Advertisement

உரத்த சிந்தனை: பாழடையும் பல்கலைக் கழகங்கள் : முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்

உலக அளவில் முதல், 200 இடங்களில், இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இல்லை என, சமீபத்தில் ஜனாதிபதி வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் கீழ், கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இத்தனை இருந்தும், உலகத் தர வரிசையில், இந்திய பல்கலைக் கழகங்கள் இடம் பெறாதது பற்றி சிந்திப்பது அவசியம்.

இந்திய அளவில் ராணுவத்துக்கு அடுத்தபடியாக, கல்விக்காகத் தான், அதிக பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் தேர்வும், பணியாற்றும் விதமும், அவர்கள் தயாரிக்கும் பாடத் திட்டங்களும், பயிற்றுவிக்கும் முறையும், அடிப்படை வசதிகளும், கல்வி மேம்பட எடுக்கும் முயற்சிகளும் போதுமானவையாக இல்லை. இதனால், தர வரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறி விடுகிறோம்.பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள், உலகத் தரத்தை எட்டும் படியாக எதையும் எழுதுவது இல்லை; ஆசிரியர் மாணவர் உறவைப் பேணுவதும் இல்லை; வகுப்பு நேரங்களில் வகுப்புகளுக்குச் செல்வதும் இல்லை; துறைதோறும் ஆராய்ச்சிகள் நிகழ்வதும் இல்லை.கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளை வெளியிட, தரமிக்க ஆய்வு இதழ்களும் இல்லை; பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தகுதியுடையோராய் இல்லை; பயிற்றுவிக்கப்படும் பாடத் திட்டங்களும் உலகத் தரமோ, தகுதியோ உடையதாக இல்லை. கல்வியோடு சம்பந்தப்பட்ட எதற்கும், இல்லை என்ற பதிலே கிடைத்தால், உலகத் தர வரிசையில் எப்படி இடம் பிடிக்க முடியும்.

கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர, 'நெட்' அல்லது 'சிலெட்' தேர்வு மட்டுமே போதுமானது. ஆனால், நெட், சிலெட், பிஎச்.டி., என்பனவற்றுள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என, தகுதிப்பாடு வைக்கப் போய், அனைவரின் கவனமும், பிஎச்.டி., பக்கம் திரும்பியுள்ளது. மற்ற இரண்டையும் விட, பிஎச்.டி., இலகுவானது.ஏனெனில், பிஎச்.டி., ஆய்வேட்டை எழுதிக் கொடுத்து சம்பாதிக்க, பலர் தமிழகத்தில் உண்டு. அதில், சில கல்லூரிப் பேராசிரியர்களும், அடக்கம் என்பது வேதனைக்குரியது. கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, நெட் அல்லது சிலெட் மட்டுமே இருக்கலாம் என, அரசு அறிவிக்குமெனில் தகுதிஉடையோர் நியமனம் பெறுவர்.சில பல்கலைக்கழகத் துறைகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, சிபாரிசு மட்டும் இருந்தால் போதும். சில நேரங்களில் ஜாதி, மதம், அரசியல் இவை எல்லாம் கூட கை கொடுக்கும். பின் எப்படி பல்கலைக்கழகங்களில் தரத்தை எதிர்பார்க்க முடியும்.

பல்கலைக்கழகத்தில், கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியமர்ந்த பின், தன்னைத் தகவமைத்துக் கொள்ள, பலர் தவறி விடுகின்றனர். ஆய்வில் ஈடுபடுவதிலும், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும், ஆய்வு நூல் எழுதி வெளியிடுவதிலும், ஆய்வுக் கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
சம்பளமாக அதிகப் பணம் கிடைத்தும், வேறு பல வழிகளில் அதிகம் சம்பாதிக்கவே ஆசைப்படுகின்றனர். பதவியில் அமர்த்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு, பணிமூப்பு என்பதைக் கருத்தி்ல் கொள்வதோடு, தகுதி மேம்பாட்டையும் அரசு கவனத்தில் கொள்ள முன்வர வேண்டும்.பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் ஆகிய இரண்டும், கற்பித்தல் செயல்பாடுகளுக்கான குறியீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்கான சட்டத் திருத்தத்தைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியி்ட்டுள்ளது. இந்த மதிப்பெண் தகுதியுடன் நேர்முகத் தேர்வின் போது, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வகுப்புகளை நடத்த வைத்தும், வெளிப்படையான முறையில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த அரசு முன் வர வேண்டும்.

மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்ட, தரமான பாடத் திட்ட உருவாக்கமும் அமைதல் வேண்டும். அதற்கான பாடத் திட்டக் குழு உறுப்பினர் நியமனமும் சீர் செய்யப்பட வேண்டும்.உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்போர்க்கு, முன்பு செய்முறைப் பயிற்சிகள் இருந்தன. இப்பொழுது உயிர் வதைத் தடுப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி, செய்முறைப் பயிற்சியே இல்லாமல் செய்து விட்டனர். ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க இயலவில்லை என்றால், அந்தப் பாடத்தையே, பாடத் திட்டத்தில் இருந்து எடுத்துவிடும் போக்கு உள்ளது.சான்றாக, மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்போர்க்கு மொழியியல் அறிவு, மிக மிகத் தேவை. மொழியியல் மிகவும் கடினம் எனக் கருதி, அதைப் படிப்பது மாணவருக்குப் பயனுடையதாக இருந்தும், ஆசிரியர்களுக்குப் புரியாமல் போனதால், பாடத் திட்டத்திலிருந்தே எடுத்துவிடும் போக்கும் நடைமுறையில் உள்ளது.பல்கலைக்கழகத் தேர்வுக் கண்காணிப்புத் துறையும், மாணவரின் சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிழையின்றி கேள்வித் தாள்களைத் முன் கூட்டியே தயாரிக்க வேண்டும். கேள்வித்தாள் தயாரிக்கும் நபரிடமே குறிப்புகளையும் கேட்டுப் பெற்று வைத்திருந்தால், விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் போது குழப்பங்கள் எழாது.

பல்கலைக்கழக, கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் தர நிர்ணயக் குழு (நாக்) வரும்போது மட்டும், வளாகத்தைச் செப்பனிடுவதும், வகுப்பறைகளைச் சுத்தம் செய்வதும், துறைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதும், ஆய்வுக்கூடங்களைச் செப்பனிடுவதும் தவிர்த்து, கல்வியாண்டின் எல்லா நாட்களிலும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தும் நிகழ்ந்தால், உலகத் தர வரிசையில் இந்தியப் பல்கலைக் கழகங்களும் இடம் பிடிக்கும். இந்திய அரசின் கல்விக்கான செலவழிப்பிலும் அர்த்தம் இருக்கும்.
tamilsreekumargmil.com

முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் பேராசிரியர், சமூக ஆர்வலர்
Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • KMP - SIVAKASI ,இந்தியா

  இன்றைய சூழலில் அரசு வேலை வாங்க தகுதிகள் இருந்தும் லட்சம், கோடி என பணம் லஞ்சம் கட்ட வேண்டி உள்ளது ..... அதுவும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவைகளில் பேராசிரியர்கள் நியமனத்தில் பல பல முறைகேடுகள் நடக்கின்றன .... இந்தியாவில் எத்தனை பல்கலைக் கழகங்கள் தகுதியான, அரசியல் செல்வாக்கு பின்புலம் இல்லாத துணைவேந்தர்கள் உள்ளார்கள், இங்கே துணைவேந்தர்கள் நியமனத்திலும் பல முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு வேண்டிஉள்ளது..அரசு இயந்திரம் பழுது பார்க்க படவேண்டும் ...

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆசிரியர் சங்கங்கள் உடந்தை என்பதை ஆசிரியர் குறிப்பிடத்தவறிவிட்டார்

 • r.sundararaman - tiruchi,இந்தியா

  எழுத்தறிவித்தவன் இறைவனாகும் ,அன்னையும் பிதாவும் ,முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற மூதுறைகள் காற்றில் பறக்கவிட்டு பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்னும் நவீன கோட்பாடுகளின்படி எவ்வாறேனும் பணம் பண்ணி அதனை பல்கிபெருக்கிட ஒரு சாதனம் தான் கல்வியாக மாறியுள்ளது .பணத்தைகொட்டி இடம் பெற்று தகுதிபற்றி கவலையின்றி கன்வேயர் பெல்ட் போன்ற கல்விக்கூடங்கள் சேரும் மாணவர்களை பட்டதாரிகளாக உற்பத்தி செய்து நாட்டின் மக்கள் தொகையில் சேர்த்துவிடும் நிலையில் வேலைக்கு சம்திங் மேல்படிப்புக்கு சம்திங் என்னும் நாட்டில் எல்லா கல்வி மேலாண்மை அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக விருப்பு வெறுப்பு இன்றி தகுதி அடிப்படையில்,நபர்களை ஜாதி மத நோக்கின்றி தகுந்த நேர்மையாளர்களை நியமித்து கண்கானித்தால் மட்டுமே விமோச்சனம் கிடைக்கும் .ஒட்டு சாம்ராஜ்ஜியம் குறிஎன்றால் நாடு நாசமாகிப்போகும் அவவளது தான் .இந்நிலையில் ஒழுக்கம் ,அறிவு ,செயல்திறன் நேர்மை இவையாவும் இருக்கும் இடமின்றி அழியும் .

 • Karam chand Gandhi - Auroville,இந்தியா

  சுதந்திரத்திற்கு பின் இந்தியர்கள் இந்தியாவில் அழித்ததில் ஒன்று தரமான கல்வியை. இந்தியர்களுக்கு தெரிந்தது ஆக்கம் ஒரு பங்கு அழிவு நூறு பங்கு. தேவையில்லாமல் கூத்தாடிகளின் சாதனை பற்றியும் அதுவே வாழ்க்கை எல்லாம் அதுவே அப்படின்னு பேசுவார்கள்.

 • mprabaharan - chennai,இந்தியா

  நெட் தகுதி மட்டும் இர்ருந்த எப்படி ரெசெஅர்ச் செய்வது. அவர்களுக்கு ர்சீர்ச் அறிவு இருக்காது. எத்தனயோ போஸ்ட்-டாக் வேலை இல்லாம இர்ருகாங்க நாட்டுல, இந்த சமுக ஆர்வலர்களுக்க அத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியல. இதோட எப்படி வீ சீ போஸ்ட் உனிவேர்சிட்டி யில் அப்பொஇண்ட் பண்றாங்க இன்னு இவருக்கு தெரியும். இவனுக பண்ற உழலுக்கு அளவு இல்ல. அதபத்தி எல்லாம் ஒன்னும் சொல்லல.

 • KMP - SIVAKASI ,இந்தியா

  President worried about the world univ ranking, whether we know the so many irregularity following while recruiting the professors ?

 • Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்

  கல்வியை பணம் பண்ணும் ஒரு தொழிலாக பார்த்தால் எப்படி வெளங்கும்?

 • Sanghimangi - Mumbai,இந்தியா

  பிஹெச்டி முடிப்பதை விட நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் ஆசிரியராக வர வேண்டும் என்று தாங்கள் முன்வைக்கும் வாதம் (இப்போதைய நடைமுறையில்) அர்த்தமற்றது. இந்த நெட் தேர்வை எழுத இந்தியாவின் பெருநகரமான மும்பையில் கூட தேர்வு மையம் இது வரை அமைக்கப்படாத போது சிறு, குறு ஊர்களில் இருப்பவர்கள் இந்த தேர்வு மையங்கள் இருக்கும் முக்கியமற்ற ஊர்களுக்கு தேர்வெழுத போவதற்கே பெரும் திண்டாட்டமாகி விடுகிறது. தமிழகத்தில் கூட மதுரை, கோவை போன்ற நகரங்களை விடுத்து காரைக்குடியில் தேர்வை வைக்கின்றனர். யார் பெருவாரியாக அங்கு போய் தேர்வெழுதுவர்? இப்படி நெட் தேர்வின் அடிப்படையே காலத்திற்கேற்ப மாறவில்லை. இந்த விசயத்தில் கேட் தேர்வு மிக அருமை. அதே சமயம், 2011 இல் 900 ரூபாயாகவும், 2012 இல் 1300 ரூபாயாகவும், 2013 இல் 1500 ரூபாயாகவும் கேட் தேர்வு கட்டணம் இருக்கும் போது எந்த ஏழை மாணவனால் தொடர்ந்து இந்த தேர்வை எழுத முடியும்? 100 க்கு 99 சதவிகிதம் ஒரு முறைக்கு மேல் தேர்வேழுதுபவர்தான் இது போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆக, குறைந்தது தேர்வு கட்டணம் கூட கட்ட முடியாத மக்கள் எப்படி தொடர்ந்து போட்டியிட முடியும்? அடுத்து, அடிப்படை அறிவியலில் புலமை பெற்று இருந்தால்தான் இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியும், ஆனால் இங்குள்ள ஆசிரியர்களுக்கு முதுகலை பட்ட படிப்பை எடுக்கும் பாடம் சார்ந்த திறனே இல்லாத போது, மாணவர்களால் எப்படி புலமை பெற்று நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும்? முன்பு போல பிஹெச்டி பெறுவது ஒன்றும் எளிதும் அல்ல, அதற்கென்று நுழைவு தேர்வும், ஆறு மாத கல்வி பயிற்சியும், குறைந்தது ஒரு சர்வதேச ஆய்வறிக்கை ஆகியவை 2009 இலிருந்து யிஜிசியால் கட்டாயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆய்வேட்டை எழுதி சம்பாதிக்கும் வழக்கம் இனி எடுபடாது. மேலும், ஆய்வேடுகளை மின்னணு பதிவில் ஏற்றி, அதையே யாரும் திரும்பி சமர்ப்பிக்காதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தியாகம் செய்து ஆய்வு செய்து வரும் லட்சக்கணக்கான பிஹெச்டி மாணவர்களை, தாங்கள் கண்ட ஒரு சில பதர்களின் செயல்களை வைத்து கொச்சைபடுத்த வேண்டாம்.

 • Sithu Muruganandam - chennai,இந்தியா

  எல் கே ஜி யிலிருந்தே ஆராய்ச்சி அறிவைத்தூண்டுவதற்கான பாடத்திட்டமும் படித்த பாடங்களில் சந்தேகம் என்பதே ஏதும் நிலுவையில் இருக்கக்கூடாத கற்பித்தலும், ஒவ்வொரு மாணவனுக்கும் ஆசிரியரின் தனிப்பட்ட கவனிப்பும் அதிகபட்சமான செயல்முறைக் கல்வியும், இவை எல்லாவற்றையும்விட எந்தத்துறையாக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு அதில் முழுக்க முழுக்க முழு மனதுடனான ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும்.மேலும் கற்பித்தலுக்கும் பரிசோதனைகளுக்கும் உலகத்தரத்திலான சிலபசும் சோதனைக்கூடங்களும் வேண்டும்.அறிவில் நமது மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அனால் அதைக் கூர்மைப்படுத்துவதில் மேலே சொன்ன குறைபாடுகள் உள்ளன. பெருங்குறை என்னவென்றால் கல்வியில் அரசியல்,மதம்,ஜாதி, கல்வியைத் தீர்மானிப் பவர்களின் குறுகிய சொந்த விருப்பு வெறுப்புகள் இவையெல்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். அப்போதுதான் புத்தொளியும் புதுயுகமும் பிறக்கும்.

 • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

  நாலந்தா ஞாபகத்திற்கு வந்து விட்டது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement