know how to wealth -invest and innovate and thus enjoy the economic benefits. The only place in India that did some basic research is at Tata Institute of Fundamental Research. The Bhabha atomic agency benefited from their research. So, to knowledge based economy, we must pursue active research. Sing man to moon or Mars will provide answers to many fundamental questions. It may look like a waste of money and if so, why would US, China, Europe are all sping money on these innovations. Simply, to gain knowledge about new technology development, and economic growth. It is a pity that people without doing basic research make all kinds of attack on research based developments. They should then move to dark African countries to live happily ever. Please don't propagate your ignorance and an idiotic dogma that people will believe and become more and more lazy blaming the country.

 • Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா

  ஏழைகளிடம் பணம் சேர்ந்தாலும் எழைகளாகவேதான் காட்சி தருவர். பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் அவர்களது செயல்பாடுகள் அமையாது.

 • Thennavan - Chennai,இந்தியா

  நல்ல கருத்து. வரவேற்க வேண்டிய கருத்து. முக்கிய காரணம், ஒரு வேலை இவர்கள் எதிர்பார்த்தது போல் மனிதர்கள் வாழ வழி இருந்தால் என்ன செய்ய போகிறார்கள் என்பதுதான்........அதற்கு பதில் விஞ்ஞானிகளால் கூற முடியுமா? இதே 450 கோடியை செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பியதிற்கு செலவிட்டதிற்கு பதில், விஞ்ஞானிகள் வேறு வழியில் செலவிட்டு இருக்கலாம் என்பதே என் கருத்து. உதாரணத்திற்கு, நவீன சேட்லைட் ராக்கெட்டுகள், நாட்டின் பாதுகாப்பை பலபடுத்தும் ராக்கெட்டுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  அப்பட்டமில்லாத இடது சாரி சிந்தனையின் வெளிப்பாடு இந்த கட்டுரை. அறிவியல், தொழில் நுட்பம் ஆய்வு மற்றும் ஒப்பாய்வு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக விளங்குகிறன எனபது பற்றிய அறிவோ அக்கறையோ இல்லாது வயிறு சம்பந்தப் பட்ட விஷயங்கள் வாயிலாக மட்டும் வளர்ச்சியை எடை போடும் அறிவீனத்தின் விளைவு ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றி பேசாது பட்டினி பற்றி மட்டுமே பேசிக் கொண்டு முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் பிற்போக்குவாதம். இந்த கூக்குரலை பல முறை-அதுவும் குறிப்பாக எண்பதுகளின் மத்தியில் கணினிமயமாக்கல் பற்றி விவாதங்கள் எழுந்த உடனேயே கேட்க முடிந்தது. வேலை வாய்ப்புகளை இழந்து பாட்டாளி மக்கள் தெருவில் நிற்பார்கள் என்ற தொடர்ந்த ஒப்பாரி. இன்று என்னடாவென்றால் தோழர் சீதாராம் எசுரி மற்றும் அவரது சகாக்கள் மடிக்கணினி சகிதம் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படிதான் அமரிக்காவில் இருந்து சாம் பிட்ரோடா என்ற வல்லுநர் தனது உயர் பதிவியை விட்டு விட்டு இந்தியாவிற்கு தொழில்நுட்ப ஆலோசகராக வரவழைக்கப் பட்டு, உன்னிக் கிருஷ்ணன் என்ற காங்கிரஸ் அமைச்சரிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டார். இன்றைக்கு தகவல் தொழில் நுட்ப துறையின் அசுர வளர்ச்சிக்கு அவரும் அவரை ஆதரித்த ராஜீவும் அதன் பிறகு அவர்கள் கொள்கைகளில் இருந்து மாறாது சத்தமில்லாது அவற்றை தொடர்ந்த நரசிம்ம ராவும் உண்மையிலேயே நன்றிக்குரியவர்கள். அன்றைய சோவியத் யூனியனில் மக்கள் ரொட்டிக்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது கூட விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணைகள், அணு பரிசோதனை, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் எதுமே அங்கு நின்றதாக தெரியவில்லை. ஏன் என்று காரணம் கேட்டுப் பாருங்கள்? நமது காமரேடுகள் இறக்குமதி செய்யப் பட்ட சொகுசுக் காரில் ஏறி பறந்துவிடுவார்கள்

 • Bala - Chennai,இந்தியா

  இது சம்பந்தம் இல்லாத ஒப்பீடு.மனிதனுக்கு கை, கால், வயிறு முதலியவற்றில் இந்த உறுப்பு தான் சிறந்தது என கூற முடியாதோ அதே போல தான் அறிவியல் வளர்ச்சி மற்றும் வறியவர்களின் முன்னேற்றம். இரண்டும் நாட்டுக்கு தேவை. இந்த கட்டுரையில் இவை இரண்டையும் ஒப்பிடுவதற்கு பதில் ஏழைகளின் நிலைமையை அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் பெரும் பணக்காரர்களின் கள்ள பணம் இவற்றை ஒப்பிட்டு எழுதி இருந்தால் மிக சரியாக இருக்கும்.இந்த கட்டுரை ஒரு தவறான முன்னுதாரணம். மக்களிடம் இப்படிபட்ட கருத்துகளை பரப்புவது தவறு. உண்மையை கூறினால் இந்த விஞ்ஞான வளர்ச்சியால் நாட்டிற்கு வருமானம் அதிகரித்து ஏழைகளின் வாழ்வு உயர வாய்ப்பிருக்கிறது.

 • mannaiyaar - mannargudi,இந்தியா

  சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிக்கையாளர் எல். முருகராஜ் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதவேண்டிய கட்டுரை இது.இந்தியாவில் ஏழைகள் தாங்களாகவே உருவாக்கி கொண்ட நிலைமையில் வசிகிறார்கள். கிட்டத்தட்ட எல்லா மாநில அரசுகளும் இலவச அரிசி மற்றும் கோதுமை குடும்ப கார்டுதாரர்களுக்கு வழங்கு கின்றது. ஒரே இடத்தில வசிக்காமல் ஊர் ஊராய் அலைந்து பிச்சை எடுப்பவர்கள் அந்த நிலைமையில் சுகம் கண்டு விட்டார்கள். ஒரே இடதில் வசித்து குடும்ப கார்டு பெற்று வீடிற்கு தேவையான உணவுபொருட்களை பெற்று ,சிறு தொழில்களை செய்து குடும்பத்தில் வருமானம் பெற்று கொள்ளலாம் . மேலும் புதிய கண்டுபிடிப்புகள் தற்காலத்துக்கு தேவையான ஒன்று. நம்முடைய விஞ்ஞானிகள் மற்ற நாட்டினரைபோல் திறமையானவர்கள். மங்கல்யான் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவது இந்தியாவுக்கு பெருமைதான் .

 • Sami - Tirupur,இந்தியா

  என்னென்னமோ சொல்லறீங்க ஆனால் இதனை கண்டும் காணாமல் மறந்துவிடுவது சாதாரண மக்களின் எதார்த்த நிலை.

 • thamizhponnu - Swansea,யுனைடெட் கிங்டம்

  இந்தியா மங்கல்யான் செயற்கை கோளை அனுப்பிய அன்று, பிபிசி செய்தி இப்படி தான் செய்தி ஒளிபரப்பியது. பிபிசி இன் செய்தி ஒட்டு மொத்த மற்ற நாடுகளின் குமுறல். அவர்களால் இந்தியா வின் விஞ்ஞான சாதனைகளை ஏற்று கொள்ள முடிய வில்லை. அந்த செய்தியை படிக்கும் பொது எவ்வளவு ஆவேசம் வந்துச்சோ , அதை விட அதிகம்கோபம் வருகிறது இந்த செய்தியை படிக்கும் போது. ஒரு இந்தியரால் கூட , இந்திய நாட்டின் வளர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை. இது ஒரு அவமானம். 1,73,000000 (சரியாய் எதனை ஜீரோ னு கூட தெரியல) கோடி ருபாய், ஒரு ஊழல் மட்டும். 450 கோடி ருபாய், உங்க கண்ணை உறுத்துச்சு னு சொன்னா, இன்னும் 50 வருஷம் ஆனாலும், ஏழைகளையும் மேம்படுத்த முடியாது., அறிவியலையும் மேம்படுத்த முடியாது. இன்னொரு விஷயம்., அதிகமான ஏழைகள் இந்தியாவில் இருக்க காரணம், 450 கோடி ருபாய் ஏவுகணை இல்லை., நீங்களும், நானும் தான் காரணம்... நம்முடைய சுயநலமும் அதனால் நாம் செய்கிற சிறு சிறு தவறுகளும் தான், பூத கரமா ஏழைகளின் தலையில் விடிகிறது. உதாரணம், வரி ஏய்ப்பு... :) இப்படி சொல்லி கிட்டே போகலாம்., நம்முடைய வேலையை சரியாக செய்தாலே போதும் ., விஞ்ஞானிகள் அவர்கள் வேலையை பார்க்கட்டும்., நாடு தன்னால் முன்னேறும்... இந்திய மக்கள் தொகை கணக்கில் எடுத்து, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தல், சராசரியாக இநதியா எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பிரிட்டின் நாட்டில், பிளாட்போறம் ல வாசிக்கிறவர்கள் அதிகம். அமெரிக்கா ஏழைகளை கேழே தள்ளி , அவர்கள் மேல் நாற்காலி போட்டு அமர்ந்து பணக்கார நாடக தன்னை காட்டி கொள்கிறது. அமெரிக்காவில் ஓபி அடிபவர்களுக்கு வேலை கிடையாது. திறமை கு மட்டுமே முதலிடம். எந்த நேரத்திலும், வேலை போய்விடும்., வெறும் அறிவாளிகளை மட்டுமே வைத்து முனேறிய நாடு அது. ஒரு போதும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து நம் நாட்டை தாழ்தாதீர்கள். எவ்வளவு திறமையான விஞ்ஞானிகள், பாரட்ட முடியல னாலும் பரவாயில்லை., உதாசின படுத்தாதிர்கள்.., நன்றி.

 • Kumar KSK - Chennai,இந்தியா

  எல்லா துறைகளுக்கும் அரசு நிதி ஒதுக்குகிறது.. இந்த அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசு ஒதுக்கும் பணம் நமது பட்ஜெட்டில் இரண்டு சதவிகிதம் கூட கிடையாது... அதை வைத்து நமது விஞ்ஞானிகள் பல அற்புதங்களை செய்து நம்மை பெருமையடைய செய்திருக்கிறார்கள்.... எத்தனையோ தகவ தொழில்நுட்ப, நில, வள, வானிலை ஆராய்ச்சி சாட்டிலைட்டுகளை ஏவி நாட்டு வளர்ச்சிக்கு எவ்வளவோ உறுதுணை செய்திருக்கிறார்கள்.. அது போக வியாபார ரீதியில் பிற நாடுகளுக்கும் கிட்ட தட்ட 50 சாட்டிலைட்டுகளை ஏவி பணம் சம்பாதிக்கிறார்கள்.. அவர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள நாடு இன்னும் நன்மை அடைய நமது பல லட்சம் கோடி பட்ஜெட்டில் 450 கோடியை கொடுப்பதில் எந்த முட்டாள்தனமும் இல்லை.... அதை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு அந்த இரண்டு சதவீகிதம் போக மீதம் 98 சதவீகிதம் நிதி எங்கே போகிறது என்ற ஆராய்ச்சியை இந்த கட்டுரையாளர் செய்திருந்தால் அதுதான் புத்திசாலித்தனமாய் இருந்திருக்கும்..

 • kannamma - Coimbatore,இந்தியா

  விஞ்ஞானம் , ராணுவம் இரண்டையும் அரசியல் படுத்தாதீர்கள் ப்ளீஸ் இதற்கு ஆகும் செலவுக்கும் கணக்கு பார்க்க வேண்டாம். அடிப்படை வசதி இல்லாமல் போனதற்கு , அரசியல்வாதிகள் மட்டும்தான் காரணமா? பொறுப்பில்லாத கயவர்களை மதத்தின் பெயரால் , சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் , பதவியில் அமர வைத்த பொது மக்கள்தான் காரணம். "காசுக்கு தக்கின பணியாரம் " என்ற சொலவதை போல் , மக்களின் நேர்மைக்கு தக்க அரசாங்கம் தான் அமையும். அரசியல்வாதிகள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? நம்மில் சிலர்தானே அவர்கள்?

 • gmk1959 - chennai,இந்தியா

  இந்த விவாதம் காலம் காலமாக தொடருவதுதான். மனிதன் தோன்றியதில் இருந்து அறிவிற்கும் வயிற்றிக்கும் இருக்கும் போட்டிதான் பணதிற்காக நாட்டினை விற்கும் அரசியல் வியாதிகள் தான் இந்த விவாதங்களை கிளப்பி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் . அறிவிற்கு தடை போடவேண்டாம் > நம் சந்ததிகள் நம்மை சபிக்கும்

 • Sudhakar - Bangalore,இந்தியா

  எல்லா கண்டுபிடிப்புகளும் இப்படிபட்ட விமர்சனங்களை தாண்டிதான் வந்து மக்களால் உபயோகிக்கபட்டு வருகின்றது, ஆராய்ச்சிகள் தேவை இல்லை என்றால் நாம் முதலில் பேருந்து, விமானம், தொலைபேசி போன்ற எதுவும் உபயோகிக்க கூடாது, இந்த கண்டுபிடிப்புகளும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவைதான்.

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  நாட்டில் ஏழ்மைக்கும் மற்ற பிரச்சன்னைகளுக்கும் காரணம் பண தட்டுப்பாடு அல்ல. நாட்டை ஆள்பவர்களின் மன தட்டுப்பாடு தான். வறுமையை போக்க எவ்வளவு கோடி பணம் ஒதுக்கினாலும் அவற்றை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டு மக்களை ஏழையாகவும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் வைத்திருப்பார்கள். அப்படி இருந்தால் தான் அரசியல் வாதிகளின் பிழைப்பு நடக்கும்.

 • Parthiban S - arumuganeri,இந்தியா

  "ஒரு குழந்தைக்கு 'மூளை அடங்கிய' தலை மட்டும் அதீத வளர்ச்சி கண்டால், நம்மால் அதை ரசிக்க இயலுமா..? முழு உடலின் சீரான வளர்ச்சியே இயற்கையானது இல்லையா..? இதை 'முறுவலாக' சொல்லாமல் 'குமுறலாக' கூறியுள்ளார் முருகராஜ் அவர்கள்...

 • Praveen - Chennai,இந்தியா

  வறுமையையும் இதையும் கலந்து பார்க்க கூடாது... நீங்கள் பேசும் செல் போன், உபயோகிக்கும் T.V, ராணுவ ராடார் கருவிகள், வானிலை , இன்டர்நெட் ,இதெல்லாம் செயற்கை ‌கோள் இல்லாமல் நடக்காது... சென்ற நூற்றாண்டில் உலக கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் பங்களிப்பு பூஜ்யம் என்று உங்களுக்கு தெரியும் தானே .. இப்போதாவது கொஞ்சம் முன்னேறலாம் ... அது சரி .. இந்தியாவில் ஏழைகள் உள்ளனர் என்று நீங்கள் குறைவாக சம்பளம் பெற்று கொள்கிறீர்களா , இல்லை ஒருவேளை உணவு உண்பதில்லயா ? I am sorry கருத்து கந்தசாமி அவர்களே...

 • kannan, ITALY - florence,இத்தாலி

  Actually it was misundstood by many people. 10 years before we are not our own PSLV to launch satellite, when we achieved this technology. we launhed more than 12 satallite by using our technology for other underdeveloped countried as commerical basis, it means national income. you are looking this is waste of money not at all. this is kind of investment made and told to countries we are capable to doing this. then atleast we can get minimum 5 to 10 orders. these are commerical means you all know how much income will be gain to country. Don't think these are did for only national pride no these are actually basic national business investment. now you are enjoying 3g, 4g etc., just imagine we are not our own satellite or not capacity to produce then cost of these 3g, 4g service un imaginable and our comminucation gap will be more with other countries.So country people will not get jobs their economy will not improve country economy will not imporve. At a conclusion if you are not doing this, your son or your grand son will be isolated from the world and not even get food to eat beacuse you are not conected with world on s.In this world technology is the key for sustain. we appreciate this and keep moving on this direction.

 • SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்

  இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த ஏழ்மையை சொல்லி அறிவியல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை கெடுப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்க முதல் நான் வசிக்கும் பிரிட்டின் வரை ஏழ்மை உள்ளது. நாம் அணைத்து விதத்திலும் மற்ற நாடுகளுக்கு போட்டியாக இருக்க வேண்டும். ஏழ்மையை சொல்லி தடை போட்டால் பிறகு விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வார்கள். கல்வி கற்றால் மட்டும் போதாது அதற்கு இணையாக வேலை வேண்டும். ஏழ்மையை சொல்லி விஞ்ஞானிகளை விவசாயம் செய்ய சொல்ல கூடாது, நான் விவசாயத்தை குறை கூறவில்லை நானும் அங்கு இருந்து வந்தவன் தான். நம் மக்கள் தொகையுடன் மற்ற நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடு பாருங்கள் நம் நாட்டில் உள்ள ஏழ்மையை விட மற்ற நாட்டில் உள்ளது அதிகம் அவர்கள் அதை மறைத்து மற்ற நாடுகளை கட்டுபடுதுகிறார்கள் காரணம் அறிவியல் நல்ல ஆளுமை மற்றும் ராணுவம். நாம் எதிலயும் முன்னேறாமல் அண்டை நாடான பாகிஸ்தான் சீனா மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளுக்கு பயந்து கொண்டு இருக்கிறோம்.

 • Sound Saroja - Thangachimadam,இந்தியா

  இவர் அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்த்தவர். மூளை சலவை இப்படித்தான் எழுதும். அமெரிக்க நாடு இந்திய துணைகண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அறிவியல் முன்னேற்றங்களை கண்ணில் எண்ணையை விட்டு பார்த்துகொண்டிருக்கின்றது.அதற்க்கு இவர் போன்ற ஆட்களும் துணை போவார்கள். காரணம் பணம், காசு, துட்டு, மணி கடைசியாக பயம்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நாம் வளர்ந்த நாடுகளை விட கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் (Four Decades)பின்னே இருக்கிறோம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .மற்ற வளர்ந்த நாடுகளில் எல்லாம் தனி நபர் வருமானம் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது ,அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டது .ஆனால் இந்தியாவில் அடிப்படையில் உண்ண உணவு இருக்க இடம் ,உடுத்த உடை சுத்தம், சுகாதாரம் கிட்டத் தட்ட எண்பது சதவீத மக்களுக்கு இல்லை .விவசாயமே இந்தியாவில் செத்துப்போச்சு .வெளிநாடுகளில் இருந்து எவருக்கும் உதவாத சத்தில்லாத பாமாயிலை கோடிக்கணக்கில் இறக்குமதி செய்கிறோம் ,பயன் படுத்துகிறோம் .முதலில் இந்தியாவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுங்கள் ,மிக முக்கியமாக மாற்று எரி பொருளுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவழித்தாலும் பரவாயில்லை .அதற்காக பல லட்சம் கோடி டாலர்கள் பல ஆண்டுகளாக செலவழித்துக்கொண்டே இருப்பது அவசியமா ?ஒரு வேலை நாளை வளைகுடா நாடுகளில் எரிபொருள் தீர்ந்து விட்டால் நாம் என்ன செய்யப்போகிறோம் ?வாங்கிய வாகனங்களை என்ன செய்வது ?கற்பூரம் சாம்பிராணி ஊதுபத்தி கொளுத்தி பூஜை செய்ய வேண்டியதுதான் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .

 • Panchalai Natarajan - Kochi,இந்தியா

  சமூக ஆர்வலர் இந்த கருத்தை பதிவு செய்ய, அது மக்களுக்கு சென்று சேர இன்று எடுத்து கொண்ட நேரம் சில மணித்துளிகள் மட்டுமே. அதற்கு யாரோ ஒருவர் செய்த அறிவியல் ஆராய்ச்சிதான் காரணம். அதற்காக யாரவது ஆராய்ச்சி செய்யட்டும் நாம் வுபயோகம் செய்து கொள்ளலாம் என்றால் அது மிகவும் குறைந்த விலையில் சாமான்ய மக்களை சென்று சேர ஒவ்வொருவரும் கொடுக்கும் விலையை கூட்டி பாருங்கள். அது அறிவியல் ஆராய்ச்சிக்கு நாம் செய்யும் செலவை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக இன்று மொபைல் போன் வுற்பத்தி செய்ய நமக்கு தெரியாது. ஆனால் அது இல்லாமல் அதே சாமான்ய மக்களால் இருக்க முடியாது. அது நமக்கு கிடைக்க நாம் தரும் விலை , ஒரு மொபைலுக்கு குறைந்த பட்சம் ரூ 1500. அது நம்மே செய்ய முடிந்திருந்தால் 500 க்கு கிடைத்திருக்கும். நட்டமான அந்த 1000, உபயோகிக்கும் மக்களால் பெருக்கி பாருங்கள் எத்தனை லக்ஷம் கோடிகள் நாம் கொடுத்திருக்கும் விலை என்று புரியும். இது எல்லா ஆராய்ச்சிக்கும் பொருந்தும்.

 • Boomi - Mumbai,இந்தியா

  முதலில் இலவசம் இலவசம் என்று அலையும் நம்மவர்களை திருந்த சொல்லவேண்டும்.

 • Valluvan - கோயம்புத்தூர்,இந்தியா

  உங்களாலும் (கட்டுரை ஆசிரியரையும்) என்னாலும் கருத்து சொல்ல தான் முடியும். என்னால் ஒரு ராக்கெட்டை உருவாக்கவோ அல்லது அதற்குரிய அறிவோ கிடையாது. என்னால் நல்ல அரசியல் வாதியாக முடியாது. என்னால் ஒரு பத்து குடும்பத்துக்கு அடிப்படை வசதிகள் கொடுக்கவோ அல்லது ஏழ்மையை விரட்டவோ முடியாது. நம் நாட்டில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பணிகளில் சிறப்பாக செயல்பட்டாலே போதும். முடிந்தால் நம் குடும்பத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு நல்லது செய்பவர்களை ஊக்குவித்தும், ஊழல் மற்றும் தீங்கு செய்பவர்களை விமர்சித்தும், வாக்குரிமையை பயன்படுத்தி அவர்களை பதவியிறக்கம் செய்தும் நம் கடமையை செய்யலாம். ஊழல் பெருச்சாளிகள் சுரண்டிய லட்சம் கோடிகளையும், கறுப்பு பணங்களையும் கொண்டு நம் ஏழ்மையையும், அடிப்படை மற்றும் அனைத்து வசதிகளையும் மேம்படுத்தலாம்.

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  5 கோடிக்கு பாலம் கட்டனும்னா..அதுக்கு அடிக்கல் நாட்டு விழா,திறப்பு விழா அதுக்கு தலைவர்கள் வருகை தங்கும் வசதி,உணவு,பாதுகாப்பு,விளம்பரங்கள் அது இதுன்னு வெட்டி செலவுகள் மட்டுமே 5 கோடி கிட்ட வந்திரும்.(கொஞ்ச நாளா ஜெ ஆட்சியில இந்த மாதிரி கொடுமைகள் கொஞ்சம் குறைந்திருப்பது நல்ல விஷயம்).மக்கள் பணத்தில் பல கோடிகளை விரயம் செய்து சினிமாவுக்கு விழா எடுப்பது,செந்தமிழ் மாநாடு என்ற பெயரில் தன்னைதானே புகழ்ந்து கொள்வது...யாருடைய பணத்தில் யாருக்கு பாராட்டு..இந்த வெட்டி விழாக்களால் இந்த பணத்தை கொடுத்த மக்களுக்கு என்ன பயன்?.(அது சரி குத்தாட்டம் போதுமே நம்ம ஆளு எத பத்தியும் யோசிக்க மாட்டான்)இது போல் இந்தியாவில் ஒவ்வரு மாநிலத்திலும் ஆகும் வெட்டி செலவுகளை ஒப்பிடுகையில்..ஊழல் மலிந்த நாடு என்று உலக நாடுகள் மத்தியில் பெயர் பெற்ற இந்தியாவுக்கு,விண்வெளி ஆராய்ச்சி யாவது மரியாதையை தேடி தரட்டும்.

 • Hariaharan Adhiseshan - Madurai,இந்தியா

  சமூக ஆர்வலர் குழப்பத்தில் உள்ளார் என தெரிகிறது அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவு என்பது அவசியமான ஒன்று அதை மக்களின் அடிப்படை தேவைகளோடு ஒப்பிடவே கூடாது. நம் நாட்டில் பல்வேறு வீண் செலவுகள் அரசால் செய்யப் படுகின்றன ஊழல் பல ஆயிரம் கோடி நடக்கிறது அதை தடுப்பது பற்றி யோசித்தால் நலம் அதை விட்டு விட்டு ஒரு அறிவியல் சோதனைக்காக பல ஆண்டுகள் தனது சொந்த வாழ்க்கையை கூட விட்டு விட்டு லாபே கதி என இரவு பகல் உழைக்கும் விஞ்ஞானிகளை அவமானப் படுத்துவதாகும் இப்படியே போனால் நாளை ராணுவத்துக்கு எதுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கூட கேட்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே இரண்டையும் ஒப்பிடுவதே தவறு

 • Kannan Venkatesan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஹலோ முருகராஜ் , நான் தங்கள் அனைத்து எழுத்துகளையும் படிப்பவன், இருந்தாலும் இந்த மேலே எழுதிள்ள ரிப்போர்ட் எனக்கு உடன்பாடு இல்லை, காரணம் இந்தியா 2ண்ட் அதிக மக்கள்துகை உள்ள நாடு உலகில், உலகை புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருப்பது இந்த அறிவியல் இன்ஜினியரிங் முன்னேற்றமே எது இலையேல் வேறு ஒரு பாபர்+பிறங்கி அல்லது வெள்ளையன்+துபக்கியோ வந்து இந்தியாவை ஆளும் நிலை வேண்டுமா?.....

 • subbu - Tirunelveli,இந்தியா

  சார்,தயவு செய்து விஞ்ஞானிகளை குறை சொல்லாதீர்கள் அவர்கள் தங்களுடைய கடமையை செய்கிறார்கள்,நீங்கள் கூறுவதை பார்த்தால் என்னவோ நாட்டின் மொத்த வருமானத்தையும் விண்வெளிக்கு மட்டுமே பயன்படுத்த படுவதாக தோன்றுகிறது,ஆனால் நாம் விண்வெளிக்கு செய்யும் செலவு நாட்டின் வருமானத்தில் வெறும் 0.9 சதவிகிதம் மட்டுமே.மற்ற துறைகளிலும் நிதி ஒதுக்காமலா இருக்கிறார்கள்,அவரவர் தத்தம் துறைகளின் கடமைகளை ஒழுங்காய்ச் செய்தாலே போதும் அது இங்கு இல்லை எல்லா துறையிலும் ஊழல் பிறகு எப்படி நாடு முன்னேறும்,நீங்கள் அதை விடுத்து ராக்கெட் விட்டதால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுவது முற்றிலும் பொருத்தமற்றது,ஏன் என்றால் மற்ற துறைகளை காட்டிலும் நன்றாக செயல்படும் துறை விண்வெளி துறை மட்டுமே,அதனால் விண்வெளி துறையை குறை கூறுவதை விடுத்து மற்ற துறைகளின் நடவடிக்கைகளை பாருங்கள் உங்களுக்கு புரியும்.

 • Thangairaja - tcmtnland,இந்தியா

  அடிப்படை தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்கும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் முடிச்சு போடுவது கடைந்தெடுத்த மூடத்தனம். இவர் பட்டியல் போடும் அடிப்படை விஷயங்கள் எல்லாமே மக்களின் ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டது. அரசாங்கம் நினைத்தாலோ செயல் படுத்தினாலோ மட்டுமே இத்தேவைகள் பூர்த்தியாகி விடாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் மக்களுக்கு முதலில் அக்கறை வேண்டும்.

 • villupuram jeevithan - villupuram,இந்தியா

  எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேட்க . ஆனா செவிடன் காதுல ஊதின சங்காகி விடுமே .

 • தமிழ் சிங்கம் - chennai,இந்தியா

  இந்த மங்கல்யான் மார்சிற்கு போனால் என்ன? கடலில் விழுந்தால் என்ன? இந்தியாவிற்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. மிக சரியாக ஆசிரியர் கூறியுள்ளார். 450 கோடி இதற்கு செலவு செய்ததற்கு பதில், நாற்பதாயிரம் பேருக்கு கலர் டிவி கொடுத்து இருக்கலாம். அல்லது ஒருவேளை பிரியாணி மற்றும் டாஸ்மாக் சரக்கு கொடுத்து குடிமகன்களை குஷி படுத்தி இருக்கலாம். எதற்கும் உபயோகமில்லாமல், 450 கோடியை மத்திய அரசு மார்சின் கடலில் கலந்து விட்டது என்பதே உண்மை. மக்களுக்கு எது தேவை என்பதை மிக சரியாக இந்த சமுக ஆர்வலர் புரிந்து வைத்துள்ளார். இந்த அதிபுத்திசாலியான சமுக ஆர்வலர் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு சிறந்த சேவை புரிவார் என்பது நிச்சயம். அப்புறம் கடந்த இருபது ஆண்டுகளாக கிரயோஜெனிக் எஞ்சிநிர்காக இந்தியா, மகேந்திரகிரியில், கோடிக்கணக்கான ரூபாய்களை வீணடிக்கிறது. இன்னமும் உருப்படியாக எதுவும் கண்டுபிடிக்க முடியாமல், இந்திய விஞ்ஞானிகள் இருபது ஆண்டுகளாக தடவிக்கொண்டு இருக்கிறார்கள். போனமுறை எங்கள் கிரயோஜெனிக் என்ஜினை, நாங்களாக ஏவுகிறோம் என்று சொல்லி ஒரு gslv ராக்கெட்டை கடலில் மூழ்கடித்தார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, ஹிந்துஸ்தான் மோட்டாரில், ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கிறோம் என்று நாற்பதாயிரம் கோடிக்கு மேல் ஏப்பம் விட்டுவிட்டனர். விஞ்ஞானிகள் செய்யும் வெட்டி செலவுகள் அதிகமாக உள்ளதால் தான் நாடு முன்னேறவில்லை. மேலும், டிசெம்பர் மாதம் இன்னொரு ராக்கெட், கடலுக்கு ஏவ போகிறார்களாம். அது எவ்வளவு செலவு என்பது அடுத்த மாதம் தெரியவரும். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்ட செல்ல ஆசைப்பட்டதை போன்று நமது விஞ்ஞானிகள் ஆசைபடுகின்றனர். அது தவறில்லை. ஆனால் முயற்சியே செய்யாமல், ஆசைபடுவதுதான் கொஞ்சம் ஓவராக உள்ளது. ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுதீவன ஊழல், cwg ஊழல், கார்பரேட் ஊழல், கருப்பு பணமோசடி என்று எண்ணில் அடங்கா ஊழல்கள் லட்சம் கோடிகளில் நடப்பதால், இந்த 450 கோடி சிறிதாக தெரிந்தாலும், சிறிதல்ல என்று ததுரூபமாக விளக்கிய சமுக ஆர்வலர்? முருகராஜ் மிகவும் பாராட்டத்தக்கவர்.

 • siva - Madurai,இந்தியா

  நல்ல பதிவு. தாங்கள் குறிப்பிடுவது அனைத்தும் தேவையான அடிப்படை வசதிகளே, நாட்டில் ஊழல் ஒழியும் பட்சத்தில் இவை அனைத்தும் சாத்தியம். ஒரு நாட்டின் வளர்ச்சி எல்லா முனைகளிலும் இருந்து பார்க்க படுவதனால், அதில் விண்வெளி ஆராய்ச்சியும் மிக முக்கியமான ஒன்று.

 • Krish - India,சிங்கப்பூர்

  அடிப்படை வசதி இல்லாத நாட்டுக்கு, எதுக்கு இந்த விண்வெளி ஆராய்ச்சி. நீங்கள் சொல்வது சரிதான். எத்தனை செயற்கைக்கோள் விட்டாலும் அதனால் விவசாயிக்கும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் என்ன பயன் என்று கேட்டால், ISRO வில் இருக்கும் O தான் பதில் அதாவது முட்டை. இன்னும் வெள்ளக்காரன் போட்ட ரயில் பாதையை தான் நாம் உபயோகம் செய்கிறோம். அதற்கு world,s slowest transport network என்ற பட்ட பெயரும் உண்டு. மனித கழிவுகள் இன்னும் தண்டவாளத்தில் தான் கொட்டப்படுகிறது. மக்கள் தொகை கூட கூட, பொது வசதிகள் ஆகிய, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து - இவைகளும் வளர்ந்திருக்க வேண்டும். இதை எல்லாம் நீங்கள் எழுதிவிட்டீர்கள், நான் கடுப்புடன் மனதில் புதைத்து விட்டேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement